மீடியாகார்ப் நிறுவனத்தின் பழைய வளாகமான 'கேல்டிகாட் புரோட்காஸ்ட் சென்டர்' இருந்த கேல்டிகாட் ஹில் பகுதியில் பெரெனியல் ஹோல்டிங்ஸ் நிறுவனம் சொகுசு வீடுகளைக் கட்டத் திட்டமிட்டுள்ளது. சொத்துச் சந்தை, சுகாதார நிறுவனமான பெரெனியல் ஹோல்டிங்ஸ், இப்பகுதியில் 15 'ஜிசிபி' எனும் உயர்தர சொகுசு பங்களாக்களைக் கட்ட எண்ணம் கொண்டுள்ளது. இது, 99 ஆண்டு குத்தகைக் காலத்திற்குப் பெரிய அளவில் எழுப்பப்படும் முதல் உயர்தர சொகுசு பங்களாக்கள் திட்டமாகும்.
ஒவ்வொரு சொகுசு பங்களாக்கான நிலமும் 15,070லிருந்து 250,801 சதுர அடி பரப்பளவைக் கொண்டிருக்கும். அதிக பரப்பளவைக் கொண்ட நிலங்கள் வருங்காலத்தில் மேலும் பிரிக்கப்படலாம். அவ்வாறு பிரிக்கப்பட்ட ஒவ்வொரு நிலத்திலும் அதிகபட்சமாக 26 பங்களாக்கள் கட்டப்படலாம். அத்தகைய நிலங்கள் 'ஜிசிபி' பங்களாக்களுடன் சேர்த்து விற்கப்படவேண்டும் என்று நகர மறுசீரமைப்பு ஆணையம் தெரிவித்தது.
தற்போது இப்பகுதிக்கு ஆண்ட்ரூ சாலை அல்லது ஒலிவ் சாலை வழியாகச் செல்லலாம். இங்குள்ள சாலைகளை விரிவுபடுத்த பெரெனியல் நிறுவனம் நிலப் போக்குவரத்து ஆணையத்துடன் இணைந்து செயல்படும்.
கேல்டிகாட் ஹில்லின் வடக்கு, தெற்குப் பகுதிகளை இணைக்கும் புதிய பொதுப் பூங்கா ஒன்றையும் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.