தடுப்பூசி போட்டுக்கொள்ளாத கொவிட்-19 நோயாளிகள் மருத்துவச் செலவை ஏற்க வேண்டும்

வரும் டிசம்பர் மாதம் 8ஆம் தேதியில் இருந்து இப்புதிய கட்டண முறை நடப்பிற்கு வரவுள்ளது. கோப்புப்படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
தன்விருப்பத்தின்பேரில் கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொள்ளாதோர், ஒருவேளை அந்நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டால் அதற்கான மருத்துவச் செலவுகளை அவர்களே ஏற்க வேண்டும்.
வரும் டிசம்பர் மாதம் 8ஆம் தேதியில் இருந்து இப்புதிய நடைமுறை நடப்பிற்கு வரும் என்று சுகாதார அமைச்சர் ஓங் யி காங் தெரிவித்துள்ளார்.
இன்னும் கொரோனா தடுப்பூசி போடாமல் இருப்போர்க்கு இதனை ஒரு ‘முக்கியமான சமிக்ஞையாக’ திரு ஓங் குறிப்பிட்டார்.
கொவிட்-19 தொற்றுக்கு எதிரான அமைச்சுகள்நிலை பணிக்குழுவின் நேற்றைய செய்தியாளர் சந்திப்பின்போது, தகுதியுள்ள அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ளும்படி அமைச்சர் ஓங் வலியுறுத்தினார்.
இப்போதைக்கு, வெளிநாடு சென்று வந்ததும் கொரோனாவால் பாதிக்கப்படுவோரைத் தவிர, மற்ற சிங்கப்பூரர்கள், நிரந்தரவாசிகள், நீண்டகால அனுமதி அட்டை உடையோர் அனைவரது கொவிட்-19 மருத்துவச் செலவுகளையும் அரசாங்கமே முழுமையாக ஏற்றுக்கொள்கிறது.
இந்நிலையில், மருத்துவ அடிப்படையில் தகுதியானவராக இருந்தும் கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொள்ளாமல் இருந்து, டிசம்பர் 8ஆம் தேதி முதல் கிருமித்தொற்றுக்காக மருத்துவமனைகளிலும் கொவிட்-19 சிகிச்சை நிலையங்களிலும் அனுமதிக்கப்படுவோர்க்கு மட்டுமே புதிய கட்டண முறை பொருந்தும்.
இப்போதைய மானியக் கட்டமைப்பு அடிப்படையிலும், மெடிசேவ் பயன்பாடு, மெடிஷீல்டுலைஃப் கோரிக்கை ஆகியவற்றின் அடிப்படையிலும் அவர்களுக்கான கொவிட்-19 சிகிச்சைக் கட்டணம் வசூலிக்கப்படும் என்று பணிக்குழுவின் இணைத் தலைவருமான ஓங் தெரிவித்தார்.