‘அறிவொளி’ தரும் நூலகச் சிற்றுந்து

இலங்கையில் 26 ஆண்டுகளாக நிலவிய உள்நாட்டுப் போராலும் அதற்குப் பிறகு இன்றுவரை நிலவும் பதற்றத்தாலும் பிள்ளைகள் சீரான வாசிப்புப் பழக்கத்தை இழந்துள்ள நிலையில் இப்பிரச்சினையை சிங்கப்பூர் ஆசிரியர் ஒருவர் கையாள முன்வந்துள்ளார்.

‘சுன்-பான்’ என்ற சிற்றுந்து ஒன்றை அமைத்து நாளுக்குக் குறைந்தது இரண்டு பள்ளிகளுக்குச் செல்ல ஏற்பாடு செய்திருக்கிறார் திருவாட்டி கலைவாணி சுப்பிரமணியம், 40. ‘அறிவொளி’ என்பது இத்திட்டத்தின் பெயர்.

உயர்நிலைப் பள்ளி ஒன்றில் ஆங்கில இலக்கிய ஆசிரியராகக் கடந்த 16 ஆண்டுகள் பணியாற்றிய திருவாட்டி கலைவாணி, பிள்ளைகள் படிப்பதில் அலாதி இன்பம் காண்பவர். சிங்கப்பூர் தேசியப் பல்கலைக் கழகத்தில் அரசியல் அறிவியல் பயின்ற இவர், புதிதாகப் பட்டம் பெற்ற காலகட்டத்திலேயே பல்வேறு அமைப்புகளுடன் இணைந்து இலங்கையின் தமிழ் பேசும் வடக்குப் பகுதிகளுக்குச் சென்றிருந்தார்.

யாழ்ப்பாணத்தில் போர் காரணமாக உருக்குலைந்த சமூகத்தில் இருந்த பிள்ளைகளுக்குப் பல உதவிக்குழுக்கள் நூலகங்களை அமைக்க முயன்றபோதும் அவை அதிகம் பயன்பாட்டில் இல்லாமல் புறந்தள்ளப்படுவதை திருவாட்டி கலைவாணி கவனித்தார்.

‘அறிவொளி’ திட்டத்தின்கீழ் இயங்கும் நூலகச் சிற்றுந்தில் பெற்ற நூல்களை மாணவர்கள் படிக்கின்றனர். படம்: கலைவாணி சுப்பிரமணியம்

போருக்குப் பிந்திய சூழலில் கல்வி வெகுவாகப் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு உதவ ஆசிரியர்கள், குறிப்பாக ஆங்கிலம் கற்பிக்கும் ஆசிரியர்களுக்குப் போதிய மொழித்திறனும் பொருத்தமான வளங்களும் இல்லை. அத்துடன், வெளிநாட்டிலிருந்து நன்கொடையாகத் தரப்படும் புத்தகங்கள் பல பொருத்தமற்றதாக இருப்பதை திருவாட்டி கலைவாணி சுட்டினார்.

நூலகத்திற்குரிய புத்தகங்கள் கொடுக்கப்பட்டாலும் நிர்வகிக்கும் வளங்கள் இல்லாத நிலையில் பள்ளிகள் வேண்டாவெறுப்புடன் நூலகச் சேவையை வழங்குவதாகக் கூறினார். இப்படி கிளிநோச்சிப் பகுதியில் இரண்டு மாதங்களாக நடப்பவற்றை கலைவாணி கூர்ந்து கவனித்தார்.

14 வயது பள்ளி மாணவர்களின் சராசரி வாசிப்புத் திறன் ஆறு வயது பிள்ளைகளுக்கு நிகராக இருந்த நிலையை திருவாட்டி கலைவாணி ஆய்வுகளின் வழி கண்டறிந்தார்.

“சிங்கப்பூரில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்காக பார்த்துப் பார்த்து புத்தகங்களை வாங்குகிறார்கள். ஆனால் இலங்கையில் முற்றிலும் மாறுபட்ட நிலையைக் கண்டு நான் கவலைப்படுகிறேன்,” என்றார் இவர்.

