போரடித்துவிட்டது என்கிறார் இலியானா

சுமார் இரண்டு வருடங்களுக்கு பிறகு அக்‌ஷய் குமாரின் ‘ரஸ்டம்’ படத்தின் மூலம் மீண்டும் வெள்ளித்திரைக்கு வரும் நடிகை இலியானா, திரைப்படங்களில் நடிப்பதை வேண்டுமென்றே தவிர்க்கவில்லை என்று கூறியிருக்கிறார். சயிஃப் அலி கானுடன் 2014இல் ‘ஹேப்பி எண்டிங்’ படத்தில் கடைசியாக நடித்த இலியானா, ஒரே மாதிரியாக நடிப்பது போரடிப்பதாகவும் அரை மனதோடு நடிப்பதைக் காட்டிலும் நடிக்காமலே இருக்கலாம் என்றும் கூறியிருந்தார்.

இப்போது, அவரது மனநிலை மாறியிருப்பதாகத் தோன்றுகிறது. தம்மை உண்மையாகவே மகிழ்ச்சிப்படுத்தக் கூடிய படங்களில் நடிப்பதை விரும்புவதாகச் சொல்கிறார். “இப்போது நடிக்கும் ‘ரஸ்டம்’ அத்தகைய ஒரு படம்தான். படங்களில் நடிப்பதை வேண்டுமென்றே தவிர்க்கவில்லை. வணிக ரீதியிலான படங்களில் நடிப்பதிலும், நாயகன் பின்னால் சுற்றும் பெண் பாத்திரத்தில் நடிப்பதிலும் எனக்கு சம்மதம்தான். ஆனால் ஒரு கட்டத்தில் அதே மாதிரியான படங்களில் நடித்து போரடித்து விட்டது. அதனால்தான் இடைவெளி ஏற்பட்டது,” என்கிறார் இலியானா.