மொழியால் மக்களை இணைப்பவர்

வி.கே.சந்தோ‌ஷ் குமார்

டாக்டர் சந்தியா சிங் 1996-ல் சிங்கப்பூருக்கு வந்தபோது, இங்குள்ள சூழலுக்கு ஏற்ப வாழ்வதற்கு உள்ளூர் மொழியையும் கலாசாரத்தையும் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கும் என்பதை அறிந்திருந்தார். 

உத்தரப் பிரதேச மாநிலத்தின் வாரனாசியில், பாரம்பரிய ராஜ்புட் குடும்பத்தில் பிறந்து வளர்ந்த டாக்டர் சந்தியாவின் முதல் வெளிநாட்டுப் பயணம் அது. உலகமறியா பிள்ளையாகப் பொத்திப்பொத்தி வளர்க்கப்பட்ட அவருக்கு ஹிந்தி மொழி மட்டும்தான் தெரியும். 

“வெளிநாட்டு நடப்புகள் எனக்குத் தெரியாததால், உலகைப் பற்றிய எனது கண்ணோட்டம் ஓரளவுக்குக் குறுகலாக இருந்தது,” என்றார் அவர். 

“நான் ஐந்து உடன்பிறப்புகளோடும் ஒன்றுவிட்ட உடன்பிறப்புகளோடும் வளர்ந்தேன். பள்ளிப் பாடங்களை ஹிந்தியில் படித்தேன்.

“வாரனாசியை ஓரளவு பெரிய நகரமாகக் கருதலாம் என்றாலும், நான் அடிப்படையில் சிற்றூர் பெண்ணாகவே இருந்தேன்.”

கருவூலத் தரகராகப் பணிபுரிந்த சிங்கப்பூரர் ஷியோ ஷங்கர் சிங் என்பவரைத் திருமணம் செய்தபின் அவர் சிங்கப்பூருக்கு வந்தார். அந்த 20 வயதில், சிங்கப்பூர் அவருக்கு முற்றிலும் புதியதோர் உலகம்போல் தோன்றியது. 

“காட்சிகள், வாசங்கள், ஓசைகள் எல்லாமே என் சொந்த ஊரிலிருந்து பெரிதும் மாறுபட்டிருந்தன,” என அவர் கூறினார். 

“ஒழுங்குடன் சீராகச் செயல்படும் சிங்கப்பூரில் வித்தியாசமான ஈர்ப்பை உணர்ந்தேன்.” 

அந்நிய நாட்டில் தனியாகப் பழக்கப்படுத்திக் கொள்வதும் அவர் எதிர்பார்த்ததைவிடச் சிரமமாக இருந்தது. 

“இந்தியாவில் நான் கூட்டுக் குடும்பத்தில் வாழ்ந்ததால் மிகப்பெரிய கலாசார வித்தியாசம் இருந்தது. இங்கு, உறவினர்கள் இருந்தாலும்கூட, அனைவரும் தனித்தனி வீடுகளில் சொந்தமாக வாழ்கிறார்கள். இதனால் தனிமை உணர்வு ஏற்பட்டது,” என்றார் அவர். 

இந்தப் பிரச்சினையோடு மொழிப் பிரச்சினையும் இருந்தது. டாக்டர் சந்தியாவுக்கு ஹிந்தியில் பேசுவதே இயல்பாக இருந்தது. அவரது கணவரின் வீட்டினரோ மலாயிலும் ஆங்கிலத்திலும் அதிக சரளமாகப் பேசினர். 

“ஆரம்பத்தில் நாங்கள் மேலோட்டமாகவே பேசினோம்,” என்றார் டாக்டர் சந்தியா. 

“ஆனால், நான் இருந்த வெளிநாட்டுச் சூழலே எனக்குத் தூண்டுகோலாக இருந்தது. நான் வளர்ச்சி அடைவதற்குத் தேவையான சுதந்திரத்தையும் வாய்ப்பையும் சிங்கப்பூர் எனக்கு வழங்கியது.”

சிங்கப்பூரில் சமுதாய நெருக்குதல்களும் எதிர்பார்ப்புகளும் குறைவாக இருந்தது அவருக்கு மிகுந்த ஆறுதலளித்தது. “என் ஆர்வங்களை நான் நாடிச் செல்வதற்கு இது பற்பல வாய்ப்புகளை உருவாக்கித் தந்தது,” என்றார் அவர். 

“சிங்கப்பூரில் எல்லோரும் அவரவர் வாழ்க்கைக்காக மும்முரமாகச் செயல்படுவதால், அடுத்தவர்களின் வெற்றியும் தோல்வியும் நமக்கு முக்கியமில்லாத ஒன்றாக இருப்பது சிங்கப்பூரின் தனிச்சிறப்பாக இருக்கலாம். 

