அப்பா

“அம்மா எவ்­வ­ளவு நேரம்­தான் இப்­படி அழு­து­கிட்டே இருப்­பீங்க? நேத்து சாயந்­த­ரம் சாப்­பிட்­டது. ஒரு சேன்­விச்­சா­வது வாங்­கு­றேன்,” என்று கண்­களை மூடிக்­கொண்­டி­ருந்த தங்­கத்­தி­டம் மெது­வா­கச் சொல்­லிப் பார்த்­தான் வேலன். அவர் உறங்­க­வில்லை என்று அவ­னுக்­குத் தெரி­யும்.

“அவரு உங்­க­ளுக்கு புருஷனா வும் இருக்கல்ல, எனக்கு அப்­பா­வா­­வும் ஒண்ணும் செய்­யல. எத்­தனை நாள் பட்­டினி கிடந்­தி­ருப்­போம். எதிர்காலத்த நினெச்சி எவ்வளவு தவிச்சிருப்போம்! கடை­சி­யில சிபிஎஃப் காச­யும் எடுத்­து­கிட்டு ஊருக்­குப் போனாரே! அந்த ஆளுக்காக நீங்க இப்­படி உங்க உடல ஏன் வருத்­திக்­கி­றீங்க?”

கண்­க­ளைத் திறந்து வேல­னைப் பார்த்­தார் தங்­கம். ஒரு வினாடி அனல் தெறித்து தணிந்­தது. உனக்கு புரி­யாது. எனக்­குன்னு அடை­யா­ளமா இருந்­த­வரு அவருதான். இனி­மே எனக்கு அந்த அடை­யா­ளம் இல்ல!” சொல்­லும் பொழுதே அவ­ரது கண்­கள் பனித்­தன. முகத்­தைத் திருப்­பிக்­கொண்டு கண்­களை மீண்டும் மூடிக்­கொண்­டார்.

“தங்­கம்! நான் ஒண்ணு சொல்லு­ வேன் கேட்­பியா? அக்­கா­வுக்கு பிள்ளை இல்­லா­த­தால, மாமா­வுக்கு பொண்ணு பார்க்­கு­றாக. வேற ஒரு பொண்ணு வந்தா, அவ­ளுக்கு புள்ள குட்­டீன்னு ஆனுச்­சின்னா அப்­பு­றம் நம்ம அக்­காவ ஒதுக்கி வச்­சு­டு­வாக. உன் அண்­ணன் வேற படிச்சி ­கிட்டு இருக்­கான். நம்­மள, முக்­கி­யமா உன் அக்கா வாழ்க்­கையை உன்­னா­ல­தான் காப்­பாத்த முடி­யும் ஆயி,” என்று பின்­வா­சல் படி­யில் அமர்ந்து படித்­துக்­கொண்­டி­ருந்த அவ­ளது கால­ரு­கில் அமர்ந்து தரை­யைப் பார்த்­த­வாறே கண்­ணீர்­விட்­ட­படி அம்மா சொன்­ன­போது தங்கத்­துக்கு 15 வயது.

தங்கத்தின் அப்பாவுக்கு சிலோன் சம்பாத்தியம். குடும்­பம் செழிப்­பா­கவே இருந்­தது. திடீரென்று அவர் சேர்த்த சொத்து அனைத்­தும் கொள்ளைபோனதோ அப­கரிக்­கப்­பட்­டதோ தெரி­ய­வில்லை. ஏமாற்­றம் தாள­மு­டி­யா­மல் மதி­யி­ழந்த நிலை­யில் தாய­கம் திரும்­பி­ய­வர் சிறிது காலத்­தில் இறந்­து­விட்­டார். மாமா சிங்­கப்­பூ­ரில் இருந்தார். அப்பா­வின் சாவுக்கு வந்­த­போது உற­வு­கள் சேர்ந்து அக்காவை அவருக்குக் கல்­யா­ணம் பண்ணி வைத்­தன. அப்பாவுக்குப் பிறகு மாமாதான் குடும்பத்தைப் பார்த்துக் கொள்கிறார்.

“தங்­கம்... நீதாம்மா உங்க மாமா­வைக் கட்­டிக்­க­ணும். வேற யாரு வந்­தா­லும் உங்க அக்கா கதி அதோ­க­தி­தான், நீயின்னா, அக்­கா­வுக்கு ஒத்­தா­சையா இருப்பே, சண்டை சச்­ச­ரவு இல்­லாம இருக்­கும், மாமா­வும் தொடர்ந்து நம்­மள கவ­னிச்­சிக்­கி­ரு­வாரு.”

