சிங்கப்பூரில் இவ்வாண்டில் வேலையிடங்களில் நிகழ்ந்த மரணங்கள் ஆக அதிகம் என்றும் இது ஏற்றுக்கொள்ள இயலாத அளவு என்றும் பிரதமர் லீ சியன் லூங் தமது ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஆண்டின் ஜனவரி 1ஆம் தேதி முதல் மே 6ஆம் தேதி வரையில் 20 வேலையிட மரணங்கள் நிகழ்ந்தன.
அடிப்படைப் பாதுகாப்பு மற்றும் உடல்நல நடவடிக்கைகள் மூலம் இவற்றில் பெரும்பாலான மரணங்களைத் தவிர்த்திருக்க முடியும் என்றும் மனிதவள அமைச்சும் வேலையிட பாதுகாப்பு, சுகாதார மன்றமும் ஞாயிற்றுக்கிழமை கூட்டாகத் தெரிவித்து இருந்தன.
இந்த மரண எண்ணிக்கை 2016ஆம் ஆண்டு இதே காலகட்டத்தில் நிகழ்ந்ததைக் காட்டிலும் ஆக அதிகம்.
குறிப்பாக, ஏப்ரல் மாதத்தில் மட்டும் 10 வேலையிட மரணங்கள் பதிவாகி உள்ளன. இது ஆக அதிகம் என்று திரு லீ குறிப்பிட்டு உள்ளார்.
"வேலையிட விபத்துகளை, குறிப்பாக மரணங்களைத் தவிர்க்க நாம் ஆண்டாண்டு காலமாகப் பாடுபட்டு வந்திருக்கிறோம். அதில் நாம் முன்னேற்றமும் கண்டிருக்கிறோம்.
"இருந்தபோதிலும் நமது பொருளியல் நடவடிக்கைகள் மறுபடியும் வேகமாகச் செயலாற்றத் தொடங்கி உள்ள நிலையில், பாதுகாப்புத் தரநிலைகளும் நடைமுறைப் பழக்க வழக்கங்களும் கைநழுவிப்போனது போலத் தோன்றுகிறது.
"விபத்துகளின் விகிதம் அதிகரித்துள்ளது, நாம் அடிப்படை பாதுகாப்பு அம்சங்களைத் தவறவிட்டுவிட்டோம். இது சரிசெய்யப்பட வேண்டும்," என்று பிரதமர் தமது பதிவில் கூறியுள்ளார்.
வேலையிட மரணங்களின் அதிகரிப்பைத் தொடர்ந்து, நேற்று (மே 9) முதல் இருவார காலத்துக்கு பாதுகாப்புக்கு நேரம் ஒதுக்கி அதற்கான நடைமுறைகளில் கவனம் செலுத்துமாறு நிறுவனங்கள் வலியுறுத்தப்பட்டு உள்ளன.
பல்வேறு தொழில் நிறுவனங்களில் அதிகமான வேலையிட மரணங்கள் நிகழ்ந்திருப்பதைத் தொடர்ந்து மனிதவள அமைச்சு, வேலையிடப் பாதுகாப்பு, சுகாதார மன்றம், தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் (என்டியுசி) ஆகியன நிறு
வனங்களுக்கு இந்த வேண்டுகோளை விடுத்துள்ளன.
இதற்கு முன்னர், 2021 ஜூன் 25ஆம் தேதி நாடளாவிய பாதுகாப்புக் கவன நடவடிக்கை அமல்
படுத்தப்பட்டது.
"நிறுவனங்கள் வேலையிடப் பாதுகாப்பின் மீது தங்களது கவனத்தைத் திருப்பலாம். ஊழியர்கள் எழுப்பும் பாதுகாப்புப் பிரச்சினைகளுக்கு அவை உடனடித் தீர்வு காணலாம்.
"முதலாளிகள், மேற்பார்வையாளர்கள் மற்றும் ஊழியர்கள் வேலையிடப் பாதுகாப்புக்கு முக்கியத் துவம் தரவேண்டும்," என்று பிர
தமர் லீ கூறியுள்ளார்.
'விபத்து, மரணங்களைத் தவிர்க்க ஆண்டாண்டு காலமாகப் பாடுபட்டு வந்துள்ளோம்'