ஒரே நாளில் 242 பேர் பலி

கொவிட்-19 கிருமித்தொற்றால் சீனாவின் ஹுபெய் மாநிலத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் மட்டும் 242 பேர் மாண்டனர். இதையடுத்து, கொவிட்-19 கிருமி பாதிப்பால் ஹுபெயில் இதுவரை 1,310 பேர் இறந்து விட்டனர். ஒட்டுமொத்தத்தில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,365ஆக உயர்ந்தது.

அதேபோல, ஹுபெயில் கிருமித்தொற்றால் மேலும் 14,480 பேர் பாதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. நேற்று முன்தினம் புதன்கிழமை வரை ஹுபெயில் மட்டும் 48,206 பேருக்கு கொவிட்-19 கிருமித்தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் 3,441 பேர் சிகிச்சைக்குப் பின் உடல்நலம் தேறி மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினர்.

நோயறிதல் தொடர்பாக புதிய வழிகாட்டி நெறிமுறைகள் நடைமுறைக்கு வந்ததை அடுத்து, கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை  இப்படி பல மடங்கு உயர்ந்தது. 

சீனாவின் தேசிய சுகாதார ஆணையமும் தேசிய பாரம்பரிய சீன மருத்துவ ஆணையமும் கடந்த சனிக்கிழமை ஓர் அறிக்கையை வெளியிட்டன. அதில், கிருமித்தொற்று முதன்முதலில் கண்டறியப்பட்ட ஹுபெய் மாநிலத்தில் அத்தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதை உறுதிசெய்யும் வழிகளை மாற்றியமைப்பதாகக் கூறப்பட்டிருந்தது.

அதன்படி, ஆய்வகச் சோதனைகளை மட்டும் நம்பியிராமல், இனி நோயறிதலுக்கான மருத்துவ முறைகள் மூலமும் ஒருவர் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதை உறுதிசெய்யலாம் என அந்த அறிக்கை குறிப்பிட்டது. அதாவது, ஒருவருக்குக் கடுமையான மூச்சுக்குழாய் பாதிப்பு இருப்பதற்கான அறிகுறிகள் இருந்தாலும் நுரையீரல் சிதைவு இருப்பதாக ‘சிடி ஸ்கேன்’ சோதனையில் தெரியவந்தாலும் அவர் கொவிட்-19 கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக உறுதிசெய்யப்படும். 

இதுவரை, பிரத்தியேக சோதனைக் கருவித் தொகுப்புகள் மூலம் உறுதிசெய்யப்பட்ட தொற்றுகள் மட்டுமே துல்லியமானவை எனக் கருதப்பட்டன. புதிய நோயறிதல் வழிகாட்டி நெறிமுறைகளின்படி கிருமித் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டதும் உடனடியாக அவர்களுக்கு வழக்கமான சிகிச்சையை அளிக்க முடியும் என ஹுபெய் சுகாதார அதிகாரிகள் கூறினர்.

Loading...
Load next