அக்­கா­வுக்­குத் தாலி கட்­டும்­போது மாமா­வின் மடி­யில்­தான் உட்­கா­ரு­வேன் என்று அடம்­பி­டித்­த­தால் தங்­கத்தை மடி­யில் வைத்­துக் ­கொண்டே தாலி­கட்­டி­னார் மாமா. தங்கத்­துக்கு முத­லில் நினை­வுக்கு வந்­தது கலங்­க­லான அந்­தக் காட்சி­ தான். அந்த மாமாவை நான் கல்­யா­ணம் செய்­வதா, என் படிப்பு, டீச்­சர் ஆவது...

தங்­கத்தை யோசிக்­க­வி­டா­மல் அம்மா தொடர்ந்­தார். “இது­தான் உன் அக்­கா­ளின் விருப்­ப­மும்கூட. இத நீ செய்­ய­லேன்னா அப்­ப­றம் நாம குடும்­பத்­தோட குளத்­தி­லேயோ, தண்­ட­வா­ளத்­து­லேயோ போய் விழ­வேண்­டி­ய­து­தான்.”

“அப்­பாயி! அப்­பாயி! இந்­தாங்க சாப்­பி­டுங்க! சாப்­பி­டுங்க அப்­பாயி!” பேத்­தி­யின் மழ­லைக் குர­லில் நினை­வு­க­ளி­லி­ருந்து மீண்ட தங்­கம், பேத்தி நிலா நீட்­டிய பிஸ்­கட்டை வாங்­கிக்­கொண்­டார். “சாப்­பி­டுங்க அப்­பாயி” என்று கையை எடுத்து வாய­ருகே வைக்­கும் நாலு வயது குழந்­தை­யி­டம் மறுப்பு தெரி­விக்க முடி­ய­வில்லை.

மண­மாகி ஐந்து ஆண்­டு­கள் கழித்து வேலன் பிறந்­த­போது ஊருக்கு வந்­தி­ருந்த அப்பா, தங்­கத்­தை­யும் வேல­னை­யும் தம்­மோடு சிங்­கப்­பூ­ருக்கு அழைத்து வந்­தார்.

வீரா­சாமி ரோட்­டி­லி­ருந்த பல அறை­கள் கொண்ட, பல குடும்­பங்­கள் வாழ்ந்த ஒரு கடை­வீட்­டில் வாழ்ந்த நாட்­கள் வேல­னுக்கு இன்­னும் பசு­மை­யாக நினை­வுள்­ளது.வீட்­டின் நடுவே ஒரு சிறிய கதவு, அதைக் கடந்து படி­கள் வழியே இரண்­டாம் மாடிக்­குச் சென்­றால் அங்கே இருக்­கும் பல அறை­களில் ஒன்­று­தான் அவர்­க­ளின் வீடு. ஒரு பெரிய சமை­ய­லறை. கீழ்த்­த­ளத்­தில் ஒரு கழி­வறை, ஒரு குளி­ய­லறை, மேலும் சில வாடகை அறை­கள்.

ஒரு மெத்தை, ஓர் அல­மாறி, ஒரு மடித்து வைக்­கக்­கூ­டிய மேசை, டிவி பெட்டி இவை­தான் அவன் வீட்­டுப் பொருட்­கள்.

கண்­டங் கர்­பாவ் மெத்­தெ­டிஸ்ட் சர்ச் தேவா­ல­யத்­தில் பாலர் வகுப்­பில் படித்­த­போது, எதிரே உள்ள காப்­பிக்­க­டை­யில் கெட்­டிச் சட்­டி­னியுடன் தோசை­யும் அப்­ப­மும் வாங்க 20 காசை அம்மா எண்ணி எண்­ணிக் கொடுப்­பதை நினைக்க இப்­போது மனம் வலித்­தது.

அப்பா விடி­யும் முன்பே வேலைக்­குக் கிளம்­பி­வி­டு­வார். மதிய உண­வுக்கு வீட்­டுக்கு வரும் அப்­பா­வின் மேல் ஒரு துர்­நாற்­றம் வீசும். அவர் வீட்­டுக்கு வந்­துமே மூக்­கைப் பிடித்­துக்­கொண்டு பக்­கத்து வீட்­டுக்கு ஓடி­வி­டு­வான் வேலன். பிறகு மாலை­யில் வேலைக்­குச் சென்­றால் இரவு வெகு­நே­ரம் கழித்­துத்­தான் வரு­வார். அதற்­குள் வேலன் தூங்கி விடு­வான்.

