தமிழ்ப் பட்டக்கல்வியால் ஆழமடையும் திறன்கள், விரிவடையும் வாய்ப்புகள்

சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகத்தின் (எஸ்யுஎஸ்எஸ்) தமிழ்மொழிப் பட்டத்தைப் பயின்ற மாணவர்களில் பெரும்பாலானோர் கல்வித் துறையில் சேர்ந்தாலும் வேறு பல துறைகளிலும் வாய்ப்புகளைப் பெறுகின்றனர். ஊடகம், நீதிமன்றம், நாடாளுமன்றம், ஆய்வு ஆகிய துறைகளிலும் அவர்கள் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர்.

சில ஆண்டுகளுக்கு முன்னர் சிங்கப்பூரில் பட்டதாரிகள் அல்லாத ஆசிரியர்கள் பலர் இருந்ததால் அவர்களைப் பட்டதாரிகளாக்க முதலில் தொடங்கப்பட்ட இந்த பட்டப்படிப்பில் இப்போது பல்வேறு துறைகளில் ஏற்கெனவே பயின்றுள்ள இளம் மாணவர்கள் சேர்வதாக இப்பல்கலைக்கழகத்தில் கற்பிற்கும் டாக்டர் மணிவண்ணன் முருகேசன் தெரிவித்தார்.

“பட்டம் பெறாத தமிழ் ஆசிரியர்கள் இன்னும் பலர் இருக்கிறார்கள். இங்கு அவர்கள் இளங்கலைப்பட்டம் பயில வந்தால் அவர்களுக்கு மிக நன்றாக இருக்கும்,” என்று அவர் தெரிவித்தார்.

தொடக்கத்தில் இந்தப் பட்டப்படிப்பு படித்தவர்களில் பெரும்பாலானோர் ஏற்கனவே தமிழாசிரியர்களாக இருந்தவர்கள், அல்லது அது சார்ந்து இயங்கிய மாணவர்களாகவே இருந்தனர். காலப்போக்கில் பிறதுறை மாணவர்களையும் இளைய மாணவர்களையும் இந்தத் தமிழ்ப்பட்டம் கவர்ந்ததுடன் எண்ணிக்கையும் கூடியது. இளம் மாணவர்கள் பலரின் வீட்டில் தமிழ்மொழிப் புழக்கம் மற்றும் வாசிப்புப் பழக்கம் குறைந்துவருவதால் ஏற்படும் குறைபாடுகளைப் புரிந்துகொண்டு அவர்களை ஆழ்ந்த மொழி நிபுணத்துவத்திற்கு இந்தப் பயிற்சித் திட்டங்கள் இட்டுச் செல்வதாக டாக்டர் மணிவண்ணன் தெரிவித்தார்.


“கடந்த ஆண்டு புதிதாகச் சேர்ந்த மாணவர்களில் 80 விழுக்காட்டினர் இளையர்களே,” என்றார் அவர்.

இந்தப் பல்கலைக்கழகத்தில் படிக்க வரும் மாணவர்கள் இலக்கியம், இலக்கணம், மொழியியல் ஆகியவை மட்டுமின்றி சிங்கப்பூரில் தமிழ்மொழி பயன்பாடு மற்றும் தென்கிழக்காசியாவின் அயலகத் தமிழ் இலக்கியத்தைப் பற்றியும் தெரிந்துகொள்ளலாம். அத்துடன் சிங்கப்பூர்ச் சூழலை முற்றிலும் சார்ந்த மொழிபெயர்ப்புக் கோட்பாடுகளையும் பயிற்சிகளையும் மாணவர்கள் இங்கு மேற்கொள்ள முடியும். இந்த அம்சங்கள் எஸ்யுஎஸ்எஸ் தமிழ் இளங்கலைப் படிப்புக்குரிய தனித்துவமான அம்சம் என்றார் டாக்டர் மணிவண்ணன்.

“நம் நாட்டில் அரசாங்க அமைச்சுகள், நாடாளுமன்றம் உள்ளிட்ட உயர் நிர்வாக அமைப்புகளில் பயன்படுத்தப்படும் தனித்துவமான கலைச்சொற்கள் மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தப்படும்,” என்றும் அவர் தெரிவித்தார்.

மொழிபெயர்ப்புச் சார்ந்த பாடங்களைப் பொருத்தவரை இருமொழித் திறனே அடிப்படைத் தகுதி என்றார் டாக்டர் மணிவண்ணன். அத்துடன், சொல்வளத்தை மாணவர்கள் புத்தகம் வாசிப்பதன் மூலம் பெருக்கிக்கொள்ளவேண்டும் என்றும் அவர் கூறினார். சரியான நேரத்தில் பொருத்தமான சொற்களைப் பயன்படுத்துவதும் பண்பாடு சார்ந்த செய்திகளை அறிந்திருப்பதும், முறையான அனுபவமுமே மொழிபெயர்ப்பு. இவையேயன்றி மாணவர்கள் மொழிபெயர்ப்புப் பற்றிய கோட்பாடுகளை அறிந்து சரியாகப் பயிற்சி செய்தால் சிறந்த மொழிபெயர்ப்பாளராக முடியும். அதேசமயம் அவர்களுக்குப் புதிய வேலைவாய்ப்புகளையும் ஏற்படுத்தித் தரும்.

