உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு: பன்முக அடையாளங்களுடன் கூடிய 3,000 தமிழர்கள்

வரலாற்றுச் சிறப்புமிக்க உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டை முதன்முதலில் பழம்பெரும் தமிழ் அறிஞர் தனிநாயகம் அடிகளார் கோலாலம்பூரில் 1966ஆம் ஆண்டு தொடக்கி வைத்தார். நான்காவது முறையாக இந்த மாநாடு மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூரில் மலாயா பல்கலைக்கழகத்தில் ஜூலை 21, 22, 23 தேதிகளில் நடைபெற்றது.

ஐக்கிய அரபுச் சிற்றரசின் ஷார்ஜா நகரில் இடம்பெறுவதாக இருந்த மாநாடு, கொவிட்-19க்குப் பின்பு நிலவிய நிதிப்பற்றாக்குறை காரணமாக மலேசியாவுக்கு மாற்றப்பட்டதாக உலகத் தமிழ் ஆரய்ச்சி நிறுவனத்தின் தலைவர் த.மாரிமுத்து தங்கவேலு தெரிவித்தார்.

இந்த 11ஆம் உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் கோலாலம்பூரின் ஏறக்குறைய ஆயிரம் பேராளர்களுடன் சேர்த்து மொத்தம் 3,000 பேர் கலந்துகொண்டனர். பன்முகத்தன்மைமிக்க, முற்றிலும் முரணான கொள்கை கொண்ட தமிழ்த்துறையினர் பலர் ஒன்றுதிரண்டு தமிழ் மொழி தொடர்பில் கருத்துப்பரிமாற்றத்தில் ஈடுபட்டது ஓர் அசாதாரண முயற்சியே.

பேராளர்களில் கிட்டத்தட்ட பாதி பேர் மலேசியாவைச் சேர்ந்தவர்கள், ஏறத்தாழ 400 பேர் இந்தியாவைச் சேர்ந்தோர். சிங்கப்பூரைப் பிரதிநிதித்து 75 பேராளர்கள் மாநாட்டில் கலந்துகொண்டனர். இதர பேராளர்கள் ஜப்பான், சீனா, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள்.

தொழில் முனைவோர் மேம்பாட்டு கூட்டுறவுத் துறையின் துணையமைச்சர் சரஸ்வதி கந்தசாமி, குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்தார். படம்: ஔவை முருகன்

மாநாட்டுத் தெரிவுக் குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்ட 2,000க்கும் மேற்பட்ட கட்டுரைகளில் 501 கட்டுரைகள் தெரிவு செய்யப்பட்டன. ‘இணையக் காலகட்டத்தில் தமிழ்மொழி’ என்ற கருப்பொருளைக் கொண்டிருந்த இம்மாநாட்டின் கட்டுரைத் தலைப்புகள் பலதரப்பட்டவை. கட்டுரைப் பகிர்வுகளுடன் முக்கியப் பிரமுகர்கள் பலர் 15 நிமிடச் சிற்றுரைகளையும் ஆற்றினர்.

‘சிங்கப்பூரும் தமிழும்’ என்ற தலைப்பில் சிங்கப்பூரின் முன்னாள் நியமன நாடாளுமன்ற உறுப்பினர் இரா. தினகரன் உரையாற்றினார். 1969ஆம் ஆண்டு முதல் சிங்கப்பூரில் அதிகாரத்துவ மொழிகளில் ஒன்றாக விளங்கிவரும் தமிழ், சிங்கப்பூரின் ஊடகங்களிலும் பள்ளிகளிலும் பொதுப்போக்குவரத்திலும் பரவியிருப்பதைச் சுட்டினார்.

சிங்கப்பூர்-மலாயாவில் தமிழ்த்துறையை நிறுவ வகைசெய்த தமிழவேள் கோ. சாரங்கபாணி, தாம் நிறுவிய தமிழ் முரசு செய்தித்தாள் மூலமாக இன்றும் வாழ்ந்துகொண்டிருப்பதாக திராவிடக் கழக இயக்கத்தின் தலைவர் கி வீரமணி மாநாட்டில் சிறப்பித்துக் குறிப்பிட்டிருந்தார்.