ஆண்­டுக்கு ஒரு­முறை ஜூன் விடு­மு­றை­யில் அப்பா, அம்­மா­வோடு கிரா­மத்­துக்­குச் செல்­லும் நாட்­க­ளுக்­காக ஆண்டு முழு­வ­தும் காத்­தி­ருப்­பான் வேலன். 1980களில் சென்­னைக்கு மட்­டும்­தான் விமா­னப் போக்­கு­வ­ரத்து இருந்­தது. எஸ்­ஐஏ விமா­னத்­தில்­தான் வேல­னின் அப்பா போவார். ஊர் பய­ணம் வைத்­தாலே அப்பா புது மனி­தர் ஆகி­வி­டு­வார்.

ஒரு மாதத்­துக்கு முன்­பி­ருந்தே துணி­ம­ணி­கள், கம்­பளி, சவர்­கா­ரம், வாச­னைத் திர­வி­யங்­கள், டார்ச் லைட், வானொலி, டிவி என வீட்­டில் சேரத் தொடங்­கும். முக்­கி­ய­மாக ‘மீ லீ” நகைக்­க­டைக்­குப் போகா­மல் அப்பா விமா­னம் ஏற­மாட்­டார். அதை­யெல்­லாம் பார்க்­கப் பார்க்க எதுகேட்டாலும் “காசி­லப்பா” என்று முகம் வாடும் அம்­மா­மீது கோபம் வரும்.

எப்­போ­தும் அழுக்கு டி-சட்­டை­யும் அரைக்­கால் சட்­டை­யு­மாக இருக்­கும் அப்பா, பயண நாளில் வெள்­ளைச் சட்டை, வெள்ளை பேண்டு, கறுப்­புக் கோட், கறுப்­புக் கண்­ணாடி, சங்­கிலி, மோதி­ரம், சூட்­கேஸ் என்று புது தோற்­றத்­துக்கு மாறி­வி­டு­வார். சென்னை விமான நிலை­யத்­தில் வந்து நிற்­கும் காரை நோக்கி மிடுக்­காக நடக்­கும் அப்­பா­வின் கையைப் பிடித்­துக்­கொண்டு நடக்க வேல­னுக்கு ரொம்ப பிடிக்­கும்.

பெரிய மாடி வீடு, 40 மாடு­கள் நிற்­கும் பெரிய மாட்­டுக்­கொட்­டகை, இரண்டு ஜோடி காளை மாடு­கள், பெரிய வண்டி என்று ஒரு மாத காலம் ‘பணக்­கார வாழ்க்கை’ வாழ்ந்­து­விட்டு மீண்­டும் சிங்­கப்­பூ­ரின் கூண்­டுக்­குள் திரும்­பும்­போது பல நாட்­கள் வேலன் தூங்­கா­மல் அழு­து­கொண்­டி­ருப்­பான்.

வேலன் உயர்­நிலை ஒன்­றில் படித்­த­போது அந்த ஒரு மாத வாழ்­வுக்­கும் முடிவு வந்­தது. அப்­பா­வுக்­கும் அம்­மா­வுக்­கும் பேச்­சு­வார்த்தை நின்­று­போ­னது. அப்பா வீட்­டில் சாப் ­பி­டு­வ­தில்லை. வீட்­டுச் செல­வுக்கு பணம் கொடுப்­ப­தை­யும் நிறுத்­தி­விட்­டார். வெளி உல­கம் தெரி­யாமல் வீட்­டுக்­குள்­ளேயே இருந்த தங்­கத்­திற்கு சர­ள­மாக ஆங்­கி­லம் வராது. பசார் மலாய் கொஞ்­சம் தெரி­யும். அக்­கம்­பக்­கத்­தி­லுள்­ள­வர்­க­ளி­டம் சொல்லி வைத்து முத­லில் துப்­பு­ர­வா­ளர் வேலைக்­குப் போனார். பிறகு தொழிற்­சா­லை­யில் நாட்­கூலி வேலைக்­குப் போனார்.

வேல­னி­டம் அதிக கண்­டிப்­பு­டன் நடந்­து­கொள்­ளத் தொடங்­கி­ய­தும் அதன் பிற­கு­தான். பதின்ம வயது, கூடப்­பி­றந்­த­வர் எவ­ரும் இல்லை, வீட்­டுப் பிரச்­சி­னை­க­ளால் திசை மாறி­வி­டு­வானோ என்ற பயம் அவ­ருக்கு அதி­கம்.