மொழிபெயர்ப்புக் கோட்பாடு அறிவியல் தன்மையுள்ள மொழியியல் வரன்முறையைக் கொண்டுள்ளது. எனவே அந்தக் கோட்பாட்டிற்கு உட்பட்டு செய்யப்படும் மொழிபெயர்ப்புகள்தான் சரியாகவும் வெவ்வேறு சூழல்களுக்குப் பொருத்தமாகவும் இருக்கும் என்றார் டாக்டர் மணிவண்ணன். இந்த மொழிபெயர்ப்பில் மிகவும் அனுபவம் முதிர்ந்தவர்கள் மாணவர்களுக்குப் பயிற்சியளிப்பர் என்றும் அவர் குறிப்பிட்டார். மொழிபெயர்ப்பு மட்டுமின்றி சிங்கப்பூர் சூழலுக்கு ஏற்றாற்போல இலக்கியமும் இந்தப் பாடத்திட்டத்தில் கற்றுத்தரப்படுவது தனித்தன்மை வாய்ந்த ஓர் அம்சம். அத்துடன் தென்கிழக்காசிய நாடுகளுடனான இந்தியத் தொடர்பு பற்றிய பாடமும் வேறு எந்த பல்கலைக்கழகத்தின் தமிழ் இளங்கலைப் பட்டப் படிப்பில் இல்லாத மற்றோர் அம்சம் என்றும் டாக்டர் மணிவண்ணன் தெரிவித்தார்.

இந்த வட்டாரத்துடனான கலை, இலக்கியம், அரசியல், வணிகம், சமயம் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சார்ந்த இந்தியர்களின் பழங்கால மற்றும் தற்கால இணைப்புகளைப் பற்றி மாணவர்கள் இந்தப் பாடத்தின்வழி அறிந்துகொள்வர். பண்பாட்டுப் புரிதலை ஏற்படுத்த முற்படும் இத்தகைய பாடங்கள் அத்துறையில் தேர்ந்த பேராசிரியர்களால் எழுதப்பட்டு எஸ்யுஎஸ்எஸில் கற்பிக்கப்படுகின்றன. இது சிங்கப்பூர் மற்றும் ஆசியான் நாடுகளை நன்கு புரிந்துகொள்ள உதவும்.

இந்தத் தமிழ்ப்படிப்பைப் பயிலும் இளங்கலைப் பட்டதாரிகளில் பெரும்பாலானோர் ஆசிரியர் பணியில் சேர்கின்றனர். எஸ்யுஎஸ்எஸ் பல்கலைக்கழகமும் கல்வி அமைச்சும் இணைந்து இத்துறையில் உள்ள பணிவாய்ப்புகளை மாணவர்களுக்கு அறிமுகப்படுகின்றன. குறிப்பாக விண்ணப்பம், நேர்முகத் தேர்வு குறித்த ஆலோசனைகளை வழங்கி வருகிறது. மாணவர்கள் கல்வி பயிலும்போதே இத்தகைய அனுபவங்களை பெறுவதால் எளிதில் வேலைவாய்ப்பை பெற முடியும். ஆயினும் கல்வித்துறை மட்டுமின்றி வேறு பல இடங்களில் அவர்களுக்கு வாய்ப்புகள் காத்திருப்பது பரவலாக அறியப்படவில்லை என டாக்டர் மணிவண்ணன் தெரிவித்தார். நீதிமன்றம், நாடாளுமன்றம், ஊடக நிறுவனங்கள் ஆகியவற்றுடன் சிண்டா, தமிழ் கியூப் போன்ற துணைப்பாட சேவைகளை வழங்கும் அமைப்புகளிலும் பட்டதாரிகள் பணியாற்றலாம் என அவர் கூறினார். தனிப்பட்ட ஆர்வம், சொந்த முயற்சி, ஈடுபாடு, தேர்ச்சி ஆகியவை இருந்தால் பட்டதாரிகள் நல்ல வேலைகளில் நிச்சயமாக சேரலாம் என்றார் டாக்டர் மணி. ஒருசிலர், பட்டம் பெற்று முற்றிலும் வேறு துறைகளில் முதுநிலைக்கல்வி தொடங்கி முனைவர் பட்டம்வரை பயில்வதாக அவர் கூறினார். "தமிழ் அல்லாத துறைகளுக்குச் செல்வோருக்கும் இந்தக் கல்வி ஒரு நல்ல அடித்தளமாக அமைகிறது," என்றார்.

‘பிஏ’ தமிழுடன் வழங்கப்படும் பிற துறைகளைச் சேர்ந்த பாடத்திற்கு எஸ்யுஎஸ்எஸ்ஸின் பல்வேறு துறைகளில் தெரிவுகள் இருப்பதாகக் கூறிய அவர், இதன்மூலம் தற்போதைய வேலைச் சூழலுக்கு ஏற்ற விதமாக தங்களது திறன்களை விரிவுபடுத்தலாம் என்று கூறினார்.
“தமிழ்த் துறையில் தங்களது வாழ்க்கைத் தொழிலைப் புதிதாகத் தொடங்குவோர், தொழில் மாற்றம் செய்ய விரும்புவோர், வேலையிடத்தில் பதவி உயர்வு விரும்புவோர் ஆகியோர் இந்தப் படிப்பில் சேர்ந்து அதனை முறையாகப் பயன்படுத்தினால் வெற்றி உறுதி,” என்றார் அவர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!