துவண்டுபோகாமல் துடிப்புடன் இருக்கும் சிறுநீரக நோயாளி

துவண்டுபோகாமல் துடிப்புடன் இருக்கும் சிறுநீரக நோயாளி

2 mins read
f08d3232-690b-4888-82f3-e626562adf94
மாலதி. - படம்: அனுஷா செல்வமணி
multi-img1 of 3

சிறுநீரகங்கள் செயலிழந்து போய்விட்ட செய்தியை அறிந்தவுடன் பெரும்பாலான நோயாளிகளுக்கு முதலில் வேதனையாக இருக்கும்.

ஆனால், 38 வயது மாலதி அதற்கு விதிவிலக்கு. தற்போது ‘லேடி எம்’ எனும் உணவகத்தில் பானங்களைத் தயாரிக்கும் ‘பாரிஸ்டா’ (barista) வேலையில் உள்ளார் மாலதி.

அவர் வாரத்தில் மூன்று நாள்கள் ரத்த சுத்திகரிப்பு அமர்வுகளுக்குச் சென்று ஒவ்வொரு முறையும் நான்கு மணி நேரத்தைச் செலவிட வேண்டும். 13 வயதில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட மாலதி, 20 ஆண்டுகள் கழித்துத் தனது உடல் திடீரென வீங்குவதைக் கவனித்தார். ஆனால், அது சிறுநீரகங்கள் செயலிழக்கத் தொடங்குவதற்கான அறிகுறியாக இருக்கும் என்று அவர் சற்றும் எதிர்பார்க்கவில்லை.

அவர் தற்போது செய்துவரும் வேலையில் அதிகம் நின்றுகொண்டு பணிபுரிய வேண்டும். கணவருக்கு நிதிச் சுமையைக் குறைப்பதற்காக மாலதி வேலைக்குச் சென்றுவருகிறார்.

முன்னதாக வாடிக்கையாளர் சேவைத் துறையில் பணியாற்றிய அவர், உடல்நலம் பாதிக்கப்பட்டபோது வேலையை விட்டுவிடும்படி அவரின் முதலாளி சொல்லிவிட்டார். பல வேலைகளுக்கு விண்ணப்பித்தும் மாலதிக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

தேசிய சிறுநீரக அறநிறுவனத்தின் வழி அவருக்கு அதன் தலைமையகத்தில் ‘காக்கி கார்னர் பாரிஸ்டா’ (Kaki Corner Barista) திட்டம் மூலம் பாரிஸ்டா ஆவதற்கான பயிற்சி அளிக்கப்பட்டது. திட்டத்தில் மாலதி போன்ற வேறு பல சிறுநீரக நோயாளிகளுக்கு வேலை உலகத்தில் அடி எடுத்து வைக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாளும் 15 மாத்திரைகளை உட்கொள்ள வேண்டியுள்ள நிலையிலும் மாலதி, “நோய் வந்துவிட்டது என்று துவண்டு போகாதீர்கள். நமக்கு மற்ற உறுப்புகள் இன்னும் நன்றாகத்தான் இயங்கி வருகின்றன,” என உற்சாகமளிக்கும் சொற்களைக் கூறினார்.

குறிப்புச் சொற்கள்