அம்­மாவை அடிக்க வந்த அப்­பா­வைத் தள்­ளி­விட்ட நாளி­லி­ருந்து அப்­பா­வு­டன் பேசு­வதை அவ­னும் நிறுத்­திக்­கொண்­டான். அம்மாவின் கண்­டிப்பு அப்­பா­மீ­தான வெறுப்­பாக வளர்ந்­தது.

வேலனது அப்பா சின்ன வய­தி­லி­ருந்தே சிங்­கப்­பூ­ரில் வாழ்ந்தா­லும் நிரந்­த­ர­வா­சி­யா­கத்­தான் இருந்­தார். வேல­னும் தங்­க­மும் ‘டிபெண்­டண்ட்’ விசா­வில் இருந்தனர்.

‘இந்­தியா ஓராங், பாலே இந்­தி­யாலா!” என்று பள்­ளி­யில் சில மாண­வர்­கள் பரி­கா­சம் செய்­யும்­போ­தெல்­லாம் வேல­னின் நெஞ்­சம் பதை­ப­தைக்­கும். அம்­மா­வும் தானும் ஊரில் அநா­தை­யாக சுற்­று­வ­தா­க­வும் பெரிய வீட்­டில் வேலை செய்­த­வர்­க­ளெல்­லாம் தன்­னைப் பார்த்­துக் கேலி செய்­வ­தா­க­வும் கனவு வரும்.

“நான் ஏன் ஊருக்­குப் போக­வேண்­டும்?” என்று பற்களை நெரித்தபடி, முதுகை உரிக்­கும் அம்­மா­வின் அடி­க­ளைப் பற்­றிக்­கூடக் கவ­லைப்­ப­டா­மல் சில­ரின் மூக்கை உடைத்­தி­ருக்­கி­றான்.

ராணுவ சேவையை முடித்து குடி­யு­ரிமை வாங்­கும் வரை­யில் அவ­னுக்கு அந்­தக் கனவு அடிக்­கடி வரும்.

திருச்சி விமான நிலைய வாச­லில் காத்­தி­ருந்த பெரி­யப்பா மகன் மாரி­முத்து அவர்­க­ளைக் கண்­ட­துமே ‘ஓ’வென்று அழத் தொடங்­கி­னார். அது­வரை அமை­தி­யாக கண்­ணீர் வடித்­துக்­கொண்­டி­ருந்த அம்மா, அவர் கையைப் பிடித்­த­படி வெடித்து அழத்­தொ­டங்­கி­னார்.

வேலன் பெட்­டி­களை காருக்­குள் எடுத்து வைப்­ப­தில் மும்­மு­ரம் காட்­டி­னான்.

“இப்­போ­தா­னம்மா ஒரு மாதத்­திற்கு முன்­னால வந்து பாப்­பா­வுக்கு முடி­யி­றக்­கிட்டு போனீங்க. அப்­பெல்­லாம் நல்­லாத்­தான் இருந்­தாரு. இன்­னும் 5 வரு­ஷத்­துல 90வது பிறந்­த­நாள விம­ரி­சையா கொண்­டா­ட­னும்­னு­கூட சொன்­னாரே.

“காலை­யில லேசா வயித்­துப்­போக்­குன்னு சொன்­னாரு. தொட்­டுப் பார்த்தா உடம்பு அனலா கொதிச்­சது. பக்­கத்து ஊரு டாக்­டர், உடனே பெரிய ஆஸ்­பத்­தி­ரிக்கு கொண்டு போங்­கன்­னாரு. 10 நிமிஷத்­துல அங்கு போயிட்­டோம். என்ன நடந்­த­துன்னே தெரி­யல, அப்­ப­டியே மூச்ச இழுத்தவருதான்...!” அழு­த­படி மாரி­முத்து அண்­ணன் சொன்­ன­தைக் காதில் வாங்­கி­ய­வாறே, தலை­யில் அடித்­துக்­கொண்டு அழும் அம்­மாவை ஓரக்­கண்­ணால் கவ­னித்­தான் வேலன்.

கிரா­மத்­தில் ஒரு நாளைக்கு மேல் உடலை வைத்­தி­ருக்க மாட்­டார்­கள். அவர்­கள் வரும்­வ­ரை­யில் உடலை ஐஸ் பெட்­டி­யில் வைக்க ஊர் பெரி­ய­வர்­க­ளு­டன் சண்டை போட்டு ஏற்­பாடு செய்­த­வர் மாரி­முத்து அண்­ணன்­தான்.

