சுடச் சுடச் செய்திகள்

குவிந்தன வாழ்த்துகள்

பெரிய கொண்டாட்டங்கள் வேண்டாம் என்று விஜய் கூறிவிட்டதால் அவரது பிறந்தநாளின்போது ரசிகர்கள் சற்றே அடக்கி வாசித்துள்ளனர். 

‘மாஸ்டர்’ படக்குழு வெளியிட்ட புதிய சுவரொட்டி ரசிகர்களுக்கு ஆறுதலாக அமைந்த நிலையில் திரையுலகப் பிரபலங்கள் பலரும் விஜய்யை வாழ்த்து மழையில்  நனைய விட்டுள்ளனர். 

முன்னதாக விஜய் ரசிகர் மன்றத்தின் சார்பாக அண்மையில் எல்லைப் பகுதியில் சீனாவுடனான மோதலில் வீரமரணம் அடைந்த தமிழக வீரர் பழனியின் குடும்பத்தாருக்கு ஒரு லட்சம் ரூபாய் நிதி வழங்கப்பட்டது.

‘மாஸ்டர்’ படத்துக்காக தாம் விஜய்யுடன் பணியாற்றிய ஒவ்வொரு தருணமும் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாதது என்று அதன் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

“விஜய் அண்ணாவுடன் பணியாற்றிய குறிப்பிட்ட ஒரு நாளை மட்டும் சிறப்பானது என்று என்னால் கூற இயலாது. அவருடன் செலவிட்ட ஒவ்வொரு தருணமும் மறக்க இயலாதது. 

“வாழ்நாள் முழுவதும் அதை நினைத்து மகிழ்வேன். இதைச் சாத்தியமாக்கியதற்கு நன்றி அண்ணா. உங்களை மிகவும் நேசிக்கிறேன்,” என லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.

இயக்குநர் அட்லி விஜய்யைத் தனது தளபதி என்று குறிப்பிட்டுள்ளார். ‘தெறி’, ‘மெர்சல்’, ‘பிகில்’ என விஜய்யை அடுத்தடுத்து இயக்கியவர் அட்லி.

“நீங்கள்தான் எனது அண்ணன், எனது தளபதி. என்னைவிட உங்களைத்தான் நான் அதிகம்  நேசிக்கிறேன், மதிக்கிறேன். உங்களுக்கு நிறைய கடமைப்பட்டிருக்கிறேன். நீங்கள் இல்லாமல் நான் இல்லை. பிறந்தநாள் வாழ்த்துகள் அண்ணா,” என்று குறிப்பிட்டு

‘பிகில்’ படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றையும் அட்லி தமது பதிவில் பகிர்ந்துள்ளார்.

நடிகை கீர்த்தி சுரேஷ் டுவிட்டரில் வித்தியாசமான முறையில் விஜய்க்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார். 

கீர்த்திக்கு நன்றாக வயலின் வாசிக்கத் தெரியும். இதையடுத்து ‘மாஸ்டர்’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘குட்டி ஸ்டோரி’ பாடலை வயலினில் வாசித்து அதை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு தனது வாழ்த்தை அவர் பதிவு செய்துள்ளார்.

‘மாஸ்டர்’ படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்துள்ள நடிகை மாளவிகா மோகனன் விஜய்யைப் போல் இன்னொருவர் உருவாகவே முடியாது என தெரிவித்துள்ளார். 

‘மாஸ்டர்’ பட பூசையின்போதுதான் விஜய்யை முதன்முதலில் சந்தித்ததாகவும் அன்று அவருடன் பேசமுடியவில்லை என்றும் மாளவிகா தமது இன்ஸ்டகிராம் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

“அந்தப் பூசைக்குப் பின் வந்த ஆறு மாதங்களில் விஜய் சார் என் வாழ்வில் முக்கியமான அங்கமாக மாறுவார் என நான் எதிர்பார்க்கவே இல்லை. அவர் புதிய விஷயங்களைத் தெரிந்து கொள்வதில் ஆர்வமிக்கவர். முடிந்தவரை  வித்தியாசமான முயற்சிகளை மேற்கொள்வார். 

“அன்பானவர், தயிர்சாத விரும்பி. காலை நான்கு மணிக்கெல்லாம் எழுந்து பணிகளைக் கவனிக்கிறார். உலகமே அழிந்துகொண்டிருந்தாலும் நேர்மறையான ஒரு பக்கத்தை சுட்டிக் காட்டக் கூடியவர். குறைவாக பேசக்கூடிய மனிதர் என்றாலும் விஜய் சாரைப்  போல் சொன்ன வார்த்தைகளையும் கொடுத்த வாக்குகளையும் நினைவில் வைத்திருந்து நிறைவேற்றும் ஒருவரை நான் இதுவரை பார்த்ததில்லை. 

“இனிமேல் இப்படி ஒருவர் உருவாகவே முடியாது என்ற வகையைச் சார்ந்த தளபதிக்கு என் பிறந்தநாள் வாழ்த்துகள்,” என மாளவிகா தெரிவித்துள்ளார்.

இயக்குநர் பாரதிராஜாவும் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். தமது கலைப் பயணத்தில் துரதிர்ஷ்டவசமாக தாம் தவிர்த்த ஒரு விதை என்று அவர் குறிப்பிட்டுள்ளார். 

“வலிகளை வலிமையாக்கி தமிழகத்தின் இளைஞர்களின் சொத்தாக உலகமே கொண்டாடும் விஜய்க்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.

“காதலாகட்டும் நடுத்தர குடும்ப கதாபாத்திரமாகட்டும் நையாண்டி, நக்கலுக்கான அந்த உடல் பாவனை, நடனத்தின் நளினம், சண்டைக்காட்சிகள், அதிலும் கோடிக்கணக்கான ரசிகர்களை உலகம் முழுவதும் ஈர்த்து வைத்திருக்கின்ற, வெற்றியின் ‘V’ என்பதை தமது பெயரின் முதல் எழுத்தாகக் கொண்ட விஜய்க்கு 46ஆவது பிறந்த நாளில் நீடூழி வாழ பாசத்துடன் வாழ்த்துகிறேன்,” என்று பாரதிராஜா குறிப்பிட்டுள்ளார்.

 

அனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரராகுங்கள்! https://tmsub.sg/online

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon