நாகை-காங்கேசன்துறை கப்பல்: உறவுக்கு, செழிப்புக்கு உதவட்டும்

தெற்கு ஆசிய நாடுகளான இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் பயணிகள் கப்பல் போக்குவரத்து 40 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு வழியாகத் தொடங்கி இருக்கிறது.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி காணொளி வழி அதை அக்டோபர் 14ஆம் தேதி சனிக்கிழமை தொடங்கி வைத்தார்.

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் பொருளியல் செழிப்பிற்கும் இரு நாட்டு மக்களுக்கு இடையில் உறவுகள் வலுவடைவதற்கும் இலங்கை-இந்தியா பாரம்பரிய உறவு மேலும் உறுதியாவதற்கும் அந்தச் சேவை உதவும் என்று இந்தியப் பிரதமரும் இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கேயும் உறுதிபட தெரிவித்து இருக்கிறார்கள்.

உலகின் பல்வேறு வகை போக்குவரத்துகளில் கப்பல் போக்குவரத்து ஒரு காலத்தில் மிக முக்கியமானதாக இருந்தது. குறிப்பாக, அந்தக் கால தமிழ் மன்னர்கள் கடல் போக்குவரத்தில் கொடி கட்டிப் பறந்தவர்கள். ஆழ்கடலை ஆண்டவர்கள் என்றுகூட வரலாறு தெரிவிக்கிறது.

குறிப்பாக, சோழர்கள் ஆட்சியின்போது சோழர்களின் சிறிய கடற்படை, கடல்துறை, அரசதந்திர படையாக மேம்பட்டு ஆசியா முழுவதிலும் ஆதிக்கம் செலுத்தியதுண்டு.

அரேபியா முதல் சீனா வரை பரந்துவிரிந்த கடல் பகுதியில் தமிழர்கள் கடல் வழி வர்த்தகத்தில் செழித்தனர் என்பதற்கு வரலாற்று ஆதாரங்கள் ஏராளம்.

சிங்கப்பூருக்கும் சென்னைக்கும் இடையில் நடந்து வந்த பயணிகள் கப்பல் போக்குவரத்து கடந்த 1980களில் முடிவுக்கு வந்தது.

தமிழ்நாட்டிற்கும் இலங்கைக்கும் இடையில் நடந்து வந்த பயணிகள் கப்பல் போக்குவரத்து இலங்கையில் உள்நாட்டுப் போர் காரணமாக தடைப்பட்டது.

அதற்கு 40 ஆண்டுகள் கழித்து இப்போது பயணிகள் கப்பல் போக்குவரத்து வெற்றிகரமான முறையில் தொடங்கி இருக்கிறது.

இந்தியாவின் கேரள மாநிலத்தில் தயாரிக்கப்பட்ட ‘செரியபாணி’ என்ற குளுகுளு வசதியுடன்கூடிய கப்பல் சேவையில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளது.

அதில் 150 பேர் பயணம் செய்யலாம். 14 ஊழியர்கள் இருப்பார்கள். பயணிகள் 50 கிலோ எடையைத் தீர்வையின்றி எடுத்துச் செல்லலாம்.

நாகப்பட்டினத்தில் இருந்து நாள்தோறும் காலை 7 மணிக்குப் புறப்பட்டு சுமார் 4 மணி நேரத்தில் 60 கடல் மைல் தொலைவைக் கடந்து அந்தக் கப்பல் இலங்கையின் வடகோடியில் அமைந்துள்ள காங்சேகன்துறை துறைமுகத்தை அடையும்.

பிறகு, அங்கிருந்து பிற்பகலில் புறப்பட்டு மாலை 5.30 மணி அளவில் நாகை வந்து சேரும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. கட்டணம் சுமார் 7,800 ரூபாய்.

இலங்கை-இந்தியா இடையே பயணிகள் கப்பல் சேவையை மீண்டும் தொடங்க வேண்டும் என்று பல காலமாகவே குரல் கொடுக்கப்பட்டு வந்தது.

இருந்தாலும் விடுதலைப் புலிகள் போராட்டம் உள்ளிட்ட பல காரணங்களால் அந்தத் திட்டம் இதுநாள் வரை கை கூடி வரவில்லை.

போர் ஓய்ந்ததை அடுத்து பயணிகள் கப்பல் போக்குவரத்தை ஏற்படுத்துவது உள்ளிட்ட பல அம்சங்களையும் உள்ளடக்கிய ஒரு புரிந்துணர்வு குறிப்பில் இரு நாடுகளும் 2011ல் கையெழுத்திட்டன.

இலங்கையில் பெரிய அளவில் பொருளியல் பிரச்சினை ஏற்பட்டு ஆட்சி மாறியது. அதிபர் மாறினார். பொருளியல் சிரமங்களில் இருந்து வெளிவர இலங்கைக்கு இந்தியா அதிக உதவிகளை செய்தது.

