கண்காணிப்பை முடுக்கி, கொசுக்களை முடக்குவோம்

ஸ்பானிய மொழியில் டெங்கி என்பதற்கு "கவனமாக இருத்தல்" அல்லது "ஜாக்கிரதையாக இருத்தல்" என்ற பொருள் உண்டு. எவ்வளவு பொருத்தமான காரணப் பெயர்! முன்னெப்போதையும்விட இந்த ஆண்டில் சிங்கப்பூரர்கள் டெங்கி காய்ச்சல் குறித்தும் அதனை உண்டுபண்ணும் ஏடிஸ் கொசுக்கள் குறித்தும் மிகக் கவனமாக இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஏனெனில் இந்த ஆண்டு டெங்கி சம்பவங்கள் சாதனை அளவாக 30,000த்தைத் தொடக்கூடும் என தேசிய சுற்றுப்புற வாரியம் எச்சரித்திருக்கிறது. இதற்கு முன் 2013ல் டெங்கி சம்பவங்கள் 22,000ஆக இருந்தன.

இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. ஏனெனில் உலக மக்கட்தொகையில் சுமார் 40 விழுக்காட்டினர், அதாவது 2.5 பில்லியன் மக்கள் டெங்கி எளிதாகப் பரவக் கூடிய வெப்ப மண்டலப் பகுதிகளில் வசிப்பதாகவும் ஆண்டுதோறும் குறைந்தது 50 மில்லியன் பேர் அந்த நோயால் பாதிக்கப்படுவதாகவும் உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது.

சிங்கப்பூரின் வெப்பநிலை கொசு இனப் பெருக்கத்துக்கு உகந்ததாக இருப்பதே டெங்கியின் கோரத் தாண்டவ அபாயத்திற்குக் காரணம். அந்த அபாயம் பற்றி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த ஆயிரக் கணக்கான அடித்தளத் தொண்டூழியர்களுக்குப் பயிற்சி அளிக்கிறது தேசிய சுற்றுப்புற வாரியம். இந்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் 20,000 கொசு பிடிப்புக் கருவிகளை அது தீவு முழுவதும் பொருத்தவுள்ளது.

ஆனால் சிங்கப்பூரின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் கொசுக்கள் ஒளிந்திருக்கின்றனவா அல்லது உற்பத்தியாகின்றனவா என்பதை அரசாங்க அமைப்புகளால் மட்டும் கண்காணித்துக் கொண்டிருக்க முடியாது. சிங்கப்பூரர்கள் அனைவரும் தங்கள் பங்கை ஆற்ற வேண்டும்.

சரியான சூழலில் கொசு முட்டைகள் ஒரே நாளில் முட்டைப் புழுவாகப் பொரிந்து ஒரு வாரத்திற்குள் வளர்ந்த கொசுக்களாகி விடுகின்றன. வளர்ந்த கொசு ஒருவரைக் கடித்த மூன்றே நாட்களில் முட்டையிடுகிறது. அவ்வாறே கொசுப் பயணம் கட்டுப்பாடின்றி தொடர்கிறது.

அந்தக் கொசுப் பயணத்தை நசுக்க வேண்டிய பொறுப்பு நம் அனைவரின் கைகளிலும் உள்ளது. கொசுக்கள் உற்பத்தியாகக் கூடிய இடங்களை நாம் அனைவருமே கூர்ந்து கவனிக்க வேண்டும். எங்கெல்லாம் தண்ணீர் தேங்குகிறதோ அங்கெல்லாம் கொசுக்கள் உற்பத்தியாகலாம் என்பதை நாம் உணர வேண்டும். இல்லத்தின் வெளியே இருக்கும் குளிர்சாதன இயந்திரங்களின் கீழ்ப் பகுதியில் தேங்கும் தண்ணீரில் கூட கொசுக்கள் உற்பத்தியாகலாம்.

வீட்டில் பூஜாடிகள், செடிச் சட்டிகளின் கீழ் உள்ள தட்டுகள் போன்றவற்றை நாம் அடிக்கடி தண்ணீர் மாற்றி சுத்தம் செய்யாவிட்டால் நமது இல்லங்களே மரணத் தொழிற்சாலைகளாக மாறக்கூடும். அதனை தேசிய சுற்றுப்புற வாரியத்தின் புள்ளி விவரங்களும் மெய்ப்பிக்கின்றன. கடந்த ஆண்டுகளில் பரிசோதனைகளின் போது கண்டுபிடிக்கப்பட்ட கொசு வளரும் இடங்களில் 60 விழுக்காடு இல்லங்களே. இல்லத்தைத் தவிர்த்து வெளியில் கவனக் குறைவாக அல்லது அலட்சியமாக சிலர் எறியும் தாள் குவளைகள், பிளாஸ்ட்டிக் போத்தல்கள் போன்ற குப்பைகளும் கொசு உற்பத்திக்குத் துணை போகின்றன.

இதில் மேலும் அச்சமூட்டக்கூடிய ஓர் அம்சம் என்னவென்றால், டெங்கியைப் பரப்பும் ஏடிஸ் கொசுக்களே உலகின் ஆக அண்மைய கொடிய கிருமியான ஸிக்கா கிருமியின் பரவலுக்கும் காரணமாக இருக்கின்றன என்பதுதான். அந்தக் கிருமி இன்னும் சிங்கப்பூரில் தரையிறங்க வில்லை என்றாலும் உலகமயமாதலாலும், வெளிநாட்டுப் பயணங்கள், சுற்றுப்பயணிகளின் வருகை போன்றவற்றாலும் காலப்போக்கில் அது இங்கு பரவுவதைத் தவிர்க்க முடியாது என்று சுகாதார வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

எனவே, இரண்டாயிரம் ஆண்டுகளாக உலகை ஆட்டிப் படைக்கும் டெங்கியாக இருந்தாலும் சரி, கடந்த சில மாதங்களாக குலை நடுங்க வைக்கும் ஸிக்கா கிருமியாக இருந்தாலும் சரி, அவற்றுக்கு மூல காரணமான கொசுக்கள் நம்மை முடக்குவதற்கு முன் நாம் அவற்றுக்கெதிரான கண்காணிப்புப் போரை முடுக்கி விட வேண்டும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!