அதிபர் ஹலிமா யாக்கோப்புக்கு பிரியாணி சமைத்துப் பரிமாறினார் பால் சைமன்

சுதாஸகி ராமன்

சிறிய கற்றல் குறைபாடு இருந்தாலும் சமையல் கலையில் சாதிக்கவேண்டும் என்ற மன உறுதியுடன் செயல்பட்ட இளையர் இஸ்தானா வரை சென்று அதிபர் ஹலிமா யாக்கோப்புக்கு அண்மை யில் பிரியாணி சமைத்துப் பரிமாறியுள்ளார். நாட்டின் அதிபருக்கு உணவு சமைத்துப் பரிமாறுவதைத் தமது நீண்ட நாள் கனவாக வைத்திருந்த 26 வயது சமையல் வல்லுநர் பால் சைமனுக்குக் கடந்த மாதம் 24ஆம் தேதி அந்த வாய்ப்புக் கிட்டியதில் அளவில்லா மகிழ்ச்சி.

“இந்த அரிய வாய்ப்பு கிடைக்கும் என்று நான் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. தமக்குச் சமைக்கும்படி அதிபர் விடுத்த அழைப்பைப் பற்றி டிசம்பரில் நான் பணிபுரியும் ஹோட்டலின் மனித வளப் பிரிவு எனக்குக் கூறியபோது நான் இன்ப அதிர்ச்சி அடைந் தேன்,” என்றார் ஷங்ரிலா ராசா செந்தோசா ரிசோட் ஹோட்டலில் பணியாற்றும் பால் சைமன்.

உடற்குறை உள்ளோருக்கான அனைத்துலக தினத்தை ஒட்டி கடந்த மாதம் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழ் வெளியிட்ட கட்டுரையில் மொத்தம் ஏழு பேர் குறிப்பிடப் பட்டிருந்தனர். அதில் சமையல் வல்லுநர் பாலும் ஒருவர். அந்தக் கட்டுரையில் தமது நீண்டநாள் கனவைப் பற்றி அவர் கூறி இருந்தார். கட்டுரையைப் படித்து மனம் நெகிழ்ந்த அதிபர் ஹலிமா, சமையல் வல்லுநர் பாலின் கைவண்ணத்தில் உருவாகும் உணவை ருசிக்க முடிவெடுத்தார். அவர் காட்டிய ஆர்வத்தில் பாலின் கனவும் நிறைவேறியது.

கோழி பிரியாணியுடன், மாம்பழ ‘சால்சா’ பச்சடி, சோளத்தாலான சவ்வரிசி இனிப்புப் பதார்த்தம் ஆகியவற்றை இஸ்தானாவில் தயாரித்து அதிபர் ஹலிமாவிற்குச் சமையல் வல்லுநர் பால் பரிமாறினார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்