இலங்கை-இந்தியா இடையில் உறவு வலுவடையத் தொடங்கியது. இரு நாடுகளுக்கும் இடையில் பயணிகள் கப்பல் போக்குவரத்தை மீண்டும் ஏற்படுத்த இரு நாடுகளும் அதிக ஆர்வம் காட்டின.

இரு நாட்டுப் புரிந்துணர்வு குறிப்பின் ஒரு பகுதியாக அமைக்கப்பட்ட கூட்டுக் குழு இந்த ஆண்டு ஜூலை 14ஆம் தேதி மெய்நிகர் ரீதியில் சந்தித்துப் பேசியது.

அத்தகைய ஒரு போக்குவரத்து இரு நாடுகளுக்கும் பல வழிகளில் நன்மை பயக்கும் என்று முடிவு செய்யப்பட்டு விரைவில் கப்பல் போக்குவரத்தைத் தொடங்குவது என்று இரு தரப்பும் இறுதி முடிவை எட்டின.

இதற்கிடையே, நாகப்பட்டினம் துறைமுகம் சுமார் ரூ.3 கோடி செலவில் விமான நிலையம் போல் சுங்கச்சாவடி, விசா கூடம் உள்ளிட்ட வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டது.

நாகை-காங்சேகன்துறை பயணிகள் கப்பல் போக்குவரத்து 2023 அக்டோபர் 10ஆம் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது.

சேவையைத் தொடங்குவதற்கான நாள் அக்டோபர் 12 என்று மாற்றப்பட்டு பிறகு அக்டோபர் 14 என்று முடிவு செய்யப்பட்டு வெற்றிகரமான முறையில் சனிக்கிழமை சேவை தொடங்கியது.

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் 1900களில் பயணிகள் கப்பல் போக்குவரத்து நடந்து வந்தது.

சென்னைக்கும் கொழும்புக்கும் இடையில் தூத்துக்குடி துறைமுகம் வழியாக இந்தோ-சிலோன் எக்ஸ்பிரஸ் என்ற கப்பல் இயங்கி வந்தது.

ஆனால், இலங்கை உள்நாட்டுப் போர் காரணமாக 1982ல் அந்தச் சேவை முடித்துக்கொள்ளப்பட்டது.

2011ல் புரிந்துணர்வுக் குறிப்பு ஏற்பட்டதை அடுத்து தூத்துக்குடி-கொழும்பு, ராமேசுவரம்-தலைமன்னார் ஆகிய இரண்டு சேவைகள் பற்றி விவாதிக்கப்பட்டன.

இலங்கை உள்நாட்டுப் போருக்கு முன்னதாக தமிழ்நாட்டின் ராமேசுவரத்துக்கு அருகே உள்ள தனுஷ்கோடிக்கும் தலைமன்னாருக்கும் இடையில் வெற்றிகரமான முறையில் நிலக்கரியில் இயங்கிய உல்லாசப் பயணக் கப்பல் சேவை நடந்து வந்தது.

சென்னையில் இருந்து ரயில் மூலம் ராமேசுவரம் சென்று அங்கிருந்து அந்தக் கப்பலில் இலங்கைக்கு இந்தியர்களும் மற்ற பயணிகளும் சென்று வந்தனர்.

தனுஷ்கோடியில் இருந்து தலைமன்னார் செல்ல இரண்டு மணி நேரம் பிடித்தது.

இப்போது புதிய சேவை தொடங்கப்பட்டு இருப்பதையடுத்து அந்தக் காலம் திரும்பி இருக்கிறது. புதிய சேவை காரணமாக இரு நாடுகளுக்கும் இடையில் பயணிகள் போக்குவரத்து அதிகரிக்கும்.

பொருளியல், பொழுதுபோக்கு, சுற்றுலா, இருநாட்டு மக்களுக்கும் இடையிலான தொடர்பு, கலாசாரம் ஆகிய துறைகள் குறிப்பிடத்தக்க அளவில் மேம்பாடு காணும் என்று எதிர்பார்க்கலாம்.

இந்தியா-இலங்கை இரு நாடுகளுக்கும் இடைப்பட்ட போக்குவரத்துத் தொடர்புகளில் இந்தக் கப்பல் சேவை மூலம் புதிய ஒரு யுகம் தொடங்கி இருப்பதாக இந்தியப் பிரதமர் மோடி அறிவித்து இருக்கிறார். அதையே இலங்கை அதிபர் ரணிலும் எதிரொலித்து இருக்கிறார்.

நாகை-காங்கேசன்துறை புதிய பயணிகள் கப்பல் சேவை பெரும் வெற்றி பெறும்; இரு நாடுகளுக்கு இடையில் மட்டுமன்றி, உலக அளவில் அந்தச் சேவை ஆக்ககரமாகத் தொடர்ந்து திகழ்ந்து வரும் என்று நம்புவோம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!