மலேசியாவில் பாதுகாவல் பணிக்கு 150,000 பாகிஸ்தானியரா? அமைச்சர் கருத்து

கோலாலம்பூர்: மலேசியாவில் 100,000 முதல் 150,000 பாகிஸ்தானியர்களை பாதுகாவல் பணிக்கு வரவழைக்கவிருப்பதாக வெளியான செய்தி குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்று மனிதவள அமைச்சர் எம்.குலசேகரன் கூறியுள்ளார்.

“அது பாகிஸ்தான் ஊடகச் செய்தி. பாதுகாப்பு குறித்த விவகாரம் என்பதால் அது உள்துறை அமைச்சின்கீழ் வரும். அதுபற்றி உள்துறை அமைச்சே முடிவெடுக்கும்,” என்றார் திரு குலசேகரன்.

பாகிஸ்தான் ஊடகம் ஒன்றில் வெளியான அந்தச் செய்தியைப் பகிர்ந்த முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக், மலேசிய ஊடகங்களில் அத்தகைய செய்தி எதுவும் வெளிவராத நிலையில் அது உண்மையா என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டிருந்தார்.

மலேசியர்களுக்கு வேலை வாய்ப்புகள் குறைவாக உள்ளன என்ற செய்தியையும் மறுத்த திரு குலசேகரன், நாடு முழுவதும் 700,000 வேலைவாய்ப்புகள் உள்ளன என்றும் குறிப்பிட்டார்.