முரசொலி: பணிப்பெண்கள் பாதுகாப்பு ஏற்பாடுகள் வலுப்பெறட்டும்

சிங்­கப்­பூ­ரில் தனிக்குடும்­ப வாழ்வில், கண­வன் மனைவி இரு­வ­ரும் வேலைக்­குச் செல்ல வேண்டிய நிலையில் பிள்ளைகளைப் பேணி கவனித்துக்கொள்ள, சமையல் உள்ளிட்ட வீட்டு வேலைகளைக் கவனிக்க வெளி­நா­டு­களில் இருந்து பணிப்­பெண்­களை வேலை யில் அமர்த்த வேண்­டிய கட்டாயத்தில் லட்சக்­கணக்­கான குடும்­பங்­கள் இருக்­கின்­றன.

இது ஒரு­பு­றம் இருக்க, முதி­யோரைப் பராமரித்து பார்த்துக்கொள்­ள­வும் பணிப்­பெண்­கள் தேவைப்­படு­கி­றார்­கள். பணிப்பெண்­கள் இல்லை என்­றால் குடும்பம் நகராது, வீட்டில் எது­வுமே இயங்­காது என்று சொல்­லும் அள­வுக்கு-அதா­வது இந்­தக் காலத்­தில் மின்­சா­ரம் எந்த அள­வுக்கு முக்­கி­யமோ அந்த அள­வுக்குப் பணிப்பெண்­கள் இன்­றி­ய­மையா நிலை அத்­த­கைய பல குடும்­பங்­களில் இருக்­கிறது.

தெற்கு ஆசிய நாடு­களில் இருந்தும் ஆசி­யான் நாடு­களில் இருந்­தும் லட்­சக்­க­ணக்­கான பெண்­கள் இங்கு வந்து வீட்டு வேலை பார்க்­கி­றார்­கள். சிங்­கப்­பூர் வாழ்­வில் பணிப்­பெண்­கள் மிக முக்­கிய­மான ஓர் அங்­க­மா­கி­விட்ட நிலை­யில், அவர்களின் உரிமை களை நிலை­நாட்டி, நல்­வாழ்­வைப் பாது­காக்க மனித வள அமைச்சு ஏற்­கெ­னவே பல்வேறு பாது­காப்பு ஏற்­பா­டு­களை நடை­மு­றைப்­படுத்தி வரு­கிறது.

சிங்­கப்­பூ­ருக்கு முதல் முறை வரும் பெண்­களுக்கு வேலை நிய­ம­னம் தொடர்­பான நிபந்­த­னை­கள், அவர்­க­ளுக்கு உள்ள உரி­மை­கள் போன்­றவை எல்­லாம் விளக்­கப்­படுகின்­றன. சிங்­கப்­பூர் சூழ்நி­லையைப் புரிந்துகொண்டு அதற்கு ஏற்ப நடந்துகொள்ள பணிப்­பெண்­கள் தெரிந்­து­கொள்­கி­றார்­கள்.

அதே­போல, முதன்­மு­த­லாக பணிப்பெண்ணை வேலைக்­குச் சேர்க்­கும் முத­லாளிகளுக்கு உள்ள பொறுப்­பு­கள் பற்றி அவர்­க­ளுக்கு விளக்­கம் அளிக்­கப்­ப­டு­கிறது. பணிப்­பெண்­க­ளுக்கு ஏதே­னும் உதவி, ஆத­ரவு தேவையா என்­ப­தெல்­லாம் அவர்­க­ளைத் தொடர்­பு­கொண்டு விசா­ரித்து தெரிந்துகொள்­ளப்­பட்டு ஏற்­பு­டைய நட­வ­டிக்­கை­கள் எடுக்­கப்­ப­டுகின்றன. காலக்கிரம முறைப்­படி அவர்களுக்கு மருத்­துவப் பரிசோ­தனைகள் நடத்­தப்­ப­டு­கின்­றன.

என்­றா­லும் இவை எல்­லாம் போதாது என்றே நினைக்­கத்தோன்­று­ம் அளவுக்கு அண்மைய காலத்தில் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.

இங்கு பணிப்­பெண்­கள் தவ­றாக நடத்­தப்­பட்டு நீதி­மன்­றங்­களில் முத­லாளிகள் தண்­டிக்­கப்­படும் சம்­ப­வங்­கள் அதி­க­மா­கி­விட்­டன.

அது­வும் சில நாட்­க­ளுக்கு முன் நீதி­மன்­றத்­தில் விசா­ர­ணைக்கு வந்த ஒரு வழக்கு, ‘பயங்­க­ரம்’ என்று நீதி­பதி சுட்­டிக்­காட்­டும் அள­வுக்கு இருந்­தது.

முத­லா­ளி­யான ஒரு பெண்­மணி, மியன்­மார் நாட்டைச் சேர்ந்த பியாங் கெய் டோன் என்ற பணிப்­பெண்ணைப் பல நாட்­கள் பட்­டினி போட்டு கொடுமைப்படுத்தினார், கடை­சி­யில் பணிப்பெண் உயிரிழக்க நேரிட்டது.

முத­லா­ளி­க­ளின் கொடுமை கார­ண­மாக பணிப்­பெண்கள் மரணமடைந்த சம்­ப­வங்­கள் முன்பும் நிகழ்ந்துள்ளன. என்­றா­லும்கூட இந்­த அண்மைய சம்­ப­வம் பல கேள்­வி­களை எழுப்­பி­விட்­டுள்­ளது.

