செய்திக்கொத்து (இந்தியா) 30-6-2020

மகாரா‌ஷ்டிர மாநிலத்தில் ஜூலை-31 வரை ஊரடங்கு

மும்பை: மகாராஷ்டிர மாநிலத்தில் ஜூலை 31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. முன்னதாக மேற்கு வங்காளம், ஜார்க்கண்ட் போன்ற மாநிலங்களும் ஊரடங்கை மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டித்து உத்தரவிட்டுள்ளன. மும்பையில் காவல்துறையினர் சுற்றுக்காவல் பணியை தீவிரப்படுத்தி உள்ளனர். அத்துமீறுவோர் கைது செய்யப்படுகின்றனர்.


 

டெல்லியில் இரு தினங்களில் பிளாஸ்மா வங்கி அமைக்கப்படும்

புதுடெல்லி: கொவிட்-19 நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கும் வகையில் டெல்லியில் பிளாஸ்மா வங்கி அமைக்கப்படும் என முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். அண்மையில் டெல்லி சுகாதார அமைச்சர் சத்யேந்திர ஜெயனுக்கு கிருமித்தொற்று ஏற்பட்டது. அவரது உடல்நிலை கவலைக்கிடமான நிலையில் பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டதில் அடுத்த இரு தினங்களில் அவர் குணமடைந்தார். இதையடுத்து பிளஸ்மா சிகிச்சையை அதிகப்படுத்த டெல்லி அரசு முடிவு செய்துள்ளதாகவும் பிளாஸ்மா வங்கி அடுத்த இரு தினங்களில் செயல்படத் தொடங்கும் என்றும் முதல்வர் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.


 

உள்துறை அமைச்சருக்கு கொவிட்-19

ஹைதராபாத்: தெலுங்கானா மாநில உள்துறை அமைச்சர் மெஹ்மூட் அலிக்கு கொரோனா கிருமித் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு, ஞாயிற்றுக்கிழமை இரவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதற்கிடையே ஹைதராபாத்தில் கிருமித்தொற்று அதிகரித்துள்ளதை அடுத்து அங்கு ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.


 

சீன நிறுவனங்களுடன் ஒப்பந்தம்: ரத்து செய்த பீகார் அரசு

பாட்னா: மகாராஷ்டிராவைத் தொடர்ந்து பீகார் அரசும் சீன நிறுவனங்களுடன் செய்துகொண்ட 2,900 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளது. தலைநகர் பாட்னாவில், கங்கை நதியின் குறுக்கே பிரம்மாண்ட பாலம் கட்டுவதற்காக பீகார் அரசு சீன நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்திருந்தது. தற்போது அதை ரத்து செய்துள்ளது. ஏற்கெனவே மகாராஷ்டிர அரசு சீன நிறுவனங்களுடன் செய்துகொண்ட ஐயாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்களை நிறுத்தி வைத்துள்ளது. சீனாவிலிருந்து 500 வகையான பொருட்கள் இந்தியாவுக்குள் இறக்குமதி ஆகின்றன. அவற்றுக்குத் தடைவிதிக்க வேண்டுமென இந்திய வர்த்தகக் கூட்டமைப்பான சிஏஐடி வலியுறுத்தி உள்ளது.