கடும் போராட்டத்திற்குப் பின் கைகூடிய வெற்றி

நியூயார்க்: நடப்பு வெற்றியாளரும் உலகின் முதல்நிலை டென்னிஸ் ஆட்டக்காரருமான ரஃபாயல் நடால் அமெரிக்கப் பொது விருதின் காலிறுதி ஆட்டத்தில் கடுமையாகப் போராடி ஆஸ்திரிய வீரர் டோமினிக் தியமை வெற்றிகொண்டார். ஒன்பதாம் நிலை ஆட்டக்காரரான தியம் முதல் செட்டை 6-0 என மிக எளிதாகக் கைப்பற்றினார். மீண்டெழுந்த நடால் 6-4 என அடுத்த செட்டைத் தனதாக்கினார். அதன்பின் இருவரும் மாறி மாறி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் அடுத்த மூன்று செட்களும் ‘டை பிரேக்கர்’ வரை சென்றன. இருப்பினும், அதிர்ஷ்டக் காற்று நடால் பக்கமே அடித்தது.

இறுதியில் 0-6, 6-4, 7-6, 6-7, 7-6 என்ற செட் கணக்கில் நடால் வெற்றி பெற்று, அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் முன்னாள் வெற்றியாளரான யுவான் மார்ட்டின் டெல் போட்ரோ 6-7, 6-3, 7-6, 6-2 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் ஜான் ஐஸ்னரைத் தோற்கடித்தார். அரையிறுதியில் டெல் போட்ரோவும் நடாலும் ஒருவரை ஒருவர் எதிர்த்தாட உள்ளனர். மகளிர் ஒற்றையர் பிரிவில் நடப்பு வெற்றியாளரான அமெரிக்காவின் ஸ்லோவன் ஸ்டீஃபன்ஸ் அதிர்ச்சித் தோல்வியடைந்தார்.

காலிறுதியில் அவர் லாட்வியாவின் அனஸ்டாசியா செவஸ்டோவாவிடம் 6-2, 6-3 என நேர் செட்களில் மண்ணைக் கவ்வினார். 23 வயதான செவஸ்டோவா கிராண்ட் ஸ்லாம் தொடர் ஒன்றின் அரையிறுதிச் சுற்றுக்குள் நுழைந்திருப்பது இதுவே முதன்முறை. அரையிறுதியில் அவர் செரீனா வில்லியம்சுடன் மோதவுள்ளார். காலிறுதியில் செரீனா 6-4, 6-3 என கரோலினா பிலிஸ்கோவாவை வீழ்த்தினார். அமெரிக்கப் பொது விருதை ஏழாவது முறையாகவும் தமது 24வது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தையும் வெல்ல செரீனா இலக்கு கொண்டுள்ளார்.

2009ஆம் ஆண்டின் வெற்றியாளரான அர்ஜெண்டினாவின் யுவான் மார்ட்டின் டெல் போட்ரோ (இடது) அரையிறுதிச் சுற்றில் நடப்பு வெற்றியாளரான ஸ்பெயினின் ரஃபாயல் நடாலுடன் பொருதவுள்ளார். படங்கள்: இபிஏ, ஏஎஃப்பி