காலையிலேயே தொடங்கிய விசாரணை

ஐஎன்எஸ் மீடியா வழக்கின் தொடர்பில் இந்தியாவின் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் விண்ணப்பித்திருந்த வழக்கு நிராகரிக்கப்பட்டதை அடுத்து இந்தியாவின் மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) அதிகாரிகள் அவரைக் கைது செய்தனர். 

அவரை சிபிஐ இன்று காலையிலேயே விசாரிக்கத் தொடங்கியுள்ளதாக இந்திய ஊடகங்கள் கூறுகின்றன.

சிபிஐ அதிகாரிகள், திரு சிதம்பரத்தின் புதுடெல்லி வீட்டில் சுவரேறிக் குதிப்பதைக் காட்டும் காணொளிகள் சமூக ஊடகங்களில் வலம் வருகின்றன. புதன்கிழமை மாலை திரு சிதம்பரம், காங்கிரஸ் கட்சியின் தலைமையகத்தில் எதிர்பாராதவிதமாகத் தோன்றி அங்கு செய்தியாளர் கூட்டத்தினருடன் உரையாடினார். அவர் அங்கு இருப்பதாகத் தகவல் அறிந்த சிபிஜ அதிகாரிகள் உடனே அங்கே செல்ல முற்பட்டனர். அதற்குள் திரு சிதம்பரமும் மூத்த கட்சித் தலைவர்களும் தலைமையகத்தைவிட்டு வெளியேறிவிட்டதால் திரு சிதம்பரத்தின் வீட்டுக்கு அந்த அதிகாரிகள் சென்றனர். அந்த வீட்டின் நுழைவாசல் அவர்களுக்குத் திறக்கப்படாததால் அதிகாரிகளில் சிலர் சுவரேறிக் குதித்ததாகக் கூறப்படுகிறது. எஞ்சியவர்கள் பின்வாசல் வழியாக நுழைந்ததாக என்டிடிவி செய்தி நிறுவனம் தெரிவித்தது.

‘ஐஎன்எக்ஸ் மீடியா’ நிறுவனம் வழியாக வெளிநாடுகளிலிருந்து பெருமளவிலான நிதித்தொகையை இந்தியாவுக்குள் கொண்டு வருவதற்குத் திரு சிதம்பரம் அவரது மகன் திரு கார்த்திக்கு உடந்தையாக இருந்ததாகக் குற்றம் சாட்டப்படுகிறார். 

தாம் சட்டத்திலிருந்து தப்பிக்க முயலவில்லை என்று திரு சிதம்பரம் கூறினார். அத்தகைய குற்றச்சாட்டு தம்மைக் காயப்படுத்துவதாகவும் உண்மையிலேயே தாம் சட்டத்தின்படி நடக்க முயல்வதாகவும் அவர் கூறினார்.