ஃபிஃபா முன்னாள் காற்பந்து நடுவர் எஸ்.கே. கென்னடி காலமானார்

சிங்கப்பூர் காற்பந்துச் சங்கம், அனைத்துலக காற்பந்துச் சம்மேளனத்தின் (ஃபிஃபா) முன்னாள் காற்பந்து நடுவரும் லோயாங் உயர்நிலைப் பள்ளியின் முன்னாள் ஆசிரியருமான திரு கென்னடி சிவசாமி கும்பலிங்கம் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 26) காலை காலமானார். அவருக்கு வயது 59.

1990களின் மத்தியிலிருந்து 2005 இறுதிவரை அனைத்துலகப் போட்டிகளில் சிங்கப்பூரைப் பிரதிநிதித்த திரு கென்னடி, திருமணம் ஆகாதவர்.

முன்னாள் காற்பந்து நடுவரும் முன்னாள் செய்தியாளருமான திரு சுரேஷ் நாயர், 69, “மிகவும் புத்திகூர்மையுடைய சாமர்த்தியமான காற்பந்து நடுவர் திரு கென்னடி. விளையாட்டின்போது பாகுபாடற்ற முடிவுகளை எடுப்பதில் வல்லவர். காற்பந்து நடுவர்களுக்குக்கெல்லாம் இவர் ஒரு முன்மாதிரி,” என்று கூறினார்.

திரு கென்னடியின் மறைவு குறித்து சிங்கப்பூர் காற்பந்துச் சங்கம் அதன் ஃபேஸ்புக் பக்கத்தில், “சிறந்த நடுவரான திரு கென்னடி சமூகத்தின்மீது அதிக அக்கறை கொண்டவர். 2002ல் அவர் எஸ்-லீக்கின் சிறந்த காற்பந்து நடுவருக்கான விருதைப் பெற்றபோது கிடைத்த $5,000 பரிசுத் தொகையையும் அந்த காற்பந்துப் பருவத்தின் நடுவருக்கான படித்தொகையையும் முழுவதுமாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்சின் பள்ளி மாணவர் கைச்செலவு நிதிக்கு நன்கொடையாக வழங்கிவிட்டார்,” என்று பதிவிட்டது. 

“காற்பந்து விளையாட்டு வீரரான கென்னடி, காற்பந்து நடுவரான பின்னரே அதிகம் அறியப்பட்டார். திடலில் துளியும் பயமற்ற இவரின் பாங்கும் பாகுபாடற்ற முடிவுகளும் அவருக்குப் பெரும் செல்வாக்கை அளித்தன,” என்று நினைவுகூர்ந்தார் சிங்கப்பூர் தேசிய காற்பந்து அணியின் முன்னாள் தலைவரான திரு டெரி பத்மநாதன், 67. 

கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக திரு கென்னடியுடன் நட்புறவில் இருந்த அவர், “மிகவும் அன்புடனும் தன்மையாகவும் பழகும் குணமுடைய அவர் இரக்கம் உடையவர். அவரின் மறைவு சிங்கப்பூர் காற்பந்து உலகிற்கு ஒரு பேரிழப்பு,” என்றும் இரங்கல் தெரிவித்தார்.  

“1998ஆம் ஆண்டு முதல் அவரைப் பற்றி நிறைய படித்துள்ளேன். அவர் காற்பந்து நடுவராக இருந்த பல போட்டிகளைக் கண்டுள்ளேன். ஒரு நடுவராக அவரின் நேர்த்தியும் காற்பந்து விளையாட்டு மீது அவருக்கு இருந்த நாட்டமும் என்னை ஆச்சரியப்பட வைத்துள்ளன,” என்று கூறினார் காற்பந்து ஆர்வலரும் சிங்கப்பூரில் காற்பந்து விளையாட்டு பற்றி புத்தகங்களும் எழுதியுள்ள திரு தியாகராஜு ஆறுமுகம், 62. 

1998ல் தன்னுடைய சகோதரரின் திருமண நிச்சயதார்த்த நிகழ்விற்குக்கூட செல்லாமல் அன்றைய தினத்தில் ஜூரோங் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற போட்டிக்கு நடுவராக திரு கென்னடி கலந்துகொண்ட நிகழ்வு தன்னை நெகிழச் செய்ததாக திரு தியாகராஜு கூறினார். 

புதன்கிழமை (டிசம்பர் 27) மாலை 6 மணிக்கு புளோக் 230J தெம்பனிஸ் ஸ்திரீட் 21 #03-677 சிங்கப்பூர் 523230 எனும் முகவரியிலுள்ள திரு கென்னடியின் இல்லத்திலிருந்து எடுத்துச்செல்லப்படும் என்றும் அவரது நல்லுடல், மண்டாய் தகனச்சாலை மண்டபம் 3ல் இரவு 7.30 மணியளவில் தகனம் செய்யப்படும் என்றும் அவருடைய குடும்பத்தார் தெரிவித்தனர். 

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!