மாநாட்டுக் கருப்பொருளுடன் ஒட்டாத விவகாரங்கள் குறித்தும் சிலர் பேசினர். உதாரணமாக, தமிழகத்தின் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன், உலகின் பிற சமயங்கள் சகோதரத்துவத்தை வளர்ப்பதாகக் கூறி, இந்து மதத்தின் தத்துவமான சனாதனம் சகோதரத்துவத்தைவும் சமத்துவத்தையும் மறுக்கிறது என்று கூறியது பார்வையாளர்கள் பலரைக் கோபப்படுத்தியதைக் காண முடிந்தது. மேடையிலிருந்து அவர் இறங்கும்படி சிலர் கூச்சலிட்டனர்.

அமைதி காக்குமாறு பார்வையாளரிடம் கேட்டுக்கொண்ட துணை அமைச்சர் சரஸ்வதி கந்தசாமி, இந்துவாக வளர்ந்த தம் வீட்டில் வேற்றுமை கற்றுத்தரப்படவில்லை என்றும் மக்களைப் பிளவுப்படுத்த நினைக்கும் அரசியல் சித்தாந்தத்திலிருந்து முதலில் சாதியம் அகற்றப்படவேண்டும் என்றும் கூறினார். சுயநல அரசியலுக்கு அப்பாற்பட்டு நிற்போரே உண்மையான தமிழ்த் தலைவர்களாகத் திகழ முடியும் என்றும் அவர் கூறியது பார்வையாளர்களைச் சமாதானப்படுத்தும் விதமாக இருந்தது.

இருப்பினும் இதற்கிடையே திராவிடக் கொள்கைவாதிகள் ஒருபுறமிருக்க மறுபக்கமாக ஆன்மிக உரையாளர் இலங்கை ஜெயராஜ், பல்வேறு மடங்களைச் சேர்ந்த சைவ மடத் தம்பிரான்கள், இளைய ஆதீனங்கள், முஸ்லிம் அறிஞர்கள் என மாநாட்டில் கூடியிருந்தோரிடையே பன்முகத்தன்மை படர்ந்திருந்ததைக் காண முடிந்தது.

இரண்டாம் நாளில் மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம், மாநாட்டைச் சிறப்பித்தார். மாநாட்டுக்காக தம் அரசாங்கத்தைச் சேர்ந்த மனிதவளத்துறை அமைச்சர் வ. சிவகுமார், தற்போதைய எதிர்க்கட்சியான மலேசிய இந்தியர் காங்கிரசின் இணைத் தலைவர் எம். சரவணன் ஆகியோர் இணைந்து செயல்பட்டதைப் பாராட்டிய திரு அன்வார், மலேசியாவின் தேசிய ஒற்றுமையை இவ்வாறு வழிநடத்தும் இந்தியச் சமூகத்தைத் தாம் வணங்குவதாகக் கூறினார். மாநாட்டுக்கென்றே 1 மில்லியன் ரிங்கிட் தொகையுடன் மலாயா பல்கலைக்கழகத்தின் இந்திய ஆய்வுத் துறைக்கு 2 மில்லியனையும் தமிழ்ப்பள்ளிகள் செயல்படுவதற்காக 2 மில்லியனையும் ஒதுக்கியுள்ளதாக திரு அன்வார் அறிவித்து பலத்த கைத்தட்டலைப் பெற்றார்.

மாநாட்டின் இறுதி நாளில் ‘ஐஎஸ்ஐ’, ‘ஸ்டொர்ப்பர்ஸ்’ போன்ற அனைத்துலக ஆய்வுத் தரநிலைகளை எட்டும் ஓர் ஆய்விதழ் இதுவரை தமிழில் வெளிவரவில்லை என்று மாநாட்டின் இணைத் தலைவர் பேராசிரியர் மு.ராஜேந்திரன் கூறினார்.

சீன மொழிக்கு 32 ஐஎஸ்ஐ இதழ்கள் ஹாங்காங்கில் பதிவாகி உள்ளபோது பலமுறை மாநாடு நடத்தியும் தமிழ் மொழியில் ஓர் இதழ்கூட இத்தரநிலையை எட்டவில்லை என்றார். தரமான கட்டுரைகள் வெளிவந்தாலும் தரநிலைப்படுத்தப்படாததால் அவை கானலுக்கு இரைத்த நீரைப்போல் ஆய்வு உலகிற்குத் தெரியாமல் போவதாகக் கூறினார்.

சிங்கப்பூரிலிருந்து கட்டுரை படைத்த ‘அஆஇ’

சிங்கப்பூரிலிருந்து 75 பேராளர்கள் பங்கேற்றனர். முன்னாள் நியமன நாடாளுமன்ற உறுப்பினர் ஆர் தினகரன், தமிழ்மொழி பண்பாட்டுக் கழகத் தலைவர் மு. அரிகிருஷ்ணன், சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத் தலைவர் நா. ஆண்டியப்பன், கவிமாலைக் காப்பாளர் மா. அன்பழகன் உள்ளிட்டோரின் ஒருங்கிணைப்பில் இந்தப் பேராளர் குழு வியாழக்கிழமையன்று கோலாலம்பூர் சென்றிருந்தனர்.

சிங்கப்பூரர்களின் பங்களிப்பு குறித்து தமிழ் முரசிடம் பேசிய துணை அமைச்சர் சரஸ்வதி கந்தசாமி, மலேசியாவுக்கு மிக அருகாமையிலுள்ள சிங்கப்பூரர்களை, ‘தொப்புள் கொடி உறவுகள்’ என்று வர்ணித்தார். மாநாட்டின் மீது மலேசியர்கள் காட்டிய ஆர்வம் சிங்கப்பூரர்கள் இடையேயும் தென்பட்டதாகக் கூறும் திருவாட்டி சரஸ்வதி, “இரு நாடுகளுக்கு இடையிலான உறவு புதுப்பிக்கப்படுவதாக உணர்கிறேன்,” என்றார்.

குர்தியரின் மொழியும் நாடும்

‘கவிமாலை’ காப்பாளர் மா. அன்பழகன் படம்: கி. ஜனார்த்தனன்

திரு அன்பழகன் தமது கட்டுரையில் குர்தியர்களின் மொழி அடையாளத்தைப் பற்றியும் துருக்கியர்களால் அந்த அடையாளம் எதிர்நோக்கும் அபாயத்தைப் பற்றியும் விவரித்தார். இரண்டு வகையினருக்கு இடையே சமயம் பொது என்றாலும் குர்தியர்கள் தாய்மொழியைத் தங்கள் அடையாளத்தின் மையமாக வைத்திருப்பதை திரு அன்பழகன் சுட்டினார்.

யாழ்ப்பாணத்தில் நடந்த அல்லது நடந்துகொண்டிருக்கும் பிரச்சினைகள் குர்திஷ் எனும் மொழி பேசும் மக்களுக்கு அன்றும் இன்றும் எவ்வாறு இருந்து வருகின்றன என்பதைத் தமிழர்களுக்குப் புலப்படுத்துவது தம் கட்டுரையின் நோக்கம் என்று திரு அன்பழகன் கூறினார்.

இக்கட்டுரையின் பகிர்வின்போது குர்தியர்களின் நிலை, இலங்கைத் தமிழர்களின் நிலையுடன் ஒப்பிட்டு பேசப்பட்டது. இருந்தபோதும் இலங்கை எதிர்நோக்கும் பிரச்சினை, குர்தியர்களின் சவால்களைத் தாண்டிலும் மிகப் பெரிய அளவில் இருப்பதாக படைப்பைக் கண்டவர்களில் ஒருவரான கனடிய நாட்டு முனைவர் திருமதி ஸ்ரீதாஸ் கூறினார்.

சிங்கப்பூரில் இயக்கங்கள் வளர்க்கும் தமிழ்

தமிழ்மொழி பண்பாட்டுக் கழகத் தலைவர் மு. அரிகிருஷ்ணன், சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத் தலைவர் நா. ஆண்டியப்பன் (வலக்கோடி). படம்: கி. ஜனார்த்தனன்

திரு நா. ஆண்டியப்பன் படைத்த கட்டுரையில் தமிழ்மொழி சிங்கப்பூரில் அதிகாரத்துவ மொழியாக அங்கீகாரம் பெற்றது எப்படி, சிங்கப்பூரில் தமிழ்ப்புழக்கத்தை வளர்க்கும் இயக்கங்கள் யாவை, அவற்றை நிறுவிய தலைவர்களும் தற்காலத் தலைவர்களும் யாவர் என்பவற்றைப் பட்டியலிடும் படைப்பாக அமைந்தது.

பல்வேறு கலாசாரங்களின் சங்கமமாக விளங்கும் சிங்கப்பூரில் இந்த இயக்கங்களின் பணி சுலபமன்று எனத் தம் படைப்பின் முடிவில் குறிப்பிட்ட திரு ஆண்டியப்பன், இம்முயற்சிகளுக்கு உயிரோட்டம் தருவது அரசாங்க நிதியுதவி என்றும் கூறினார். தமிழ் பேசப்படாவிட்டால் தமிழுக்குத் தரப்படும் சலுகைகள் மறையும் அபாயம் ஏற்படும் என்ற எச்சரிக்கையுடன் தம் படைப்பை நிறைவு செய்தார்.

சிங்கப்பூரில் தமிழரும் தமிழர்களும்

முனைவர் இரத்தின வேங்கடேசன். படம்: கி.ஜனார்த்தனன்

சிங்கப்பூரின் தமிழ் மக்களின் மொழிசார்ந்த சிந்தனை மற்றும் சித்தாந்தங்களை விளக்கும் ஒரு கட்டுரையைப் படைத்தார் சிங்கப்பூரைச் சேர்ந்த படைப்பாளர்களில் ஒருவரான இரத்தின வேங்கடேசன்.

பல மொழிகளைக் கேட்டு வளர்ந்த சிங்கப்பூரில் தமிழர்கள், தமிழகத்தில் உள்ள பல தமிழர்களுக்கு மாறாக தங்களுக்குத் தெரிந்த மொழிகளைத் தனி பாணியில் அணுகுவதாகக் கூறினார். காலப்போக்கில் சிங்கப்பூரிலும் மலேசியாவிலும் தமிழ் மேலும் தூய்மையாகி சிறப்பாக இருப்பதையும் தம் ஆய்வில் குறிப்பிட்டார்.

மலேசியாவில் மலாய் மொழி, சிங்கப்பூரில் ஆங்கில மொழி என்ற ஆதிக்கம் இருந்தாலும் அந்நாடுகளின் தமிழ் மக்கள் மொழிக் கலப்படத்தைத் தவிர்த்து தமிழ் பேசி வருவது சிறப்பாக எடுத்துக்கூறப்பட்டதாக துணை அமைச்சர் சரஸ்வதி குறிப்பிட்டார்.

சிங்கப்பூரில் 150 ஆண்டுகள் தமிழ் வளர்த்த தமிழ் முஸ்லிம்கள்

எம். இலியாஸ் படம்: கி.ஜனார்த்தனன்

தமிழவேள் நற்பணி மன்றத்தின் செயலாளர் எம். இலியாஸ் படைத்த கட்டுரை, சிங்கப்பூரின் 150 ஆண்டுகால தமிழ்ப்புழக்க வரலாற்றுக்கு தமிழ் முஸ்லிம் அளித்த பங்கினை இயம்புகிறது. தமிழ் முஸ்லிம்கள் அமைத்த வழிபாட்டுத் தலங்கள், இயற்றிய நூல்கள், நடத்திவரும் சஞ்சிகைகள் போன்ற விவரங்கள் பகிரப்பட்டன. எழுத்துத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதித்த இந்த சமூகத்தினரைப் பற்றியும் கட்டுரையில் விளக்கப்பட்டது.

திரு இலியாஸின் படைப்பைக் கேட்டிருந்தோரில் ஒருவரான மலேசிய தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் தலைவர் ப.கு. சண்முகம், “1800களில்கூட தமிழ் புத்தகங்கள் வெளிவந்திருப்பதை அறிந்து வியப்படைந்தேன். அப்போதிலிருந்து சிங்கப்பூரில் தொடங்கியது தமிழ்ப் பணி. கேட்கும்போது பெருமையாக உள்ளது,” என்று கூறினார்.

வேற்றினப் பேச்சாளர்கள்

தமிழ் மொழியில் பேசி காணொளிகளை இணையத்தில் பதிவேற்றம் செய்யும் சீனர் நிலானி. படம்: என் தமிழ் வண்ணங்கள்

மாநாட்டின் முதல் நாளில் மேடை ஏறிய மூன்று வேற்றினப் பேச்சாளர்கள் பரிமாறிய தகவல்கள் புதுமையாக இருந்தன.

சீனாவைச் சேர்ந்த நிலானி, ‘ரோஜாவே தமிழ் பேசு’ என்ற வைரமுத்துப் பாடல் ஒன்றைப் பாடி உரையைத் தொடங்கினார்.

“மிக தொன்மையான, மிகப் பரவலாகப் பயன்படுத்தப்படும் இரண்டு மொழிகளைக் கற்றிருக்கிறேன். ஒன்று சீன மொழியான என் தாய்மொழி. மற்றொன்று தமிழ் மொழி,” என்று கூறி பார்வையாளர்களின் கவனத்தைத் தன்வசப்படுத்தினார்.

2007ஆம் ஆண்டு சீனாவின் தொடர்புத்துறை பல்கலைக்கழகத்தில் பட்டக்கல்விக்காக நான்கு ஆண்டுகளாக அடிப்படையான தமிழ் மொழியைக் கற்றார் திருவாட்டி நிலானி.

தமிழ் உணவு உள்ளிட்ட கலாசாரக்கூறுகளைக் காண்பிக்கும் சமூக ஊடகக் காணொளிகளையும் வெளியிடும் திருவாட்டி நிலானி, தமிழ் தமக்குப் பாலமாகவும் செல்வமாகவும் திகழ்வதாகக் கூறினார்.

நிறைமதி என்ற மற்றொரு சீனர் உரையாற்றினார். சீனாவின் தென்மேற்கு நகரிலுள்ள கும்மிங் பல்கலைக்கழகத்தின் தமிழ் துறையில் இவர் ஆசிரியராகப் பணியாற்றுகிறார். சீனாவில் தாம் பயன்படுத்தும் அடிப்படைத் தமிழ் பாடநூலைப் பார்வையார்கள் முன்னிலையில் பகிர்ந்தார்.

அமெ­ரிக்­கா­வில் பிறந்துவளர்ந்­த­ ஜப்பானியரான தாமஸ் ஹிட்­டோஷி புருக்ஸ்மா, தம் திருக்குறள் மொழிபெயர்ப்பு குறித்து பகிர்ந்துகொண்டார். திருக்குறள் பலமுறை மொழியாக்கம் செய்யப்பட்டாலும் திருக்குறள் இதுவரை ‘ஆங்கிலத்தில் திருக்குறளாக வெளிவரவில்லை’ என்றார்.

“கருத்தும் கொள்கையும் மட்டுமின்றி அவை சிறந்த வடிவத்தோடும் தாளத்தோடும் உவமையோடும் இசையோடும் மனதில் என்றென்றும் நிற்க வைக்கும் கவிநயத்தோடும் படிக்கிறோம், கேட்கிறோம், சுவைக்கிறோம்,” என்று கூறிய திரு தாமஸ், திருக்குறளை ஒரு கவிஞர் நிலையிலிருந்து வேறு மொழிகளுக்கு மொழிபெயர்க்கவேண்டும் என்றார்.

அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த ஜப்பானிய இனத்தவரான தாமஸ் ஹிட்­டோஷி புருக்ஸ்மா. படம்: கி.ஜனார்த்தனன்

பகிரப்பட்ட கட்டுரைகள்

ஆய்வுக்கட்டுரைகளில் பெரும்பாலானவை எழுத்தியல், வாழ்வியல் சார்ந்தவை. இலக்கண நூல் வழியாகவும் பேச்சுவழக்கு வாயிலாகவும் தமிழ் மொழிக்கூறுகளை நுணுகி ஆராயும் கட்டுரைகள் பல படைக்கப்பட்டிருந்தன.

