சூதாட்ட அம்சங்களைக் கொண்ட இணைய விளையாட்டுகளில் ஈடுபடுவதில் உள்ள அபாயங்கள் பற்றி தொடக்கநிலை, உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு அடுத்த ஆண்டிலிருந்து கற்றுக்கொடுக்கப்படலாம் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
‘லூட் பாக்சஸ்’ என்று பொதுவாக அழைக்கப்படும் இந்த விளையாட்டுகள் காணொளி வடிவில் இணையத்தில் இலவசமாக வழங்கப்படுகின்றன.
“கடந்த மாதம் இங்கு அறிமுகப்படுத்தப்பட்ட ‘கென்ஷின் இம்பெக்ட்’ எனும் இணைய விளையாட்டு தொடர்பான பெரிய விளம்பரங்கள் எம்ஆர்டி நிலையங்களில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
“அவற்றைப் பார்க்கும் மாணவர்கள் அதன்பால் ஈர்க்கப்படும் அபாயம் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. ஆகவே, தனது இணையப் பாதுகாப்புக் கல்வி தொடர்பான வளங்களில் ‘லூட் பாக்சஸ் விளையாட்டுகளில் உள்ள ஆபத்துகள்’ என்ற அம்சம் சேர்த்துக்கொள்ளப்படும்,” என்று கல்வி அமைச்சு ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தது.
இந்தக் கல்வித் தகவல்களுடன் அதிகப்படியான இணைய விளையாட்டுகளால் ஏற்படும் விளைவுகள் பற்றிய அம்சங்களும் அடுத்த ஆண்டு தனது நற்குணமும் குடியியல் கல்வி பாடத்திட்டத்தில் சேர்த்துக்கொள்ளப்படும் என்றும் அமைச்சு விவரித்தது.