ஊர் எல்­லையை அடை­யும் முன்­னரே சாவின் சத்­தம் கேட்­கத் தொடங்­கி­யது. வீட்­டின் வெளியே மேள, தாள வாத்­தி­யங்­கள் இசைத்­துக்­கொண்­டி­ருந்­தன. ஒரு புறம் ஒப்­பாரி வைக்க, மறு­பு­றம் குற­வர்­கள் ஆடிக்­கொண்­டி­ருந்­த­னர். கூட்­டத்தை மெல்ல விலக்­கி­ய­வாறே வீட்­டி­னுள் நுழைந்­தான் வேலன்.

அந்­தக் கிரா­மத்­துக்கு வந்­தி­ருக்­கும் முதல் ஐஸ் கண்­ணா­டிப் பெட்­டி­யைத் தொட்­டுப் பார்ப்­ப­தற்­காக சிறு­வர்­களும் பெண்­களும் கூட்­ட­மாக வந்துபோய்­க்கொண்­டி­ருந்­த­னர். அவன் பெட்டி அருகே போன­தும் அரு­கில் நின்­ற­வர்­கள் வில­கி­னர். பெட்­டி­யைத் தொட்டு எல்­லாம் சரி­யாக இருக்­கி­றதா என்று பார்த்­த­வ­னின் பக்­கத்­தில் வந்து சிலர் தோளில் கைவைத்­துத் தேம்­பத் தொடங்­கி­னர்.

கல்­பனா அழு­வ­தைப் பார்த்து நிலா­வும் அழத் தொடங்­கி­விட்­டாள்.

“தம்பி.... இப்­படி உங்­க­ளத் தனியா விட்­டுட்­டுப் போயிட்­டாரே,” என்­ற­படி அவன் அரு­கில் வந்த ஒரு மூதாட்­டியை மெல்ல விலக்­கி­ய­படி, சட்­டை­யைக் கழட்­டிக்­கொண்டே வாசல் பக்­கம் நடந்­தான். ஒப்­பாரி வைக்­கும் பெண்­க­ளுக்கு நடுவே பெருங் குர­லெ­டுத்து அழுது­ கொண்­டி­ருக்­கும் அம்­மா­வின் பக்­கம் திரும்­பா­மலே, “காரி­யத்த தொடங்­குங்க!” என்­றான் மாரி­முத்து அண்­ண­னைப் பார்த்­த­படி.

வேல­னின் அப்பா கைக்­கு­ழந்­தை­யாக இருந்­த­போது சிங்­கப்­பூ­ருக்கு வந்த அவ­ரு­டைய தந்தை குழந்­தை­வேலு, ஜப்­பான்­கா­ரன் போட்ட குண்­டில் இறந்­து­விட்­டார்.

தந்தை முகம் தெரி­யாத வேல­னின் அப்பா 13 வய­தில் சிங்­கப்­பூர் வந்து, தாய்­மா­மா­வின் நிழ­லில் வளர்ந்­தார். படிப்பு இல்­லா­த­தால் பொதுப் பய­னீட்­டுத் துறை­யில் வேலைக்­குச் சேர்ந்­தார். குப்பை அள்­ளும் லாரி பின்­னால் ஓடி குப்­பை­களை அள்­ளிக்­கொட்­டும் தொழி­லா­ளி­யாக ஓடி ஓடி உழைத்­தார்.

லாரி­யின் பின்­னால் இரு புறங்­க­ளி­லும் இருக்­கும் சிறிய இடத்­தில் நின்­ற­வாரே இரு ஊழி­யர்­கள் பய­ணிக்­க­வேண்­டும். லாரி நகர்ந்­து­கொண்டே இருக்­கும், அதன் பின்­னால் ஓட்­ட­மும் நடை­யு­மாக ஊழி­யர்­கள் செல்ல வேண்­டும். சில சம­யம் வெறும் கைக­ளால் குப்­பை­களை அகற்­ற­வேண்­டும், கன­மான பெரிய பொருட்­க­ளைத் தூக்­கிப் போட­வேண்­டும். கத்தி, ஊசி, துரு பிடித்த இரும்­புச் சாமான்­கள் கைக­ளைப் பதம் பார்க்­கும், மாத வரு­மா­னம் $300-$400 வரை­தான். முற்­ப­கல் 2 மணி முதல் காலை 10 மணி வரை இந்த வேலையை முடித்­து­விட்டு பின்பு கார் கழு­வும் வேலை பார்த்­தார் அப்பா.

அதற்­கா­கவே இந்­திய ஹெர்­கு­லீஸ் சைக்­கிள் ஒன்றை ரோச்­சோர் ரோடு சந்­தை­யில் வாங்கி இருந்­தார். சைக்­கிள் கேரி­ய­ரில் ஒரு பெரிய வாளி, கார் கழு­வு­வ­தற்­கான பஞ்சு, துணி­கள், சோப்பு. வாளி­யை­யும் கேரி­ய­ரை­யும் சேர்த்­துக் கட்ட காற்று வெளி­யேற்­றப்­பட்ட மிதி­வண்டி டயர் இவற்­றைக் கொண்டு 60க்கும் மேற்­பட்ட கார்­களைக் கழு­வு­வார். அதில்­தான் காசு பார்ப்­பார். மாதம் கிட்­டத்­தட்ட $3,000 வரை கிடைக்­கும்.

இர­வில் வீட்­டுக்­குப் பக்­கத்­தில் உள்ள காப்­பிக்­க­டை­யில் மேசை துடைப்­பது, தட்டு, குவ­ளை­க­ளை­யும் கழு­வு­வது என்று எடு­படி வேலை பார்ப்­பார். அவ்­வப்­போது தோட்ட வேலை, பஸ் டிப்­போ­வில் இர­வில் பேருந்­து­க­ளைக் கழு­வு­வது என்று வேறு வேலை­க­ளை­யும் செய்­வார். மாதம் $4,000க்கு மேல் வரு­மா­னம் ஈட்­டி­னார். ஆனால் வீட்­டுச் செல­வுக்கு எந்த சம­யத்­தி­லும் $500க்கு மேல் கொடுக்­க­மாட்­டார்.

சம்­பா­திக்­கும் பணத்தை அப்­ப­டியே முதல் மனை­விக்கு அனுப்பி வைத்­து­வி­டு­வார். விவ­சாய நிலம், ஆடு, மாடு, தோட்­டம், கொல்லை என ஊரில் சொத்­து­கள் சேர்ந்­தது.

அவ­ருக்­கென்று அவர் செய்­யும் ஒரே செலவு தமிழ் முரசு படிப்­ப­து­தான். தமி­ழ­வேள் கோ சாரங்­க­பாணி­யின் தலை­யங்­கங்­க­ளி­னா­லும் அவ­ரது முற்­போக்­குச் சிந்­த­னை­யா­லும் கவ­ரப்­பட்­ட­வர்­களில் வேல­னின் தந்­தை­யும் ஒரு­வர்.

தமி­ழர்­க­ளைச் சிங்­கப்­பூர் குடி­யு­ரிமை பெற கோசா ஊக்­கு­வித்­த­போது தனது ஆவ­ணங்­களை எடுத்­துக்­கொண்டு தமி­ழர் சீர்­தி­ருத்­தச் சங்­கம் சென்ற அப்­பாவை அவ­ரது தாய்­மாமா பார்த்­து­விட்­டார்.

“சிங்­கப்­பூர் சிடி­சன் ஆனா உன் இந்­திய பாஸ்­போர்ட்ட எடுத்­துக்­கு­வான், அப்­பு­றம் நீ ஊருக்கு போக முடி­யாது, அங்க நிலம் வாங்க முடி­யாது. நமக்கு இங்க என்ன இருக்­கும்? வந்­தோமா, சம்­பா­திச்­சோமா, முடி­யாத காலத்­துல ஊருக்­குப் போனோ­மான்னு இரு,” என்று மாமா கூற, மறு­பேச்சு பேசா­மல் வீட்­டுக் குத் திரும்­பி­விட்­டார் அப்பா.

கடைசி காலம் வரை­யில் நிரந்­த­ர­வா­சி­யா­கவே இருந்த அப்பா, ஐந்­தாண்­டு­க­ளுக்கு முன் அதை­யும் ரத்து செய்து, மத்­திய சேம­நிதி பணத்­தை­யும் எடுத்­துக்­கொண்டு ஊருக்­குக் கிளம்பினார். உழைத்து சேர்த்த சொத்து எது­வும் அவர் பெய­ரில் இல்லை என்­பது அங்கு போன பிற­கு­தான் தெரி­ய­வந்­தது. பல வரு­ஷங்­க­ளுக்­குப் பிறகு அவ­னது போனில் அப்­பா­வின் குரல்.

“தம்பி. இங்க ஒரு எட்டு வந்­திட்டு போக முடி­யுமா?”

“எனக்கு நேர­மில்லை” அதன் பிறகு அப்­பா­வி­டம் இருந்து அவ­னுக்கு அழைப்பு வர­வில்லை.

“ஆக வேண்­டி­ய­தைப் பாருங்க!” என்று யார் யாரோ உரக்­கச் சொல்­லிக்­கொண்டே இருந்­தார்­கள்.

ஈர உடம்­போடு நீர்க்­கு­டம் சுமந்து உட­லைச் சுற்றி வந்து நீரை ஊற்­றி­ய­போது, அப்பா தன்னை ஒரு­முறை கூட குளிப்­பாட்டி விட்­ட­தில்லை என்­பது நினை­வுக்கு வந்­தது. அப்­பா­வோடு கட­லில் குளிக்க வேண்­டும் என்று அவ­னுக்கு ரொம்ப ஆசை. ஈஸ்ட் கோஸ்ட் பீச்­சுக்­குப் போக­லாம் என்று பல­முறை அப்­பா­வி­டம் கெஞ்­சி­யி­ருக்­கி­றான்.

அப்பா அங்கே வேலைக்­குப் போன­போ­து­கூட அவ­னைக் கூட்­டிப் போன­தில்லை. அப்­பா­வின் மீது பட்டு வேட்­டி­யைப் போர்த்­தும்­போது சிங்­கப்­பூ­ரில் இருந்­த­வ­ரை­யில் அப்பா தனக்கு பட்டு வேட்டி வாங்­கிக்­கொள்­ளா­தது உறைத்­தது.

தங்­கத்­துக்­கும் வேல­னுக்­கும் ஆண்­டுக்கு ஒரு­முறை, தைப்­பொங்­க­லுக்கு புதுத்­துணி வாங்­கு­வார். தனக்கு அரைக்­கால் சட்­டை­யும் டீ சட்­டை­யும் வாங்­கிக்­கொள்­வார். அதையே பெரிய செல­வாக பல மாதங்­க­ளுக்­குச் சொல்­லிக்­கொண்­டி­ருப்­பார். அப்பா தீபா­வளி கொண்­டாடமாட்­டார். தீபா­வ­ளிக்கு நண்பர்கள் புதுச் சட்டை போடும்­போது தனக்­கும் வேண்­டும் என்று வேலன் பலமுறை அடம்­பி­டித்­தி­ருக்­கி­றான். அப்­போ­தெல்­லாம் “பிள்­ளையை வளக்­கத் தெரி­யல்ல” என்று தங்­கத்­துக்­கு அடி­வி­ழும்.

வெடிச் சத்­த­மும் மேளச் சத்தமும் ஆட்­ட­மும் பூச்­சொ­ரி­த­லு­மாக மிக­வும் விம­ரி­சை­யாக பாடைக்­குப் பின்­னால் கையில் தீச்­சட்­டி­யு­டன் நடந்த வேல­னுக்கு தைப்­பூ­சத்­துக்­கும் தீமி­திக்­கும் ஒரு­போ­தும் தன்னை அனுப்­பாத அப்­பாவை நினைத்து மெல்­லிய கோபம் எழுந்­தது. தன் இள­மையே அப்­பா­வால் கரு­கிப் போன­தா­கத் தோன்­றி­யது.

விற­கு­கள், வரட்­டி­கள், வைக்­கோல் என எளி­தாக எரி­யும் பொருட்­க­ளுக்கு நடுவே அப்­பா­வின் உடல் வைக்­கப்­பட்­டது. எல்­லா­ரும் கடை­சி­யாக முகம் பார்த்­த­னர்.

குளத்­தி­லி­ருந்து சேற்றை அள்ளி வந்த பங்­கா­ளி­கள் உடலைக் கூட்டுக்­குள் வைத்து அடைக்­கத் தொடங்­கி­னர்.

“இதை­யெல்­லாம் செய்ய ஆள் இருப்­பார்­களே?”

“ஓ!... வெட்­டி­யான சொல்­றீங்­களா? இப்போ யாரும் இந்த தொழி­லுக்கு வார­தில்ல. எல்­லாம் படிச்­சிட்டு டௌவு­னுக்கு போய் வேலை பார்க்­கு­றாக. எல்­லாத்­தை­யும் நாம­ளே­தான் பார்க்­கணும்,” என்ற பெரி­ய­வர் ஒரு­வர், “கடை­சியா முகத்த பாக்­க­ணுமா?” என்­றார்.

