அனைவருக்கும் பயன்தரும், பரந்த நோக்குடன் கூடிய பட்ஜெட் 2024

விக்ரம் கன்னா

இணை ஆசிரியர், ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

இவ்வாண்டிற்கான வரவுசெலவுத் திட்டத்தின் ‘நமது எதிர்காலத்தை ஒன்றிணைந்து உருவாக்குதல்’ எனும் கருப்பொருளே, அத்திட்டத்தில் எத்தகைய அறிவிப்புகள் இடம்பெறும் என்பதை உணர்த்துவதாக அமைந்துள்ளது.

அனைவரையும் உள்ளடக்குதல் என்பதே அது உரைக்கும் முதல் செய்தி. எதிர்காலம் ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டுமே உரியதாக இருக்காது. ஊழியர்கள், குறிப்பாக குறைந்த வருமானப் பிரிவினர், வாழ்க்கைத்தொழிலின் இடைக்காலத்தில் இருப்போர், மாணவர்கள், மூத்த குடிமக்கள், உடற்குறையுள்ளோர் என, அதன் பலன்கள் அனைவராலும் பகிரப்பட வேண்டும்.

இரண்டாவதாக, எல்லாரும் இணைந்து செயல்பட்டே எதிர்காலத்தை உருவாக்க வேண்டும். ஒவ்வொரு பிரிவினருக்கும் அதில் பங்குண்டு. மாறிவரும் உலகிற்கேற்ப தகவமைத்துக்கொள்ள வேண்டியதும் துணிச்சலான முடிவுகளை எடுக்க வேண்டியதும் அவசியம்.

நாடாளுமன்றத்தில் வரவுசெலவுத் திட்ட அறிக்கையைத் தாக்கல் செய்து பேசிய துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங், அரசாங்கத்தின் ‘முன்னேறும் சிங்கப்பூர்’ திட்டத்தின் முதல் தவணையே இத்திட்டம் என்று குறிப்பிட்டார்.

பரந்த கண்ணோட்டத்துடன் கூடிய வரவுசெலவுத் திட்டம் 2024, ஒவ்வொருவருக்கும் ஏதேனும் ஒரு வகையில் ஆதரவு வழங்குகிறது: $1.9 பில்லியன் உத்தரவாதத் தொகுப்புத் திட்டத்தின்மூலம் குறைந்த வருமானக் குடும்பங்களுக்குக் கூடுதல் ஆதரவு, அனைவருக்கும் மெடிசேவ் நிரப்புதொகை; 1973 அல்லது அதற்குப்பின் பிறந்த சிங்கப்பூரர்களின் ஓய்வுக்காலச் சேமிப்பு, சுகாதாரப் பராமரிப்பிற்காக $8.2 பில்லியன் ‘மாஜுலா தொகுப்புத் திட்டம்’; நிறுவனங்களுக்கான $1.3 பில்லியன் ஆதரவுத் திட்டம்; செலவுகளைக் குறைக்கவும் மானியத்துடன் கூடிய கடன் பெறவும் நிறுவனங்களுக்கு உதவும் வகையில் தொழில் நிறுவன நிதியாதரவுத் திட்டம்.

வாழ்க்கைத்தொழிலின் இடைக்காலத்தில் இருக்கும், 40 மற்றும் அதற்குமேல் வயதுடைய சிங்கப்பூரர்கள் அனைவருக்கும் $4,000 ஸ்கில்ஸ்ஃபியூச்சர் பயிற்சி உதவி நிதி வழங்கப்படவுள்ளது. வழக்கமான $500 நிரப்புதொகையைவிட இது ஏழு மடங்கு அதிகம்.

அவ்வயதுப் பிரிவு ஊழியர்கள் முழுநேரப் படிப்பில் சேர்ந்தால், மாதம் $3,000 வரையிலும் 24 மாதங்களுக்குச் சிறப்புப் பயிற்சிப் படி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சம்பள இடைவெளியைக் குறைக்கும் வகையில், குறைந்த வருமான ஊழியர்களுக்கான வேலைநலன் சம்பள ஆதரவுத் திட்டம் 2025 ஜனவரி முதல் மேம்படுத்தப்படும். தொழில்நுட்பக் கல்விக் கழகப் பட்டதாரிகள் தங்கள் திறன்களை மேம்படுத்திக்கொண்டு, கூடுதல் வருமானம் ஈட்ட உதவும் வகையில் தொழில்நுட்பக் கல்விக் கழக முன்னேற்ற விருது அறிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமின்றி வேலையில்லாமல் இருப்போருக்கும் தற்காலிக நிதியாதரவு வழங்கப்படவுள்ளது.

