பிரதமர் லீ: நாம் தொடர்ந்து விழிப்புடன் இருப்பது முக்கியம்

சிங்கப்பூரில் கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்கும் நிலை ஏற்படக்கூடாது என்று பிரதமர் லீ சியன் லூங் வலியுறுத்தியுள்ளார். படம்: தொடர்பு, தகவல் அமைச்சு

கிருமிப் பரவலை முறியடிப்பதற்கான திட்டம் இன்றுடன் (ஜூன் 1) முடிவடைகிறது. நாளை முதல் முதற்கட்ட கட்டுப்பாடு தளர்வு நடப்புக்கு வருகிறது. கடுமையான கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தபோது செய்ய முடியாத சிலவற்றை மக்கள் இனி செய்யலாம்.

“சில பாதுகாப்பு நடவடிக்கைகள் தளர்த்தப்படுகின்றன. நாம் அனைவருக்கும் அது பெரும் நிம்மதியைத் தரும்,” என்று பிரதமர் லீ சியன் லூங் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் இன்று பதிவிட்டார்.

ஆனால் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதால் ஆபத்துகளும் உள்ளன என்று அவர் நினைவூட்டினார்.

“சமூக அளவில் கொரோனா கிருமி பரவும் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது. பாதிக்கப்பட்டோர் பலர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இவர்களுடன் ஒப்பிடும்போது கிருமித்தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை குறைவு.

“பள்ளிக்குச் சென்று நண்பர்களைச் சந்திக்கவும் பெற்றோர், தாத்தா, பாட்டி ஆகியோரைப் பார்க்கவும் நீங்கள் அனைவரும் மிகுந்த ஆவலுடன் இருக்கிறீர்கள் என்று எனக்கு நன்றாக தெரியும். ஆனால் நாம் அனைவரும் எப்போதும் எச்சரிக்கையுடனும் விழிப்புடனும் இருக்க வேண்டும்.

“அனைவரும் தயவுசெய்து மிகவும் கவனமாக இருங்கள். பாதுகாப்பான தூர இடைவெளி உத்தியைக் கடைப்பிடியுங்கள். வெளியே செல்லும்போதும் வேலையிடத்தில் இருக்கும்போதும் முகக்கவசத்தை அணிந்துகொள்ளுங்கள். தனிப்பட்ட சுகாதாரத்துக்கு முக்கியத்துவம் கொடுங்கள். உங்கள் கைகளை அடிக்கடி கழுவுவது முக்கியம். கூட்டம் அதிகம் உள்ள இடங்களையும் ஒன்றுகூடல்களையும் தவிர்க்கவும்.

“இவற்றை நாம் அனைவரும் மிகுந்த சிரத்தையுடன் கடைப்பிடித்து வந்தால் கிருமிப் பரவலை முறியடிப்பதற்கான திட்டம் முடிவடைந்ததும் நமது வாழ்க்கைமுறை கிட்டத்தட்ட வழக்கநிலைக்குத் திரும்பும்.

“சிங்கப்பூரில் கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்கும் நிலை ஏற்படக்கூடாது. மீண்டும் கடுமையான கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்தும் அவசியம் ஏற்படக்கூடாது.

“கொரோனா கிருமித்தொற்றை எதிர்கொள்வது வேகமாக ஓடி முடிக்கும் குறுகிய தூர ஓட்டப் பந்தயமல்ல. அது நெடுந்தொலைவு ஓட்டப் பந்தயத்தைப் போன்ற நீண்டகால போராட்டமாகும்.

“கிருமித்தொற்றுக்கான தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டாலும் முன்புபோல நமது வாழ்க்கைமுறை வழக்கநிலைக்குத் திரும்பாது. நமது வாழ்வியல் முறையில் உள்ள பலவீனங்களை கொரோனா கிருமித்தொற்று வெளிச்சம் போட்டு காட்டிவிட்டது. அதேசமயத்தில் நமது மீள்திறனைக் காட்டவும் பிரச்சினையிலிருந்து மீண்டு வந்து கூடுதல் வலிமையுடன் திகழவும் அது நமக்கு வாய்ப்பைத் தந்துள்ளது.

“கிருமிப் பரவலை முறியடிப்பதற்கான திட்டம் ஒரு நிறைவுக்கு வருகிறது. சிறப்பான முறையில் பங்காற்றிய உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி.

"கட்டுப்பாடுகள் நடப்பில் இருந்தபோது நீங்கள் அவற்றுக்கேற்ப நடந்துகொண்டதால் இப்போது அக்கட்டுப்பாடுகளைத் தளர்த்துவது சாத்தியமாகிவிட்டது. நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். நமது சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்கள் செய்த தியாகங்கள் வீண்போகக்கூடாது,” என்று பிரதமர் லீ வலியுறுத்தினார்.

சிங்கப்பூர்
கொரோனா
கொவிட்-19
பிரதமர் லீ
 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!