வேலை இழந்தோருக்கு கைகொடுத்து மேம்படுத்தும் நிதி ஆதரவுத் திட்டம்

பொருளியல் படு வேகத்தில் உருமாறி வருகிறது. சொல்லப்போனால் அதன் எல்லா துறைகளுமே முன்பு இருந்ததைப் போல் இப்போது இல்லை. அவை செயல்படும் முறைகள் தலைகீழ்மாற்றம் காண்கின்றன. போகப்போக இந்த நிலை நீடிக்கும், வேகமடையும் என்பது தவிர்க்க இயலாததாகி வருகிறது.

கொவிட்-19 கிருமி காரணமாக உலகம் முடங்கி அதன் விளைவாக பொருளியலில் மேலும் ஒரு புதிய பரிணாமம் தலைகாட்டியது. பல வேலைகளின் எதிர்காலத்தை அது கேள்விக்குறியாக்கிவிட்டது.

ஊழியர்கள் இப்போதைய தேர்ச்சியுடன் தொடர்ந்து ஊழியர் அணியில் இடம்பெற்று இருக்க இயலாது என்ற நிலை கிட்டத்தட்ட பொருளியலின் எல்லா துறைகளிலுமே நிலவுகிறது.

மின்னிலக்கம், இயந்திர மனிதத்தொழில்நுட்பம் என்று இன்னும் பலவும் வேகமாகத் தலை எடுத்து பரவத் தொடங்கிவிட்டன.

இந்தச் சூழலில் ஆயுள் முழுவதும் புதுப்புது தேர்ச்சிகளை, திறன்களை, அதி நவீனங்களைக் கற்றுக்கொண்டு, மின்னிலக்கமயமாகி பொருளியலின் உருமாற்றத்திற்கு ஏற்றபடி தங்களை வாழ்நாள் முழுவதும் மேம்படுத்திக்கொண்டு வரவேண்டிய கட்டாயம் ஊழியருக்கு ஏற்பட்டுவிட்டது.

இது தவிர்க்க இயலாததாகவும் ஆகிவிட்டது. பொருளியலுக்குப் பொருத்தமாக இல்லை என்றால் அத்தகைய ஊழியர்கள் வேலைகளை இழந்துவிடக்கூடிய நிலை ஏற்படுகிறது.

இந்தச் சூழலுக்கு ஆளாகி ஊழியர்கள் வேலையை இழப்பதால் ஏற்படக் கூடிய வேலையின்மைப் பிரச்சினையைச் சமாளிக்க தான் கைக்கொண்டு வரும் அணுகுமுறையைச் சிங்கப்பூர் மிக நேர்த்தியாக, விவேகமாக, செம்மையாக திருத்தி அமைத்து வருகிறது.

இந்த அணுகுமுறையை வலுப்படுத்தும் விதமாக பிரதமர் திரு லீ சியன் லூங் தமது தேசிய தினப் பேரணி உரையில் முக்கியமான ஓர் அறிவிப்பை விடுத்து அந்த அணுகுமுறையை மறுஉறுதிப்படுத்தினார்.

அதாவது, ஆட்குறைப்புக்கு ஆளாகக்கூடிய ஊழியர்கள், தாங்கள் பார்த்து வந்த வேலையைவிட இன்னும் சிறந்த வேலையைப் பெறும் வகையில், தங்கள் தேர்ச்சிகளை மேம்படுத்திக்கொள்ளும்போது அவர்கள் தங்களின் அன்றாட தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள ஏதுவாக அவர்களுக்கு நிதி உதவி அளிக்கப்படும் என்று பிரதமர் உறுதி அளித்தார்.

ஊழியர்கள் பயிற்சியைப் பெற்று ஒரு வேலையில் இருந்து வேறு ஒரு வேலைக்கு மாறிக்கொள்வதற்கு உதவ இப்போது பல செயல்திட்டங்கள் இருக்கின்றன.

நடைமுறைக்கு வர இருக்கின்ற புதிய திட்டம் மூலம், ஊழியர்கள் புதிய தேர்ச்சிகளைப் பெறும் காலத்தில் அவரின் குடும்பத்திற்கு நிதி ஆதரவு கிடைக்கிறது என்றால், விருப்பமில்லாத ஏதோவொரு வேலையில் ஏனோதானோ என்று சேரவேண்டிய கட்டாயம் அவருக்கு ஏற்படாது.

பிரதமர் அறிவித்த நிதி ஆதரவுத் திட்டத்தை எப்படி தீட்டலாம், யார் யார் தகுதி பெறுவார்கள், எந்த அளவுக்கு நிதி ஆதரவு கிடைக்கும் என்பவை போன்ற பலவும் இப்போது உருவாக்கப்பட்டு வருகின்றன.

இதன் தொடர்பில் பலவற்றையும் கருத்தில்கொள்ள வேண்டி இருக்கிறது.

இந்தத் திட்டத்தின் மூலம் கிடைக்கக்கூடிய நிதி ஆதரவு நியாயமாக இருக்கவேண்டும்.

அதே வேளையில் மொத்த செலவையும் கவனிக்க வேண்டிய நிலை இருக்கிறது. செலவு அதிகரித்தால் கடைசியில் வரி செலுத்துவோர்தான் அதை ஈடுசெய்ய வேண்டி இருக்கும். ஆகையால் இரண்டுக்கும் இடையில் சமநிலை காணப்பட வேண்டும்.

மனிதவள அமைச்சர் டான் சீ லெங், சில நாட்களுக்கு முன் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தித்தாளுக்கு ஒரு பேட்டி அளித்தார்.

இந்தத் திட்டத்தின் அடித்தளமாக இருக்கக்கூடிய பரந்த அளவிலான கோட்பாடுகளை அவர் விளக்கினார்.

அதாவது பயிற்சி, வாழ்க்கைத்தொழில் ஆலோசனை, வழிகாட்டல் ஆகியவற்றுடன் இந்த ஆதரவுத் திட்டத்தின் பெரும் பகுதி பின்னிப் பிணைந்ததாக இருக்கும் என்று அவர் கோடிகாட்டினார்.

பொருளியல் புதிய பரிணாமத்தைப் பெறுவது மட்டுமின்றி அதன் தொழில்துறைகளும் உருமாறும் வேளையில் வேலையின்மை தொடர்பில் பரந்த அளவிலான கொள்கைகளை அரசாங்கம் நடைமுறைப்படுத்த வேண்டிய தேவை இருக்கிறது.

அதுவும் கொவிட்-19 படுத்திய பாடு, பொருள் சேவை வழங்கீட்டுக் கட்டமைப்பு எதிர்நோக்கும் இடையூறுகள், புவிசார் அரசியல் பதற்றங்கள், மூப்படையும் சமூகம் ஆகியவை காரணமாக இது இன்னும் அவசியமாகிறது.

அதே வேளையில், புதிய ஆதரவுத் திட்டம், அரசாங்கம் இப்படி நிதி ஆதரவு அளிப்பதால் அதுவே போதும், வேலை தேவையில்லை என்ற எண்ணத்தை யாரிடத்திலும் ஏற்படுத்திவிடவும் கூடாது.

அரசு நடைமுறைப்படுத்த இருக்கும் நிதி ஆதரவுத் திட்டம் வேலையின்மையை ஊக்குவிக்கும் வடிவிலான ஒரு திட்டமாக இருக்காது என்பது திண்ணம்.

புதிய திட்டம் தானாகவே வேலையை இழக்காத ஊழியர்கள் சுய மரியாதையை இழக்காமல் முன்னேற கைகொடுக்கும்.

மறுபயிற்சி, தேர்ச்சி மேம்பாடு மூலம் புதிய வேலையைப் பெறலாம்; அதிக தேவை இருக்கின்ற வேறு தொழில்துறைக்குக்கூட மாறிக்கொள்ளலாம் என்று விரும்புகின்ற, திட்டவட்டமாக உறுதியுடன் இருக்கின்ற ஊழியர்கள் கௌரவத்துடன் வாழ்க்கைத்தொழிலில் மேம்பாடு காண உதவும் திட்டம் இது.

தங்கள் வேலைக்கும் வாழ்க்கைத்தொழிலுக்கும் தாங்களே பொறுப்பு; தங்களுக்குக் கிடைக்கும் தற்காலிக ஆதரவு, தங்களிடத்தில் எந்த ஒரு ஊக்கக்குறைவையும் ஏற்படுத்திவிடக்கூடாது என்பதை ஊழியர்கள் அங்கீகரிக்க வேண்டும்.

இந்த வகையில்தான் சிங்கப்பூரின் தொழிலாளர் சந்தை கொள்கை இருக்கிறது. புதிய நிதி ஆதரவுத் திட்டம் இதை இன்னும் வலுப்படுத்தும் நிலையில் இருக்க வேண்டும். இதை உறுதிப்படுத்தும் வகையில் பலவும் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு, கவனமாக ஆராயப்பட்டு புதிய ஆதரவுத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்பதே எதிர்பார்ப்பு.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!