சுடச் சுடச் செய்திகள்

முக்கிய கட்சித் தலைவர்களைச் சந்தித்த மகாதீர்; அரசாங்கம் அமைக்க புதிய திட்டம்

மலேசியாவின் இடைக்கால பிரதமர் டாக்டர் மகாதீர் முகமது இன்று (பிப்ரவரி 25) காலை முதல் தனது அலுவலகத்தில் பல முக்கிய கட்சித் தலைவர்களைச் சந்தித்ததாக பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது.

பிகேஆர் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம், பெர்சாத்து கட்சித் தலைவர் முகைதின் யாசின், அம்னோ கட்சித் தலைவர் டாக்டர் அஹகது ஸாஹிட் ஹமிடி, பிபிபி கட்சித் தலைவரும் சரவாக் முதல் அமைச்சருமான திரு அபாங் ஜொஹாரி ஓபெங்  ஆகியோரை அவர் சந்தித்ததாகக் கூறப்பட்டது.

பாஸ் கட்சித் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங், டிஏபி பொதுச் செயலாளர் லிம் குவான் எங், அமனா கட்சித் தலைவர் முகமது சாபு ஆகியோரையும் அவர் சந்தித்ததாக பிரதமர் அலுவலக அறிக்கை குறிப்பிட்டது.

பிகேஆர் கட்சியின் முன்னாள் துணைத் தலைவரான திரு அஸ்மின் அலியையும் இன்று டாக்டர் மகாதீர் சந்தித்ததாகக் குறிப்பிட்ட அறிக்கை, நாளை வாரிசான் கட்சியின் தலைவர் ஷாபி அப்டாலை சந்திப்பார் என்று தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையே, முக்கிய கட்சிகளையும் உள்ளடக்கிய அரசாங்கத்தை அமைத்து வழிநடத்தும் திட்டத்தை டாக்டர் மகாதீர் முன்மொழியக்கூடும் என்று ராய்ட்டர்ஸ் செய்தி குறிப்பிட்டது. அவர் எந்த அரசியல் கட்சியையும் சார்ந்தவராக இருக்கமாட்டார் என்றும் கட்சிப் பிரிவினைகள் இல்லாத அரசாங்கம் அமைக்கப்படக்கூடும் என்ற கருத்தும் நிலவுவதாக அது குறிப்பிட்டது.

டாக்டர் மகாதீரின் பதவி விலகல் கடிதத்தை நேற்று ஏற்றுக்கொண்ட மலேசிய மாமன்னர், அவரை இடைக்காலப் பிரதமராக நியமித்துள்ளார். இன்று காலை 9.20 மணியளவில் டாக்டர் மகாதீர் தமது அலுவலகத்துக்கு வந்தார்.

டாக்டர் மகாதீர் தவிர மற்ற 221 நாடாளுமன்ற உறுப்பினர்களையும்  இன்றும் நாளையும் தனிப்பட்ட முறையில் சந்திக்கிறார் மாமன்னர்.  யாருக்கு பெரும்பான்மை ஆதரவு உள்ளது என்பதை அறியும் பொருட்டு மாமன்னர் இந்த முயற்சியில் இறங்கி இருப்பதாகக் கூறப்பட்டது.

#மலேசியா #மகாதீர் #தமிழ்முரசு

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon