பாதிப்பைப் புறந்தள்ளி சாதித்த பெண்மணி

இளம் வயதிலேயே ‘பைபோலார் டிஸ்ஆர்டர்’ எனும் இருமனக் குழப்பக் கோளாறு, இல்லற வாழ்வில் தோல்வி, தனிமை என வாழ்வில் பல்வேறு இன்னல்களைக் கடந்து வந்துள்ளார் ஓய்வுபெற்ற வழக்கறிஞரான சுசித்ரா வாசு. தற்போது 62 வயதாகும் இவர் கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக இருமனக் குழப்பக் கோளாற்றால் அவதியுறுகிறார். 

இயல்பாகவே கல்வியில் அதிக நாட்டம் கொண்ட இவர் பள்ளிப்படிப்பை முடித்தபின் வழக்கறிஞராக வேண்டும் என்ற தன் இளவயதுக் கனவை நனவாக்க லண்டனில் சட்டத் துறையில் பட்டப்படிப்பை மேற்கொண்டார். 

தன்னுடைய 20வது வயதில் படித்துக் கொண்டிருக்கும்போதே காதல் கணவரைக் கரம்பிடித்து மகிழ்வுடன் இல்லற வாழ்வில் அடியெடுத்து வைத்த இவருக்கு இடி காத்திருந்தது. 

தகாத வார்த்தைகளால் எப்போதும் இவரின் மனத்தைப் புண்படுத்தி நிம்மதியைக் குலைத்தார் மாமியார். நாளடைவில் அடிப்படை மரியாதைகூடத் தரத் தவறிய கணவர் குடும்பத்தினரால் மிகுந்த இடர்களைச் சந்தித்தார் சுசித்ரா. இவை அனைத்தையும் அறிந்தபோதும் எதிலும் தலையிடாமல் மெளனம் சாதித்தார் கணவர். இனி தாங்கமுடியாது என்ற கட்டத்தில் தன் 25வது வயதில் சட்டபூர்வமாக விவாகரத்து பெற்றார் சுசித்ரா. 

அதே ஆண்டில் தன்னுடைய பணி நிமித்தமான ‘பார் கவுன்சில்’ தேர்விற்கு இரவு பகலாகத் தயாராகிக் கொண்டிருந்தார் இவர். கணவரைப் பிரிந்த தனிமை, தேர்வினால் மனஅழுத்தம் என துயருற்ற இவர் மிகுந்த மனவுளைச்சலுக்கு ஆளானார். மருத்துவரை அணுகியபோது, தான் இருமனக் குழப்பக் கோளாற்றால் பாதிக்கப்பட்டதை அறிந்து அதிர்ந்துபோனார் சுசித்ரா. 

“அந்த நாளை இன்றளவும் மறக்க முடியாது. என் உலகமே இருண்டதைப்போல உணர்ந்தேன். இருப்பினும் என் பெற்றோரின் ஊக்கத்தால் தொடர்ந்து பணியில் கவனம் செலுத்த முடிவு செய்தேன். சிங்கப்பூர் வழக்கறிஞர் சங்கத்திடம் என் நிலைமை குறித்து எடுத்துரைத்தேன்,” என்று கூறினார் சுசித்ரா. 

பாதிப்பு லேசாக இருந்த சூழலில் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு வழக்கறிஞராக குற்றவியல் மற்றும் குடும்ப நலச் சட்டங்கள் தொடர்பான வழக்குகளைக் கையாண்டு வந்தார். பின்னர் பாதிப்பு கடுமையாகவே நீதிமன்றத்தில் வாதிட வேண்டாம் என்று முடிவெடுத்து இதே பணியில் வேறு பொறுப்புகளுக்காகத் தன்னைத் தயார்ப்படுத்த முனைந்தார். 

நிறுவனங்களுக்கு சட்ட ஆலோசனை வழங்கும் பணியில் ஈடுபட முடிவெடுத்த இவர் அதற்காக தன்னை மேம்படுத்திக்கொள்ள ஆஸ்திரேலியா சென்று கடல்துறை சட்டம் தொடர்பில் ஈராண்டுகள் மேற்கல்வி பயின்றார். 

1996ஆம் ஆண்டு அப்படிப்பை முடித்து சிங்கப்பூர் வந்த இவர் 2015ஆம் ஆண்டு வரையிலும் சட்ட ஆலோசனை வழங்கும் பணியில் ஈடுபட்டார். “ஒவ்வொரு நாளும் போராட்டமாகவே இருக்கும். மனநிலை அவ்வப்போது மாறிக்கொண்டே இருக்கும். திடீரென மணிக்கணக்கில் அழுதுகொண்டே இருப்பேன். பிறகு திடீரென ஆக்கபூர்வமான மனநிலையில் உற்சாகத்துடன் செயல்படுவேன்,” என்று விவரித்தார் சுசித்ரா. 

