டேரல் டேவிட்: இந்திய சமூகத்தின் அழகே அதன் பன்முகத்தன்மையில்தான் உள்ளது

இந்திய சமூகத்தின் அழகே அதன் பன்முகத்தன்மையில் இருப்பதாக அங் மோ கியோ குழுத்தொகுதி மசெக வேட்பாளர் டேரல் டேவிட் (படம்) கூறினார். தமிழர்களுடன் வேறு இந்திய சமூகங்களைச் சேர்ந்தவர்கள் இந்தியர் என்ற பொதுவான அடையாளத்திற்குள் உள்ளடங்குவதால் வேற்றுமையில் ஒற்றுமை இருப்பதாக இரண்டாவது முறையாக பொதுத்தேர்தலில் போட்டியிடும் திரு டேரல், தமது ஃபேஸ்புக் பக்க நேரலை காணொளி வழியாக நேற்று மக்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தபோது கூறினார்.

“என் தந்தை இந்தியர். தாயார் சீனர். துரதிருஷ்டவசமாக, எனக்கு தமிழில் சரளமாகப் பேசத் தெரியாது. பள்ளியில் மாண்டரின் மொழி படித்தேன். நானும் என் சகோதரியும் எங்கள் தாயாரின் குடும்பத்தினருடன் வளர்ந்தோம். பாட்டியால் வளர்க்கப்பட்ட நான் சீனக் கிளைமொழிகளில் பேசிப் பழகினேன்,” என்று அவர் கூறினார்.

“ஆயினும், கடந்த ஐந்து ஆண்டுகளாக நான் எனது தொகுதியின் இந்தியர் நற்பணிச் செயற்குழுவுடன் பெரிதளவில் பங்காற்றினேன். என் பிரிவில் மட்டுமின்றி அங் மோ கியோ குழுத்தொகுதியிலுள்ள ஆறு பிரிவுகளிலும் இந்திய சமூகம் கொண்டாடப்படுவதை நாங்கள் உறுதி செய்து வருகிறோம். இந்திய மொழிகள், இசை உள்ளிட்ட பல்வேறு கலாசார அம்சங்கள் வளர்ப்பதற்கான நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபடுகிறோம்.

“இந்திய கலாசாரம் என்ற தொடரே அற்புதமான ஒன்று. என்னைக் கேட்டால் இந்தப் பன்முகத்தன்மையே இந்திய சமூகத்தின் அழகு. எனது தொகுதியின் இந்திய குடியிருப்பாளர்களிடையே தமிழர்கள், பஞ்சாபிகள், மலையாளிகள், தெலுங்கர்கள் என பலர் இந்த இந்தியக் குடைக்குள் அடங்குகின்றனர். இது வேற்றுமையில் ஒற்றுமை என்றே சொல்லலாம்.

இந்தியர் நற்பணிச் செயற் குழுக்கள், சிண்டா போன்ற அமைப்புகளில் தாம் அதிக பங்காற்றி வந்துள் ளதாகவும் தொடர்ந்து அவற்றின் நடவடிக்கைகளில் ஈடுபடப்போவதாகவும் கூறிய திரு டேரல், தமிழர்களுடன் ஒட்டுமொத்த இந்திய சமூகத்தினருடன் தொடர்ந்து பணியாற்றப்போவதாகவும் கூறினார்.

வருமான வரம்பு அல்லது ஏதாவது சில காரணங்களுக்காக சில வசதி குறைந்த குடும்பங்கள் தற்போதுள்ள அரசு உதவித் திட்டங்களுக்கு தகுதி பெறாமல் போவது குறித்த கேள்விக்கும் அவர் பதிலளித்தார்.

இது உண்மைதான் என்ற திரு டேரல், அவர்களுக்கும் உதவி கிடைக்க வழிகள் உண்டு என்றார். “எனது தொகுதியிலுள்ள குடியிருப்பாளர் பலருக்காக பல்வேறு உதவித் திட்டங்களுக்கு விண்ணப்பித்திருக்கிறேன். வீடு வாங்குதல், கடன்கள், சாஸ் அட்டை உள்ளிட்ட சில பிரச்சினைகளில் நான் மேல் முறையீடு கடிதங்களை எழுதியுள்ளேன்,” என்று அவர் கூறினார்.

அடித்தள அமைப்புகளில் இளைய தொண்டூழியர்களை ஈர்ப்பது குறித்தும் அவர் பேசினார். “இளையர்களுக்காகவே ஏற்பாடு செய்யப்படும் நடவடிக்கைகளின் மூலம் இளையர்களை ஈர்ப்பது ஒரு வழி. முதியோர் உள்ளிட்ட பிறருக்கான நடவடிக்கைகளில் இளையர்களுக்குப் பொறுப்புகளைக் கொடுத்து செயலாற்ற வைப்பது மற்றொரு வழி. தங்கள் மனதைக் கவர்ந்த நடவடிக்கைகளில் இளையர்கள் தொடர்ந்து ஈடுபடுவார்கள்,” என்று அவர் கூறினார்.

கடந்த 15 ஆண்டுகளாக கல்வி முறையில் நல்ல பல மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதாகக் கூறிய திரு டேரல், கல்வி மற்றும் தொழில் வெற்றிக்குப் பல்வேறு மாற்றுப் பாதைகள் உருவாகியிருப்பதைச் சுட்டினார்.

கல்விச் சான்றிதழ்களையும் மதிப்பெண்களையும் மட்டும் பாராமல் முழுமையான முறையில் பல்வேறு திறன்களைக் கொண்டவர்களையும் அங்கீகரிக்கும்படி வேலையிடங்களைக் கேட்டுக்கொள்வதாகவும் அவர் கூறினார்.