முதல்நிலை சுகாதார ஊழியர்களுக்கு நன்றி கூறும் செயல்

கொவிட்-19 எனப்படும் கொரோனா கிருமித்தொற்றைக் கட்டுப்படுத்த அயராது பாடுபடும் சுகாதாரப் பராமரிப்புத் துறையின் முதல்நிலை ஊழியர்களை ஒரு சிலர் தட்டிக்கழித்து, அவர்களது மனதைப் புண்படுத்தும் வகையில் நடந்துகொண்ட சம்பவங்கள் சிங்கப்பூரில் அண்மையில் நிகழ்ந்தன.

இந்நிலையில், இந்த ஊழியர்களைக் கௌரவிக்கும் முயற்சிகளை பல அமைப்புகள் எடுத்து வருகின்றன. 

அவ்வரிசையில், மேஃபிளவர் தொடக்கப்பள்ளியும் இந்து அறக்கட்டளை வாரியத்தின்கீழ் இயங்கும் ஆசிரமமும் இணைந்து ஓர் உன்னத முயற்சியை நடத்தின. 

பிப்ரவரி 24, 25 ஆகிய தேதிகளில் சிங்கப்பூர் பொது மருத்துவமனை, கூ டெக் புவாட் மருத்துவமனை, என்டியுசி சுகாதாரத் தாதிமை இல்லம் ஆகிய அமைப்புகளுக்குக் கிட்டத்தட்ட 3,000 உலர்ந்த உணவு அன்பளிப்புப் பைகளை ஆசிரமத்தில் வசிப்பவர்கள் விநியோகித்தனர். 

இந்தப் பைகளை மேஃபிளவர் தொடக்கப்பள்ளியில் உள்ள மாணவர்களும் ஆசிரியர்களும் தயாரித்தனர். 

சுகாதாரப் பராமரிப்புத் துறையில் முதல்நிலையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு நன்றி தெரிவிக்க மாணவர்கள் கைப்பட எழுதி, வரைந்த அட்டைகளும் மடல்களும் அந்த பரிசுப் பைகளில் இடம்பெற்றன. 

கூ டெக் புவாட் மருத்துவமனையில் வாடிக்கையாளர் சேவைப் பிரிவில் நோயாளிகளுக்குச் சேவை வழங்கும் உதவியாளராகப் பணியாற்றும் நூரூல் அதிக்கா, அந்தப் பரிசுப் பையைப் பெற்றுக்கொண்டவர்களில் ஒருவர். 

“மற்றவர்களுக்கு உதவுவதே எங்களது இயல்பு. முதல்நிலை ஊழியர்கள் மீது தவறான கண்ணோட்டம் இருப்பதாக உணர்கிறோம். நோயாளிகள் பாதுகாப்பைக் கருதி மேலும் அதிகமாக கிருமி நாசினிகளைப் பயன்படுத்தி சுற்றுப்புறத்தைத் தூய்மைப்படுத்தி வருகிறோம். எங்களைக் கண்டு அச்சம் கொள்ளவேண்டிய அவசியம் இல்லை,” என்றார் நூரூல், 25. 

முதல்நிலை ஊழியர்கள் தியாகம் செய்து சமுதாயத்திற்கு ஆற்றும் முக்கிய பங்கை மாணவர்களுக்குப் புரிய வைப்பதே இந்த முயற்சியின் நோக்கம் என்று மேஃபிளவர் தொடக்கப்பள்ளியின் ஆலோசனைக் குழு உறுப்பினரான திரு பால் தாம் குறிப்பிட்டார். 

“சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்கள் தங்களது நேரம், வருடாந்திர விடுப்பை விட்டுக்கொடுத்து சோதனையான தருணங்களில் கடுமையாக உழைப்பதை மாணவர்கள் போற்றுகின்றனர். முழு மனதுடன் தாதியர்களுக்காக தயாரித்த வாழ்த்து கடிதங்கள், மடல்கள், வரைபடங்கள், வண்ணங்கள் மூலம் அது தெரிகிறது,” என்றார் திரு தாம். 

எதிர்காலத்தில் சில மாணவர்கள் முதல்நிலை ஊழியர்களாக பணிபுரிவர் என்ற நம்பிக்கை கொண்டுள்ள திரு தாம், அதேநேரத்தில் அந்தத் துறையின் உன்னதத்தை அவர்கள் புரிந்துகொள்வார்கள் என்று கூறினார். 

“உயிரைப் பணயம் வைத்து மற்றவர்களுக்கு உதவும் சுகாதாரத் துறை ஊழியர்களுக்காக நான் என் நன்றியைத் தெரிவிக்கிறேன். இத்தகைய ஊழியர்களைத் தாழ்த்திப் பார்க்கக்கூடாது. ஆசிரமம் மூலம் இந்த நற்காரிய முயற்சியில் ஈடுபடுவது குறித்து மகிழ்ச்சி அடைகிறேன்,” என்றார் இந்து அறக்கட்டளை வாரிய ஆசிரமத்தில் கடந்த நான்கு மாதங்களாக வசிக்கும் திரு டேவ் (உண்மை பெயரல்ல), 58. 

செம்பவாங்கின் டர்பன் சாலையில் அமைந்துள்ள ஆசிரமம், போதையர்களுக்கான மறுவாழ்வு இல்லமாக சேவையாற்றுகிறது. தரமான பல நிகழ்ச்சிகளை வழங்குவதன் மூலம் அங்கு வசிப்பவர்களுக்கு பல வகையில் ஆதரவு அளித்து வருகிறது.