உரிய சிகிச்சை முறைகளைப் பின்பற்றி மருந்துகளைத் தவறாமல் உட்கொண்டால் இருமனக் குழப்ப பாதிப்பை கட்டுக்குள் வைத்திருக்க முடியும் என்றார் இவர். 

“வாழ்க்கை நாம் எதிர்பார்த்ததுபோல இருக்காது என்பதற்கு என் வாழ்வு ஒரு சான்று. எந்தச் சூழலிலும் தன்னம்பிக்கையைக் கைவிடாது தொடர்ந்து போராடுவதே நம் வாழ்வை அழகானதாக்கும்,” என்றும் இவர் கூறினார். 

மனநிலை அவ்வப்போது மாறினாலும் தன் பணியில் முழுக்கவனம் செலுத்தினார் சுசித்ரா. மேலும் இவர் நிறுவனங்களுக்கு சட்ட ஆலோசகராகப் பணியாற்றிய காலகட்டத்தில் 18 ஆங்கிலப் புத்தகங்களுக்கு ஆசிரியராகவும் துணை ஆசிரியராகவும் பங்களித்துள்ளார். அவற்றில் தன்முனைப்பு, தன்னம்பிக்கையைத் தூண்டும் புத்தகங்களும் கடல்வழிப் போக்குவரத்து சார்ந்த சட்ட நூல்களும் அடங்கும்.

வசதியான குடும்பத்தில் பிறந்து வளர்ந்த இவருக்கு பொருளாதாரச் சிக்கல்கள் இல்லை. தனது மனநிலை பாதிப்பை ஏற்றுக்கொண்டு அதற்கேற்ப வாழ்க்கைமுறையை மாற்றிக்கொண்டு பெற்றோருடன் வாழ்ந்து வந்த இவரை 2018ஆம் ஆண்டு மீண்டும் தனிமை சூழ்ந்தது. அந்த ஒரே ஆண்டில் பெற்றோர் இருவரும் மறைந்த சூழலில் இவரின் மன பாதிப்பு அதிகமானது. 

“2018ஆம் ஆண்டை என்னால் மறக்கவே முடியாது. செய்வதறியாமல் திகைத்த சூழலில் மூத்த சகோதரரின் அறிவுரைப்படி கலையில் கவனத்தை திசைதிருப்பினேன்,” என்று கூறினார் சுசித்ரா. 

தன்னைப் போன்றோருக்கு வரைதலும் வண்ணம் தீட்டுதலும் மிகுந்த மன அமைதியையும் புத்துணர்ச்சியையும் தரும் என்று இவர் தெரிவித்தார். “இதை அனுபவபூர்வமாக சில மாதங்களிலேயே உணர்ந்த நான் தொடர்ந்து பல்வேறு விதமான ஓவியங்களை வரைந்தேன். இது வரையில் 135க்கும் மேற்பட்ட ஓவியங்களை வரைந்துள்ளேன்,” என்றும் கூறினார். 

தான் வரையும் ஒவ்வோர் ஓவியமும் தன் உணர்வுகளின் வெளிப்பாடே என்று கூறிய இவர், தன்னுடைய ஓவியங்கள் பலவற்றை முதியோர் காப்பகங்களுக்கும் ஆதரவற்றோர் இல்லங்களுக்கும் அன்பளிப்பாக வழங்கி வருகிறார். அதுமட்டுமல்லாமல் வறியோர்க்கும் மாற்றுத் திறனாளிகளுக்கும் தன்னால் முடிந்த பொருளாதார உதவிகளையும் செய்துவருகிறார் சுசித்ரா.  

“வாழ்க்கை என்பது ஒருமுறை மட்டுமே கிடைக்கும் வாய்ப்பு. இந்தப் புனிதப் பயணத்தில் முடிந்த அளவு இன்பம் அனுபவிக்க வேண்டும். நம்முடைய குறைகளைப் பெரிதுபடுத்தாமல் நிறைகளை நினைத்து, கூடுமானவரையில் அடுத்தவருக்குப் பயனுள்ள வகையில் வாழ்வதே மனநிறைவை அளிக்கும். மனநிறைவே ஒவ்வொரு மனிதரும் அடைய வேண்டிய உன்னத நிலை,” என்று வளர்ந்த குழந்தையாய் மலர்ந்த முகத்துடன் கூறும் சுசித்ரா ஒரு முன்னுதாரணப் பெண்மணி என்பதில் ஐயமில்லை. 

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!