8 பெண்கள்; 24 பேர் புதுமுகங்கள்: ஆம் ஆத்மி வேட்பாளர் பட்டியல் வெளியானது

புதுடெல்லி: டெல்லியில் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இம்முறை 24 புதுமுகங்களைக் களமிறக்கியுள்ளது ஆம் ஆத்மி. கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற 15 பேருக்கு ஆம் ஆத்மி தலைமை இம்முறை வாய்ப்பளிக்கவில்லை. 

வரும் பிப்ரவரி 8ஆம் தேதி டெல்லி சட்டப்பேரவைக்குத் தேர்தல் நடைபெறுகிறது. மொத்தம் 70 தொகுதிகளை உள்ளடக்கிய டெல்லியில் இம்முறை ஆம் ஆத்மிக்கும் பாஜகவுக்கும் இடையே கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில் 70 தொகுதிகளிலும் களம் காணும் ஆம் ஆத்மி வேட்பாளர் பட்டியலை செவ்வாய்க்கிழமை வெளியிட்டது. இம்முறை 24 புதுமுகங்களுக்கு வாய்ப்பளிப்பதாகத் தெரிவித்துள்ளார் அக்கட்சித் தலைவரும் மாநில முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால். 

பாஜகவும் காங்கிரசும் இன்னும் வேட்பாளர் பட்டியலை வெளியிடவில்லை. 

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி அண்மையில்  ஆம் ஆத்மியில் இணைந்த 6 பேருக்கு இத்தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

முதர்வர் கெஜ்ரிவால் 3வது முறையாக புதுடெல்லி தொகுதியில் களம் இறங்குகிறார். துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவும் பட்பர்கஞ்ச் தொகுதியில் 3வது முறையாக போட்டியிடுகிறார். 

கடந்த தேர்தலில் 6 பெண்களுக்கு வாய்ப்பளித்த ஆம் ஆத்மி இம்முறை 8 பெண்களைக் களம் இறக்கியிருப்பதாக துணை முதல்வர் மணீஷ் சிசோடியா தெரிவித்துள்ளார். 

இந்நிலையில் அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் மெத்தனமாக இருந்துவிடக்கூடாது என்றும் தேர்தல் பணிகளில் தீவிர கவனம் செலுத்தவேண்டும் என்றும் முதல்வர் கெஜ்ரிவால் அறிவுறுத்தி உள்ளார். 

ஆத்மி ஆத்மி ஆட்சி மீது டெல்லி மக்கள் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளதாகவும்  தமது டுவிட்டர் பக்கத்தில் கெஜ்ரிவால் பதிவிட்டுள்ளார்.