நாட்டுப்புறக் கலைகள் மீது ஆர்வத்தைத் தூண்டும் ஆசிரியர் ஜெகதீசன்

மாணவர்களுடன் ராஃபிள்ஸ் கல்வி நிலையத்தின் முன்னாள் மாணவியும் பறை இசைக்கருவியை வாசிக்கும் திறனையும் அனுபவத்தையும் பெற்ற அஷ்வினி செல்வராஜ் (நடு). படம்: முனைவர் ச.ஜெகதீசன்

லோகஷிவாணி ஜெகநாதன்

நாட்டுப்புறக் கலைகளைத் தம் மகன் கற்றுக்கொண்டதைப் பார்த்த முனைவர் ச.ஜெகதீசன், அக்கலைகளைத் தாமும் முறையாகக் கற்றுக்கொள்ள வேண்டும் என விரும்பினார்.

இந்த ஆசையை நிறைவேற்ற ராஃபிள்ஸ் கல்வி நிலையத் தமிழ் ஆசிரியரான அவர், 2020ஆம் ஆண்டு மதுரைக்குச் சென்றார். அங்கு, அவர் நாட்டுப்புற மையம் ஒன்றில் மூன்று வாரங்களுக்குப் பறை, சிலம்பம், ஒயிலாட்டம் போன்ற நாட்டுப்புறக் கலைகளின் அடிப்படையைக் கற்றுக்கொண்டார்.

இக்கலைகளைக் கட்டிக்காக்கும் அவசியத்தை இளையர்களுக்கு உணர்த்த, சிங்கப்பூருக்கு வந்த பிறகு தம் மாணவர்களுக்கு, பறை என்ற இசைக்கருவியை அறிமுகம் செய்தார். எதிர்பாராத விதமாக அவருடைய மாணவர்களும் இந்த இசைக்கருவியைக் கற்றுக்கொள்ள அதிக ஆர்வம் காட்டினர்.

இதை ஒரு சிறந்த வாய்ப்பாகக் கருதி, முனைவர் ஜெகதீசன் பறை இசைக்கருவியை வாசிக்கும் முறையைக் தம் மாணவர்களுக்குக் கற்றுக்கொடுப்பதற்கும் பயிற்சி அளிப்பதற்கும் ராஃபிள்ஸ் கல்வி நிலையத்தின் முன்னாள் மாணவியும் பறை இசைக்கருவியை வாசிக்கும் திறன், அனுபவம் பெற்றவருமான அஷ்வினி செல்வராஜுடன் தொடர்புகொண்டார்.

பதின்ம வயதில் பாரம்பரிய இசைக்கருவிகளைக் கற்றுக்கொள்ளும் ஆர்வத்தைப் பெற்ற அஷ்வினி, 2022ஆம் ஆண்டில் பறை இசைக்கருவியை வாசிக்க சிங்கையில் உள்ள ‘முக்குல கலைக்கூடம்’ என்ற கலைப்பள்ளியில் முறையாகக் அக்கலையைக் கற்றுக்கொண்டவர் ஆவார்.

பறை வாசிக்கும் திறனைப் பெற்ற இவர், ராஃபிள்ஸ் கல்வி நிலைய மாணவர்களுக்கு இரண்டே நாள்களில் இசைக்கருவியை வாசிக்கும் நுணுக்கங்களைக் கற்றுக்கொடுத்தார். மாணவர்கள் அந்த இரண்டு நாள்களில் காட்டிய ஈடுபாடு, அவருக்குப் பெரும் மனநிறைவைக் கொடுத்தது எனக் குறிப்பிட்டார்.

மேலும், இதுபோன்ற நாட்டுப்புறக் கலைகள் தமிழர்களின் பண்பாடு, அடையாளம், வரலாறு போன்ற முக்கிய அம்சங்களை உணர்த்துவதால் இளையர்கள் இக்கலைகளைக் கற்றுக்கொள்வது இன்றியமையாதது என்று வலியுறுத்தினார் அஷ்வினி, 25.

பறை போன்ற கலைகள் உடலியக்கத் திறன்களை வளர்க்க உதவும் என்ற காரணத்தால் இளம்வயதிலிருந்தே இவற்றைக் கற்றுக்கொள்வது சிறப்பு என்றும் கூறினார்.

இவரிடமிருந்து இப்புதுத் திறனைக் கற்றுக்கொண்ட மாணவர்கள் முதன்முதலாக ஆசிரியர் தின நிகழ்ச்சியின்போது பறை இசைத்தனர். மாணவர்களின் இந்த ஈடுபாடு முனைவர் ஜெகதீசனுக்குப் பெரும் ஊக்கம் அளித்ததால் வரும் ஆண்டுகளில் மற்ற நாட்டுப்புறக் கலைகளையும் மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளார்.

அவருடைய மாணவர்களில் ஒருவரான ஆதர்ஷ் ஸ்ரீனிவாசன், 17, நாட்டுப்புறக் கலையைக் கற்றுக்கொண்ட அனுபவத்தை எண்ணி மகிழ்கிறார். பறை அடிக்கும் திறனைக் கற்றுக்கொண்ட ஆதர்ஷ், மற்ற இளையர்களும் இவ்வாறான அனுபவத்தைப் பெற வேண்டும் என்ற அவசியத்தைச் சுட்டிக்காட்டினார். இளையர்களுக்குத் தமிழின் சிறப்பை உணர்த்த, இதுபோன்ற அனுபவங்கள் பேருதவியாக உள்ளன என்று கூறினார்.

தமிழ்ப் பண்பாடு, கலாசாரம் தொடர்ந்து நிலைக்க ஆதர்ஷ் ஸ்ரீனிவாசன், அஷ்வினி செல்வராஜ் போன்ற இளையர்களின் ஈடுபாடு பெரும் பங்களிக்கிறது என்பதில் முனைவர் ச.ஜெகதீசன் பெருமிதம் கொள்கிறார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!