“நான் வேலை செய்யவும் தொண்டூழியம் புரியவும் தொடங்கியபோது, நெருக்குதல் இல்லாத இந்தச் சூழல் என் வளர்ச்சிக்கு வழிகோலியது.”

சிங்கப்பூரில் இருந்த ஆரம்பகாலத்தில், அவருக்கு நிரந்தரவாசத் தகுதி இல்லை. அதனால், அவர் வேலைக்குப் போகவில்லை. 

இங்கிருந்த குடும்பத்தாருடன் பழகுவதற்கும், அக்கம்பக்கத்தைச் சுற்றிப்பார்த்து பழகிக் கொள்வதற்கும், சிங்கப்பூரின் நடைமுறைகளைத் தெரிந்து கொள்வதற்கும் அந்த இளம்பெண் நேரம் செலவிட்டார்.

“இங்குள்ள கடைகளில் பேரம் பேசாமல் பொருள் வாங்கக் கற்றுக்கொள்ள வேண்டியிருந்தது. இந்தியாவில் பேரம் பேசி வாங்குவது சமூகத்தில் ஏற்கப்படுகிறது,” என்றார் அவர். 

“சிங்கப்பூரில் உள்ள பல்வேறு கோயில்களுக்கும் நான் சென்றேன். என் வாழ்க்கையில் முதல்முறையாகத் தென்னிந்தியக் கோயில்களையும் பார்த்தேன். 

“நான் வடக்கைச் சேர்ந்தவர் என்பதால் தென்னிந்தியக் கட்டடக்கலையும் பாரம்பரியங்களும் எனக்கு அதிகமாகத் தெரியாது.”

கணவரோடும் அவரது குடும்பத்தோடும் பழகியதன்மூலம், சிங்கப்பூர் வாழ்க்கையை டாக்டர் சந்தியா பழக்கப்படுத்திக் கொண்டார். அவர் அதிக சுதந்திரமாகச் செயல்பட்டு, தனது ஆர்வங்களைத் தேடிச்செல்லவும் கற்றுக்கொண்டார். 

“இந்த வாழ்க்கை வாரனாசியிலிருந்து மிகவும் மாறுபட்டிருந்தது,” என்றார் அவர். 

“நான் குழந்தைப் பருவத்திலிருந்து விரும்பிச் சாப்பிட்ட சாட், பானிப்பூரி, லாவாங் லட்டா (இனிப்புவகை), ஜிலேபி போன்ற உணவுகள் இங்கு கிடைக்கவில்லை. சொந்த ஊரின் சுவை கிடைக்காமல் ஏங்கினேன்.

“அதோடு, நெருக்கமான கூட்டுக் குடும்பத்திலிருந்து தனிக் குடித்தனத்திற்கு மாறியிருந்தேன். எனது ஐந்து உடன்பிறப்புகளோடும் எப்போதும் ஏதாவது செய்துகொண்டும் பேசிக்கொண்டும் இருப்பேன். இந்த நெருக்கமான தொடர்பை சிங்கப்பூரில் என்னால் உருவாக்க முடியவில்லை. மக்களுக்கு இடையில் பொதுவான இடைவெளி இருந்தது இதற்குக் காரணம்.”

இரண்டாம் தலைமுறை சிங்கப்பூரரான அவரது கணவர், சிங்கப்பூர் வாழ்க்கைக்கு அவர் பழகிக்கொள்ள பெரிதும் உதவினார். 

நெத்திலிக் கருவாட்டுச் சம்பால், இறால் நூடல்ஸ், கடலுணவுடன் வறுத்த சோறு, மிளகாய் நண்டு போன்ற உள்ளூர் உணவு வகைகளை அவர் விரும்பிச் சாப்பிடத் தொடங்கினார். 

“சிங்கப்பூருக்கு வந்த பிறகு, மாறுபட்ட செயல்முறைகளை சந்தியா விரைவில் பழகிக் கொண்டார்,” என்றார் அவரது கணவர். 

“அதன்பின்னர், அவர் தனது ஆர்வங்களைத் தேடிச் செல்லவும் சொந்த இலக்குகளை வகுக்கவும் நான் ஊக்கம் கொடுத்தேன். அவ்வளவுதான்.” 

அவரது அண்டைவீட்டார்களும் அவருக்கு ஆதரளித்து அரவணைத்தனர். 

“நான் முதல் குழந்தையுடன் கர்ப்பமாக இருந்தபோது, பக்கத்து வீட்டில் வசித்த சீனர் குமுட்டிப்பழம் போன்றவற்றை எனக்குக் கொண்டு வந்து கொடுத்து என்னை உற்சாகப்படுத்தினார்,” என்றார் டாக்டர் சந்தியா. அவருக்கு 24, 21 வயதில் இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள். 