அரசாங்க ஆதரவுடன் நடத்தப்படும் பாலர் பள்ளிகளில் குழந்தைப் பராமரிப்பிற்கான மாதாந்தரக் கட்டணம் குறைக்கப்படவுள்ளது. சிறப்புத் தேவையுடைய குழந்தைகளுக்கும் உடற்குறையுள்ள பெரியவர்களுக்கும் கூடுதல் ஆதரவு கிடைக்கும்.

மூத்தோர் தங்கள் ஓய்வுக்காலத்திற்கு அதிகம் சேமிக்க உதவும் வகையிலும் பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அவர்கள் பிறரை அதிகம் சார்ந்திராமல் தற்சார்புடனும் சமூகத்துடன் இணைந்தும் துடிப்புடன் மூப்படைய உதவும் வகையில் புதிய ‘ஏஜ் வெல் எஸ்ஜி’ திட்டம் அறிமுகம் காண்கிறது.

வரவுசெலவுத் திட்ட அறிக்கையில் இப்படிப் பல திட்டங்கள் இடம்பெற்றிருந்தாலும் சில கடினமான கேள்விகளும் எழாமல் இல்லை.

எடுத்துக்காட்டாக, ஸ்கில்ஸ்ஃபியூச்சர் திட்டம். தொழில்நுட்ப மாற்றங்களால் ஏற்படும் வாழ்க்கைத்தொழில் இடையூறால் எளிதில் பாதிக்கப்பட வாய்ப்புள்ள 40 வயதிற்கு மேற்பட்ட ஊழியர்கள்மீது அதிகம் கவனம் செலுத்தினாலும், எதில் மறுபயிற்சி பெறுவது என்பதில் அவர்கள் சவாலை எதிர்நோக்கலாம். தம்மை அதிக வேலைத்தகுதி உள்ளவர்களாக ஆக்கிக்கொள்வதில் சரியான தெரிவுகளை எடுக்க முடியாத நிலையில் அவர்கள் இருக்கலாம்.

ஊழியரணியை உருமாற்றுவதில் நிறுவனங்கள் பல்லாண்டுகளுக்குச் சவாலை எதிர்நோக்கக்கூடும். இந்நிலையில், தொழில் நிறுவனங்களுக்கான ஸ்கில்ஸ்ஃபியூச்சர் பயிற்சி உதவி நிதி 2025 ஜூன் வரைக்குமே நீட்டிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் பொருளியலுக்கு ஏற்றுமதி மிக முக்கியமானதாகத் திகழ்ந்து வருகிறது. வரும் ஆண்டுகளில் சிங்கப்பூரின் ஏற்றுமதி பல ஏற்ற இறக்கங்களைச் சந்திக்க நேரிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், கேபிஎம்ஜி ஆலோசனை நிறுவனமும் சிங்கப்பூர் தொழில் கூட்டமைப்பும் பரிந்துரைத்துள்ளதுபோல், அரசாங்க ஆதரவுடன் கூடிய ஏற்றுமதி - இறக்குமதி வங்கி சிங்கப்பூரிலும் அமைக்கப்பட வேண்டும்.

இப்படி ஒரு சில அம்சங்கள் விட்டுப்போயிருந்தாலும், வரவுசெலவுத் திட்டம் 2024 விரிவான திட்டமாகவே அமைந்துள்ளது. ஆயினும், அது எவ்வளவு செயல்திறன்மிக்கதாக விளங்கும் என்பது, அதில் அறிவிக்கப்பட்ட திட்டங்களையும் சலுகைகளையும் எவ்வாறு எடுத்துக்கொண்டு, பயன்பெறப் போகிறோம் என்பதில்தான் உள்ளது.

நிதியமைச்சருமான திரு வோங் சொன்னதுபோல், “இது, அரசாங்கம் அதிகமாகச் செய்கிறது என்பதைப் பற்றியது மட்டுமன்று. நிறுவனங்களும், சமூகக் குழுக்களும், தனிமனிதர்களும், குடும்பங்களும் தங்கள் பங்கை ஆற்ற வேண்டியது அவசியம்.”

சுருக்கமாகச் சொன்னால், வரவுசெலவுத் திட்டம் 2024 ஒரு பெரிய தன்னெடுப்பு விருந்து. அத்திட்டம் மனநிறைவு தருவதாக உள்ளதா இல்லையா என்பது, அதன் பயனீட்டாளர்களான சிங்கப்பூர் மக்களும் நிறுவனங்களும் அதனை எப்படிப் பயன்படுத்திக்கொள்ளப் போகின்றனர் என்பதைப் பொறுத்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!