பிப்ரவரிக்குப் பிறகு விலை அதிவேகமாகக் கூடியது ஆகஸ்ட்டில்தான்
வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் மறுவிற்பனை வீடுகளுக்கான தேவை கடந்த ஆகஸ்டில் தொடர்ந்து வலுவாக இருந்தது.
அதேவேளையில், பிப்ரவரிக்குப் பிறகு ஆகஸ்டில்தான் அத்தகைய வீடுகளின் மாதாந்திர விலை ஆக வேகமாகக் கூடியது. கைமாறிய வீவக மறுவிற்பனை வீடுகளிள் எண்ணிக்கை ஜூலையுடன் ஒப்பிடுகையில் ஆகஸ்ட்டில் 1.4% குறைவுதான். ஆனால் சென்ற ஆண்டு இதே மாதத்துடன் ஒப்பிடுகையில், கடந்த ஆகஸ்டில் 23.5 விழுக்காடு அதிக வீடுகள் விற்கப்பட்டன.
மொத்தத்தில் ஆகஸ்டில் 2,435 வீவக மறுவிற்பனை வீடுகள் விற்கப்பட்டதாக நிலச்சொத்து இணைய வாசலான எஸ்ஆர்எக்ஸ் நிறுவனமதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.
சென்ற மாதம் விற்கப்பட்ட வீவக வீடுகளில் 40.3 விழுக்காடு நாலறை வீடுகள், 26 விழுக்காடு ஐந்தறை வீடுகள். மொத்தம் 23.2 விழுக்காடு மூவறை வீடுகள் கைமாறின. விற்கப்பட்ட வீடுகளில் 8.8 விழுக்காடு வீடுகள் எக்ஸிகியூட்டிவ் வீடுகளாகும். மற்றவை பல தலைமுறை மற்றும் ஈரறை வீடுகள்.
இதனிடையே, ஆகஸ்ட் 19 முதல் செப்டம்பர் 16 வரை சீனர்கள் கொண்டாடும் ‘ஹங்ரி கோஸ்ட்’ விழா இடம்பெற்றாலும்கூட சென்ற மாதம் வீவக மறுவிற்பனை வீடுகளுக்குத் தேவை வலுவாக இருந்தது என்று ஆரஞ்சு டீ & டை நிறுவனத்தின் ஆய்வு ஆலோசனைப் பிரிவுத் தலைவர் கிறிஸ்டின் சன் தெரிவித்தார்.
ஹங்ரி கோஸ்ட் விழாவின் போது பொதுவாக விற்பனைகள் மந்தமாக இருக்கும். வீவக மறுவிற்பனை வீடுகளுக்குக் கடந்த மூன்று மாதமாக தொடர்ந்து தேவை அதிகமாக இருந்து வருகிறது.
சிங்கப்பூரில் கொவிட்-19 கிருமித்தொற்று நிலைப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மறுவிற்பனைச் சந்தை மெதுவாக மீட்சி காண முடியும் என்று அவர் தெரிவித்தார்.
ஜூலையுடன் ஒப்பிடுகையில் ஆகஸ்ட் மாத மறுவிற்பனை விலையில் 0.7% அதிகரித்தது. முதிர்ச்சியடையாத பேட்டைகளில் விலைகள் ஆண்டுக்காண்டு அடிப்படையில் 3.3% கூடின.
அதேவேளையில், முதிர்ச்சிஅடைந்த பேட்டைகளில் இந்த அதிகரிப்பு 0.2 விழுக்காடாக இருந்தது. மறுவிற்பனை விலை சென்ற ஆண்டு ஆகஸ்ட்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு ஆகஸ்ட்டில் 2.1 விழுக்காடு அதிகமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆகஸ்ட்டில் பின்னக்கல் @ டக்ஸ்டன் புளோக்கில் உள்ள ஓர் ஐந்தறை வீடு ஆகஸ்ட் மாதம் $1,185,000 விலைக்கு கைமாறியது.
ஒரு மில்லியனுக்கும் அதிக விலையில் விற்கப்பட்ட வீவக ஐந்து மறுவிற்பனை வீடுகளில் அது ஒன்றாகும்.