இலங்கையில் ரொட்டி விற்கப் பயன்படுத்தப்படும் சுன்-பான் (மூன்று சக்கர சிற்றுந்து) வீதிகளில் வலம் வருவதைக் கண்ட திருவாட்டி கலைவாணி, சுன்-பான் நூலகத்தை அமைக்க முடிவு செய்திருந்தார். இந்தியாவில் துளிகா என்ற புத்தக நிறுவனத்தின் ஆங்கில-தமிழ் புத்தகங்கள், இந்தப் பிள்ளைகளுக்கு ஏற்புடையவை என அறிந்த பின்னர், அவற்றை வாங்கினார். துணிச்சல், இழப்பு, உடற்குறை உள்ளிட்ட பல நல்ல கருத்துகளைப் பற்றிய புத்தகங்களை அந்நிறுவனத்திடம் பெற முடிந்ததாகக் கூறினார்.

மாணவர்களுக்கு வாசிக்கக் கற்றுத்தரும் ‘அறிவொளி’ திட்டத்தின் நிறுவனர் கலைவாணி சுப்பிரமணியம். படம்: கலைவாணி சுப்பிரமணியம்

பொறியியல், வடிவமைப்புத் திறன்கள் இல்லாதபோதும் அந்தச் சிற்றுந்தை வடிவமைக்கும் பொறுப்பைக் கையில் எடுத்துக்கொண்டார் கலைவாணி. இந்தியாவில் நிபுணர் ஒருவர் திருவாட்டி கலைவாணியின் வடிவமைப்பைத் திறம்பட சீர்ப்படுத்தியபின், அந்த வடிவமைப்பு, வாகனத் தயாரிப்பு ஆலை ஒன்றுக்குக் கொடுக்கப்பட்டது. இதற்கான மொத்த செலவான 18,000 வெள்ளியை திருவாட்டி கலைவாணியின் நண்பர்களும் குடும்பத்தினரும் கொடுத்து உதவினர்.

கிராமத்தின் சில பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்குச் செல்லும் சாலைகள் குண்டும் குழியுமாக இருக்கும் நிலையில் புத்தகங்களைப் பாதுகாப்புடன் பள்ளிகளில் சேர்ப்பது மற்றொரு சவால். இலங்கையின் கல்வி அதிகாரிகளிடம் இத்திட்டத்திற்கான உரிய அனுமதியைப் பெறுவது அதற்கு அடுத்த சவால்.

“இத்திட்டம் தோல்வியில் முடியும் என்று கல்வித்துறை உயர் அதிகாரி ஒருவர் அவநம்பிக்கையுடன் கூறி என் வேண்டுகோளை முதலில் ஏற்காமல் இழுத்தடித்தார். இரண்டு மூன்று நாட்கள் கழித்து அவரை மீண்டும் சந்தித்துப் பேசி இறுதியில் அவரை ஒப்புக்கொள்ள வைத்தேன்,” என்று அவர் கூறினார்.

மார்ச் 2018ல் தொடங்கப்பட்ட இத்திட்டம் 2019 வரை பள்ளிகளிடமிருந்து பெரும் வரவேற்பைப் பெற்றது. சிற்றுந்து ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு மணி நேரம் நிற்கும். அந்நேரத்தில் மாணவர்கள் வாசிப்பர். ஒரு மணி நேரத்தில் படிக்கக்கூடிய புத்தகங்களே மாணவர்களுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதாகக் கூறினார் கலைவாணி.

கொவிட்-19 கொள்ளைநோயின் தாக்கம், இலங்கையின் பொருளியல், நாணயம், எரிபொருள் பிரச்சினைகள் ஆகியவை இத்திட்டத்திற்கு முட்டுக்கட்டைகளாக விளங்கியபோதும் இவ்வாண்டு மீண்டும் திட்டம் முழுவீச்சில் இயங்கி வருவதாக திருவாட்டி கலைவாணி மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

இலங்கைத் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்தவர் அல்லர் என்றாலும் திருவாட்டி கலைவாணி, இலங்கைத் தமிழர்களை தொப்புள் கொடி உறவுவாகக் கருதுமகிறார். யாழ்ப்பாணத்திலும் இலங்கையின் கிழக்குப் பகுதியிலும் வலம் வர மேலும் இரண்டு சிற்றுந்து நூலகங்களை அமைக்க வேண்டும் என்பதே இவரது இலக்கு.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!