நிச்சயமற்ற எதிர்காலத்தைக் கடந்து செல்ல தெளிவான பாதை

எதிர்காலம் நிச்சயமற்றதாக இருக்கும்போதிலும், தேசிய அளவில் தெளிவான பாதை நடைமுறையில் உள்ளது என்பதை சிங்கப்பூரர்கள் உணர வேண்டியது மிகவும் முக்கியம் என்று பிரதமர் லீ சியன் லூங் தமது புத்தாண்டுச் செய்தியில் கோடிட்டுக் காட்டினார்.

அனைத்துலகச் சூழல்களால் நிச்சயமற்ற எதிர்காலம் ஏற்பட்டுள்ளதைப் பிரதமர் லீ சுட்டினார். இதற்கு உதாரணமாக, உக்ரேன்-ரஷ்யா போர், இஸ்‌ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதல் ஆகியவை உள்ளன.

உக்ரேன்-ரஷ்யா போர் எப்போது முடியும், எப்படி முடியும் என்பது குறித்து யாராலும் கணிக்க முடியவில்லை.

ஹமாஸ் நடத்திய தாக்குதலுக்குப் பதிலடி தரும் வகையில் காஸாவை இஸ்‌ரேலிய ராணுவம் புரட்டிப்போட்டுள்ளது. இதன் விளைவாக அங்குள்ள பொதுமக்கள் கடும் துயர், அவதிக்கு ஆளாகியுள்ளனர். பெண்கள், குழந்தை உட்பட அப்பாவி மக்களுக்கு ஏற்பட்டுள்ள அவலநிலையைக் கண்டு உலகெங்கும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.

இது ஒருபுறம் இருக்க, சிங்கப்பூருக்கு மிக அருகில் இருக்கும் தென்சீனக் கடலிலும் சர்ச்சை, பிரச்சினைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. தென்சீனக் கடலில் உள்ள குறிப்பிட்ட சில கடற்பகுதிகள், தீவுகளைச் சில நாடுகள் உரிமை கொண்டாடுகின்றன. இதனால் சம்பந்தப்பட்ட நாடுகளுக்கிடையிலான உறவுகள் சற்று கசந்துள்ளன.

அதுமட்டுமல்லாது, சீனா, தைவான் ஆகிய நாடுகளுக்கு இடையிலான கருத்து மோதல், இறையாண்மை தொடர்பான சர்ச்சை பதற்றமான சூழலை ஏற்படுத்தியுள்ளது.

இந்தப் பிரச்சினைகள் எல்லாம் போதாது என்று இன்னோர் அபாயம் அனைத்து நாடுகளுக்கும் அச்சுறுத்தலாக இருந்து மிரட்டல் விடுக்கிறது. அதுதான் பருவநிலை மாற்றம். பருவநிலை மாற்றத்தால் வெப்பநிலை அதிகரிப்பு, வெள்ளம் போன்றவற்றால் உலக நாடுகள் பாதிப்படைந்து வருகின்றன. தகுந்த நடவடிக்கைகளை எடுக்காவிடில் நிலைமை மோசமடையும் என்று அடித்துக்கூறப்படுகிறது.

சிங்கப்பூரர்களால் இந்தப் பிரச்சினைகள் தலைதூக்காவிடிலும் அவை ஏற்படுத்தும் பாதிப்புகளை எதிர்நோக்க என்ன நாம் செய்ய வேண்டும்?

ஒருவேளை உலகச் சூழல் நிலையானதாக இருந்தாலும், சிங்கப்பூரின் வளர்ச்சி, பாதுகாப்பு, நலன் ஆகியவற்றை சிங்கப்பூரர்களாகிய நாம்தான் சுயமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும். இவற்றுக்கு வேறு யாருடைய உதவியையும் எதிர்பார்க்க முடியாது.

நிலையான உலகிலேயே இப்படி இருந்தால், நிச்சயமற்ற சூழலில் சொல்லவா வேண்டும்?

இதுவே வாழ்வின் நிதர்சனம்.

இந்த உண்மை சிங்கப்பூரர்களுக்குத் தெரியும். இந்த புரிதலுடன்தான் சிங்கப்பூர் தனிநாடானதிலிருந்து செயல்பட்டு வருகிறது. இதுவே நாட்டை வெற்றியின் பாதைக்குக் கொண்டு சென்றிருக்கும் உத்திமுறையாகும்.

1965ஆம் ஆண்டில் சிங்கப்பூர் தனிநாடானபோதும் வல்லரசுகளுக்கிடையிலான பனிப்போர் உச்சத்தில் இருந்தது. இருப்பினும், நிச்சயமற்ற அக்காலகட்டத்தை சிங்கப்பூர் வெற்றிகரமாகக் கடந்தது.

வல்லரசுகளால் ஏற்படும் பதற்றநிலைகளைக் கடந்து சிறிய நாடுகளால் உயிர்த்தெழ முடியும் என்ற நம்பிக்கை சிங்கப்பூருக்கு இருந்ததே இதற்கு முக்கிய காரணம்.

அத்துடன், நாடு நிலைகுலையாமல், வளர்ச்சி அடைந்து வெற்றி பெறத் தேவையான கொள்கைகளை அமைத்து அவற்றை நடைமுறைப்படுத்தும் அரசியல் தலைவர்கள், உயர் அதிகாரிகள் ஆகியோரை சிங்கப்பூர் உருவாக்கியது.

இந்த உத்தி இன்றும் கடுகளவிலும் மாறாமல் நடப்பில் உள்ளது.

நடந்து முடிந்த சம்பவங்களிலிருந்து பாடம் கற்று, அதன்மூலம் எதிர்காலத்துக்குத் தயாராவது ஒரு வழியாகும்.

ஹமாஸ்-இஸ்‌ரேல் போர், உலக மக்களை இன அடிப்படையில் கருத்து ரீதியாகப் பிளவுபடுத்தியுள்ளது.

இதற்கு சிங்கப்பூர் விதிவிலக்கல்ல.

1960களில், மற்ற நாடுகளில் தொடங்கிய பதற்றநிலை சிங்கப்பூரை வெகுவாகப் பாதித்தது. வெளிநாடுகளில் ஏற்பட்ட அழுத்தங்கள் காரணமாக சிங்கப்பூரில் சமயக் கலவரம் வெடித்தது.

ஆனால் அந்த நிலை மாறி தற்போது சிங்கப்பூரர்களின் மனநிலை முதிர்ச்சியடைந்த ஒன்றாக இருக்கிறது.

கசப்பான அனுபவங்களிலிருந்து கற்றுக்கொண்ட பாடங்கள், சிங்கப்பூரை ஒழுங்குப்படுத்தப்பட்ட முறையான பாதையில் செல்ல வைத்துள்ளன.

சிங்கப்பூரில் உள்ள பல்லின, பல சமய மக்கள் ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்று அரசாங்கம், சமய மற்றும் சமூகத் தலைவர்களின் தொடர் வலியுறுத்தல் சிங்கப்பூருக்குப் பெரிதும் கைகொடுத்துள்ளது.

இதனால்தான், மத்திய கிழக்கில் நிகழும் வன்முறை, துயரச் சம்பவங்களுக்கு சிங்கப்பூரர்கள் மனிதாபிமான ஒருமைப்பாட்டுடன் கவலை, அக்கறை தெரிவித்து வருகின்றனர்.

நமக்கு இருப்பது ஒரே ஒரு சிங்கப்பூர். இதை நம் நாட்டு மக்கள் உணர்ந்தால் போதும். வெளிநாடுகளில் நிகழும் இன, அரசியல் பிரச்சினைகள் எவ்வளவு பெரிதானதாக இருந்தாலும் அவற்றுக்காக சிங்கப்பூரின் அமைதியான சூழலைக் கெடுப்பது முற்றிலும் நியாமற்றது என்று உணர முடியும்.

இந்த உணர்வுடன் தொடர்ந்து ஒற்றுமையுடன் வெற்றியின் பாதையில் செல்வது இவ்வாண்டிலும் தொடர வேண்டும்.

இதுவே நிச்சயமற்ற எதிர்காலத்தைக் கடந்து செல்வதற்கான தெளிவான பாதையாகும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!