பண்டைய நூல்களின் செய்யுள் வகைகள், தற்கால நூல்கள், தமிழகத்திற்கு வெளியே இயற்றப்பட்ட புனைவுகள் போன்றவற்றை ஒட்டிய தலைப்புகள் இடம்பெற்றன. அரசியல் மற்றும் ஊடகத்துறையைச் சேர்ந்த தமிழர்கள் பற்றியும் உணவு, வேளாண்மை, பாரம்பரிய மருத்துவம் பற்றியும் ஆய்வுகள் எங்கெங்கோ அகன்றன.

‘இணையக் காலகட்டத்தில் தமிழ் மொழி’ என்ற மாநாட்டின் கருப்பொருளுடன் சில கட்டுரைகளே பொருந்தின. ‘உலகளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் சமூக வலைத்தளங்கள் வழியான போலி செய்திகள்’ என்ற கட்டுரை அதில் ஒன்று.

செயற்கை நுண்ணறிவு அதன் வேர்களை ஊன்றிக் கிளைகளாக விரியும் இக்காலகட்டத்தில் அது தொடர்பான கட்டுரைகள் மாநாட்டில் இடம்பெற்றிருக்கலாம் எனத் தோன்றியது. இத்தகைய விவகாரங்களைத் துணிச்சலுடனும் அதே நேரத்தில் முறைமை பின்பற்றியும் தமிழ் வழியாக ஆராய்வது மொழியின் வளர்ச்சியைத் துரிதப்படுத்தக் கைகொடுக்கும்.

இத்தனை தமிழர்கள் ஒரே இடத்தில் திரண்டுவர மாநாடு ஒரு வாய்ப்புள்ளதால் தாம் மகிழ்வதாகக் கூறினார் கோலாலம்பூரைச் சேர்ந்த ஆசிரியர் மாரிமுத்து அய்யாதுரை. இருந்தபோதும், மாநாட்டின் கருப்பொருளின் அடிப்படையில் பெரும்பாலான படைப்புகள் அமையாதது ஒரு குறையாகும் என்றார் அவர்.

முந்தைய ஆராய்ச்சி மாநாட்டுக்கும் அண்மையில் நிகழ்ந்த ஆராய்ச்சி மாநாட்டுக்கும் இடையே புதுமையோ உருமாற்றமோ இருப்பதாகத் தெளிவாகத் தென்படவில்லை என்றார் கிள்ளானைச் சேர்ந்த இயந்திரப் பொறியாளர் ஆறுமுகம் சிங்காரம், 72.

“இனிவரும் காலங்களில் தமிழ் மொழி விழா என்று சொன்னால் மட்டும் போதும். ஆராய்ச்சி மாநாடு எனச் சொல்லவேண்டாம்,” என்றார் அவர்.

படைக்கப்பட்ட கட்டுரைகள் முழுமையாக ஆவணப்படுத்தப்பட்டு மலராக வெளியிடப்பட்டால் மேலும் சிறப்பாக இருந்திருக்கும் என்று தஞ்சாவூரைச் சேர்ந்த முனைவர் உ. பிரபாகரன் கூறினார்.

வெவ்வேறு இடங்களாகப் பிரிந்து செல்லாமல் ஒரே இடத்தில் கட்டுரைப் பகிர்வுகள் அனைவரின் முன்னிலையில் இடம்பெற்றிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும் என்றார் கிள்ளானைச் சேர்ந்த தமிழ்ப்பள்ளி ஆசிரியர் கலாராணி சிவராமன். இருப்பினும் மாநாட்டை அவர் பாராட்டி, “தமிழ் அழியும் எனச் சொல்வோர் மத்தியில் தமிழ் எவ்வாறு வாழும் என்பதைத் தெளிவுபடுத்தும் மிக அருமையான நிகழ்வு இது,” என்றார் திருவாட்டி கலாராணி.

அடுத்த மாநாடு சிங்கப்பூர், தமிழகம் அல்லது புதுச்சேரியில் நடைபெறலாம் என்று ஏற்பாட்டாளர்கள் நிறைவு விழாவில் கூறினர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!