அவ­னது தலை­யாட்டலை அவர் கவ­னிக்­க­வில்லை. அவனுக்காக முகத்தை மூடாமல் பேசிக்­கொண்டே இருந்­தார்.

“இருந்­த­வ­ரைக்­கும் நல்ல திட­காத்­தி­ரமா வாழ்ந்த மனு­ஷன். சூது­வாது தெரி­யாது. எந்த கெட்ட பழக்கமும் இல்லை. யாருக்­கும் கெடு­தல் நெனச்­ச­தில்ல. அடுத்­த­வங்க காசுக்கு ஆசப்­பட்­ட­தில்ல, யார் குடி­யை­யும் கெடுத்­த­தில்ல.

“மூத்த தாரத்தை தனியாவிட்­டுட்டு­ போ­யிட்­டோம். பிள்­ளை­யில்ல, புரு­ச­னும் பக்­கத்­தில இல்­லை­யேன்னு அவ மனசு நோகக்­கூ­டா­துன்னு சம்­பா­ரிச்­ச­தை­யெல்­லாம் ஊருக்கு அனுப்பி வெச்­சாரு. ஆனா, இங்க வந்­திட்­டப் பிற­வும் உங்க நினெப்பு­தான் அவ­ருக்கு. உன்­னப் பத்­தி­யும், நிலா­வப் பத்­தி­யும் பேசாத நாளில்ல. சிங்­கப்­பூர் பாஸ்­போர்ட்ட வெட்­டி­கிட்டு வந்­தா­லும் திரும்ப அங்க போய் இருந்­துட்டு வர­னும்னு சொல்­லி­கிட்டே இருப்­பாரு. பேசாம அங்­கேயே இருந்­தி­ருக்­க­லாம்னு வருத்­தப்­ப­டு­வாரு. ம்ம்... நடக்­கு­றத யாரு தடுக்க முடி­யும்?” அவ­ரது நினை­வி­லி­ருந்து மீட்டு மீட்டு பேசிக்­கொண்டே இருந்­தார்.

“நீ கவ­லப்­ப­டாதே, நாங்க பாத்துக் ­கு­றோம்,” என்­ற மாரி­முத்து, “கொள்­ளியை வை ஐயா” என்றார். முத­லில் நெஞ்­சி­லும் பிறகு தலை­யி­லும் காலி­லும் என்று முறை­யாக தீயை வைக்­கச் சொல்­லிக்­கொ­டுத்­தார்.

தீ கொழுந்­து­விட்டு எரி­வதை வெறு­மனே பார்த்­துக்­கொண்­டி­ருந்­த­வனை மாரி­முத்து அண்­ணன் குளத்­துக்கு அழைத்­துச் சென்­றார்.

நீரில் முங்கி எழுந்து நடக்­கும்­போது வேல­னுக்கு யாரு­ட­னும் பேசத் தோன்­ற­வில்லை. எவர் பேசு­வ­தும் காதில் விழ­வில்லை.

வீட்­டுக்கு வந்­த­வன் வாச­லில் நின்று அப்­பெ­ரிய வீட்­டின், அலங்­கார வேலைப்­பா­டு­களு­டன் கூடிய தனி மரத்­தா­லான கத­வைச் சில நொடி­கள் பார்த்­தான். திறந்­தி­ருந்த கத­வின் ஊடே நேரே பெல் பாட்­டம் பேண்டு, பெரிய காலர் வைத்த சட்­டை­யு­டன், பெரிய தங்­கச் சங்­கி­லி­யும் சுருட்டை முடி­யு­மாக அப்பா. அவர் பக்­கத்­தில், கொஞ்­சம் இடை­வெ­ளி­விட்டு பெரிய பெண்­ணாக வேட­மிட்ட சிறுமிபோல் பட்­டுப்­பு­ட­வைக்­குள் மறைந்­தி­ருந்த அம்மா. அம்­மா­வின் கை கொள்­ளா­மல் கொழு­கொ­ழு­வென்­றி­ருந்த வேலன் அப்­பா­வின் திசை­யில் தாவிக்­கொண்­டி­ருந்­தான். அப்­பா­வின் முகம் நேரா­கப் பார்த்­த­படி இருந்­தது. ஐபேட்­டில் விளை­யா­டி­ய­படி நிலா வந்­து­கொண்­டி­ருந்­தாள்.

“அப்பா!”

வேலன் பெருங்­கு­ரல் எடுத்து அழு­த­படி தரை­யில் விழுந்­தான்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!