உலுக்கும் கொவிட்-19 அச்சம்; தாயகம் திரும்ப முனைப்பு காட்டும் பங்ளாதேஷ் ஊழியர்கள்

சிங்கப்பூரைப் பாதித்திருக்கும் கொரோனா கிருமித்தொற்று அச்சம் காரணமாக இங்கே வேலை செய்யும் பங்ளாதேஷ் ஊழியர்கள் பலர் நாடு திரும்பியுள்ளனர் என்றும் இன்னும் பலர் நாடு திரும்ப காத்துக்கொண்டிருக்கின்றனர் என்றும் கூறப்படுகிறது.

சையது ஆல்வி ரோட்டுக்கும் டெஸ்கர் ரோட்டுக்கும் இடைப்பட்ட லெம்பு ரோட்டில் கடை வைத்திருக்கும் தாரிக்குல் இஸ்லாம்,  முன்பெல்லாம் ஞாயிற்றுக்கிழமைகளில் பங்ளாதேஷ் ஊழியர்கள் பலர் அங்கு பொருட்கள் வாங்கவும் ஒருவரை ஒருவர் சந்திக்கவும் கூடுவார்கள் என்றார்.

ஆனால், இப்போது கிருமித்தொற்று காரணமாக அவர்கள் கூட்டம் அதிகமாக உள்ள இடங்களைத் தவிர்க்கின்றனர். அதனால் தனது வியாபாரமும் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளது என்றார் திரு இஸ்லாம்.

“பங்ளாதேஷ் ஊழியர்கள் பலர் நாடு திரும்பி விட்டனர். அவ்வாறு செல்ல முடியாமல் தொடர்ந்து இங்கு வேலை செய்யும் ஊழியர்கள் இந்தப் பகுதிக்கு வரும்போது முகக்கவசம் அணிந்துகொண்டு வருகின்றனர்.

“அவர்கள் தங்கள் வாழ்க்கைக்கும் குடும்பத்துக்கும்தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். பணம் சம்பாதிப்பது அப்போது அவர்களுக்கு இரண்டாம்பட்சமாகிவிட்டது,” என்றும் கூறினார் 52 வயது திரு இஸ்லாம்.

தற்போது நாடு திரும்பியிருக்கும் பங்ளாதேஷ் நாட்டவர் பலரும், இங்கு கிருமித்தொற்று பிரச்சினைகள் முற்றிலும் நீங்கிய பிறகு, மீண்டும் இங்கு வந்து வேலை செய்யும் எண்ணம் கொண்டிருப்பர் என்றும் கூறப்பட்டது.

தாயகத்தில் உள்ள அவர்களது உறவினர்களின் வற்புறுத்தலும் இங்கிருந்து ஊழியர்கள் செல்வதற்குக் காரணமாகக் கூறப்படுகிறது.

சிங்கப்பூரில் இதுவரை கொரோனா கிருமித்தொற்றுக்கு ஆளாகியவர்களில் ஐவர் பங்ளாதேஷ் நாட்டவர். 

அவர்களில் ஒருவரது நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதற்கிடையே, தங்கள் நாட்டு ஊழியர்கள் சிங்கப்பூரை விட்டு வெளியேற வேண்டாம் என்று சிங்கப்பூரில் உள்ள பங்ளாதேஷ் தூதரகம் அவர்களுக்கு ஆலோசனை கூறி வருகிறது. 

ஊழியர்கள் தங்கியிருக்கும் விடுதிகளுக்குச் சென்று தூதர அதிகாரிகள் சென்று அவர்களுக்கு முகக்கவசங்கள், கை சுத்திகரிப்பான், துண்டு பிரசுரங்கள் ஆகியவற்றை வழங்கி வருகின்றனர்.

சிங்கப்பூரில் 150,000 பங்ளாதேஷ் ஊழியர்கள் உள்ளனர் என்று தூதரகத் தகவல்கள் கூறுகின்றன. 

உடனடியாக நாடு திரும்ப விரும்பும் பங்ளாதேஷ் ஊழியர்களின் எண்ணிக்கை 50 விழுக்காடு வரை உயர்ந்திருப்பதாக லெம்பு ரோட்டில் இருக்கும் பயணத்துறை நிறுவனம் ஒன்று தெரிவித்தது. இதுவரை இதுபோன்ற நிலைமையைக் கண்டதில்லை என்றும் அது குறிப்பிட்டது.

#கொவிட்-19 #கொரோனா #பங்ளாதேஷ்_ஊழியர்கள் #தமிழ்முரசு