பணிப்பெண்­க­ளின் பாது­காப்பை இன்­னும் எப்படி மேம்­ப­டுத்­த­லாம் என்­ப­தில் கவ­னம் செலுத்­த­வேண்டிய அவ­சி­யத்தை, கட்­டா­யத்தை அந்தச் சம்­ப­வம் உரு­வாக்கியுள்ளது. பணிப்பெண்ணின் உரிமைகளைப் பாதுகாத்து அவர்களின் நல்வாழ்வை உறுதிப்படுத்த நடப்பில் இருந்துவரும் விதி­மு­றை­கள் கடைப்பிடிக்கப் படுவதில் குறை­பா­டு­கள் உள்­ளதோ என்­ற சந்தேகத் தையும் அது கிளப்பிவிட்டுள்ளது.

மியன்­மார் பணிப்­பெண் விவ­கா­ரத்தைப் பார்க்கை யில், அந்­தப் பெண் மர­ண­ம­டைந்­த­தற்கு இரண்டு மாதங்­க­ளுக்கு முன்­பு­கூட அவ­ரைப் பரி­சோ­தித்த ஒரு மருத்­து­வர் அதி­கா­ரி­க­ளி­டம் எதை­யுமே தெரியப்­படுத்­த­வில்லை. பணப்­பெண்­ணின் கால்­கள் வீங்கி இருக்­கின்றன, ஆகை­யால் மேலும் பரி­சோ­த­னை­களை நடத்த வேண்­டும் என்று மருத்­து­வர் பரிந்­து­ரைத்­தும் அதை அந்தப் பெண்ணின் முத­லாளி கண்­டு­கொள்­ளவே இல்லை. பணிப்பெண்ணின் வேலை நிய­மன முக­வரோ இரண்டு முறை அப் பெண்ணிடம் பே­சிய போதி­லும் எதைப் பற்­றி­யும் புகாரோ தகவலோ தெரி­விக்­க­வில்லை.

இதை எல்­லாம் கருத்­தில்கொண்­டு­தான் மனித வள அமைச்­சர் ஜோச­ஃபின் டியோ சில நாட்­களுக்கு­ முன் சில அறி­விப்­பு­களை விடுத்­தார்.

அதா­வது, முத­லா­ளி­க­ளின் கொடு­மை­க­ளுக்கு எதி­ரான பாது­காப்பு ஏற்­பா­டு­கள்; உரிய தகவல்களை உரிய இடங்­களில் மருத்­து­வர்­கள் தெரி­விக்க வேண்­டிய ஏற்­பாட்டு முறை; சமூகம், பங்­கா­ளித்­துவ அமைப்­பு­க­ளின் ஈடு­பாடு எல்­லாம் மறு­ப­ரி­சீ­ல­னைக்கு உட்­ப­டுத்­தப்­படும் என்று அமைச்­சர் தெரி­வித்துள்ளார்.

கொடுமைகளுக்குப் பணிப்பெண்கள் ஆளாகும் சம்பவங்கள் அதிகரிக்கும் நிலையில், அமைச்­ச­ரின் இந்த அறி­விப்பு வர­வேற்­க­த்­தக்க ஒன்று என்­பது சொல்­லித் தெரி­ய­வேண்டியதில்லை.

வெளி­நாட்­டுப் பணிப்­பெண்­களு­டன் சேர்ந்­து­செயல்­படும் அரசு சாரா அமை­ப்புக­ளின் கருத்­து­களை அத்­த­கைய மறு­ப­ரி­சீ­ல­னை­களில் கவ­னத்­தில் எடுத்­துக்கொள்­வது பலன் அளிக்­கும்.

பணிப்­பெண்ணைப் பரி­சோ­திக்­கும் மருத்­து­வர் ஏதே­னும் சந்­தே­கம் ஏற்­பட்­டால் அது­ பற்றி அந்­தப் பெண்­ணின் முத­லா­ளிக்­குத் தெரி­யா­ம­லேயே அதி­கா­ரி­க­ளி­டம் தெரி­யப்­ப­டுத்த வேண்­டும் என்ற அவசியத்தை ஏற்­ப­டுத்­து­வது;

பணிப்­பெண் முத­லா­ளி­யின் வீட்­டி­லேயே தங்கி இருக்­கா­மல் அவரை வெளியே வசிக்க அனு­ம­திப்­பது; பணிப்­பெண்ணை வேறு ஒரு முத­லாளி வேலை­யில் அமர்த்­திக்­கொள்­வது தொடர்­பான விதி­களில் மாற்­றங்­கள் செய்­வது போன்­ற­வை­யும் அர­சாங்க மறு­பரி­சீ­ல­னை­களில் இடம்பெற­த்தக்கவை.

கொடு­மை­களில் இருந்து பணிப்­பெண்­க­ளைக் காப்­பாற்ற இன்­னும் கடு­மை­யான நிபந்­த­னை­கள், பாது­காப்பு ஏற்­பா­டு­கள் நடப்­புக்கு வரும் பட்­சத்­தில் அது முத­லா­ளி­க­ளுக்கு அதிக செல­வு­ வைக்­கும் ஒன்­றா­கத்­தான் இருக்­கும்.

இருந்­தா­லும் தங்கள் நாட்டில் வசதியாக வாழ இயலாமல், சிங்கப்பூருக்கு வந்து உழைத்து பொருள் ஈட்டி தங்கள் குடும்பத்தாரை வாழவைப்பதுடன் தாங்களும் சிறப்பாக வாழவேண்டும் என்ற அவசியத்தில் பல்­வேறு எதிர்­பார்ப்­பு­க­ளு­டன், சுமை­களுடன், கனவுகளுடன் நம்மை நம்பி வரும் பணிப்­பெண்­களின் உயிர், பணத்தைவிட முக்­கி­யமானது இல்­லையா?

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!