“அண்டைவீட்டுத் தமிழர் எனக்காகப் புளி சேர்த்த மீன் குழம்பு சமைத்துக் கொடுப்பார். இந்தத் தோழமை உணர்வு என் நினைவிலிருந்து என்றும் நீங்காது.”

ஆரம்பத்தில் நிர்வாகப் பணிகளில் வேலை செய்த டாக்டர் சந்தியாவுக்கு, அந்த வேலைகள் மனநிறைவளிக்கவில்லை. அப்போது, அவரது தேடலுக்கான தீர்வுபோல் ஹிந்தி சங்கம் பற்றி நண்பர் ஒருவர் அவரிடம் சொன்னார். 

“நான் ஹிந்தியில் படித்தேன். அதனால், ஹிந்தி பேசும் புலம்பெயர்ந்த இந்தியர்களுக்கும், உள்ளூர் மக்களுக்கும், வெளிநாட்டவர்களுக்கும் இடையிலான இடைவெளியைக் களைய உதவுவதற்கு அதுவே உகந்த வழியாக எனக்குத் தோன்றியது,” என்றார் அவர். 

உயர்நிலையில் ஹிந்தி கற்பித்த ஆரம்பித்து, மேல்நிலை வகுப்புக்கும், மேற்பார்வை பொறுப்புக்கும் அவர் படிப்படியாக முன்னேறினார். 

அதன்பின்னர், NPS இன்டர்நே‌ஷனல் பள்ளியில் நவீன மொழிகள் துறையின் தலைவராகச் சேர்ந்து, பள்ளியின் ஹிந்தி மொழிப் பிரிவை அமைத்தார். 

டாக்டர் சந்தியா 2018 ஜனவரி மாதம் “சிங்கப்பூர் சங்கம்” எனும் ஹிந்தி மொழி சஞ்சிகையைத் தொடங்கினார். அது பிற்பாடு கலாசார, இலக்கிய, மொழி ஒருங்கிணைப்புத் தளமாக விரிவடைந்தது. 

புலம்பெயர்ந்த மாணவர்களுக்கும் உள்ளூர்வாசிகளுக்கும் இடையில் கலந்துறவாடலையும் நட்பார்ந்த போட்டியையும் ஊக்குவிக்கும் நடுநிலையாளராக அந்தத் தளம் செயல்பட்டது. 

சங்கம் ஏற்பாடு செய்யும் கவிஞர் சந்திப்புகள், உரைகள், இன்னிசை நிகழ்ச்சிகள் போன்றவற்றில் பல்வேறு இன மக்கள் சந்தித்து நட்புறவை வளர்த்துக் கொள்கின்றனர். 

“இந்நிகழ்ச்சிகளின் வாயிலாக நான் ஹிந்தி பேசுவோரை உள்ளூர் மக்களுக்கும் பிற மொழிகளைப் பேசும் மற்றவர்களுக்கும் அறிமுகம் செய்து வைத்திருக்கிறேன். அவர்களில் பலருக்கும் சங்கம் பயனுள்ளதாக இருந்தது,” என்றார் டாக்டர் சந்தியா. 

செயின்ட் ஜோசப்ஸ் அனைத்துலகக் கல்விக் கழகத்தில் தமிழ் ஆசிரியராகப் பணியாற்றும் திருவாட்டி சபாபதி கற்பகலக்‌ஷ்மி, டாக்டர் சந்தியா “தனது இந்தியப் பாரம்பரியங்களையும் கலாசாரத்தையும் போற்றிப் பாராட்டும் அதே வேளையில் உள்ளூர் கலாசாரத்தையும் ஏற்று உன்னத எடுத்துக்காட்டாகத்” திகழ்வதாகக் கருதுகிறார். 

“அவர் அர்த்தமுள்ள உரையாடல்கள், அன்பளிப்புகள், உணவுப் பகிர்வுகள் மூலம் கலாசார விழிப்புணர்வை வளர்க்கிறார்,” என்றார் திருவாட்டி கற்பகலக்‌ஷ்மி. 

“பலவிதமான கலாசார நிகழ்ச்சிகளிலும் பயிலரங்குகளிலும் பங்கெடுப்பதோடு மட்டுமன்றி, அவற்றுக்கு ஏற்பாடு செய்து உள்ளூர் கலாசாரத்தின்பால் பரஸ்பர மரியாதையையும் ஏற்பையும் வளர்க்கவும் தனித்துவத்தையும் ஒற்றுமைகளையும் போற்றிப் பாராட்டவும் பங்களிக்கிறார்.” 

டாக்டர் சந்தியா பல்வேறு வகையான தொண்டூழியப் பணியிலும் ஈடுபட்டிருக்கிறார். 

சுகாதார அமைச்சு “ட்ரேஸ் டுகேதர்” செயலிக்காகச் செய்த மொழிபெயர்ப்பைச் சரிபார்க்க அவர் உதவினார். அதோடு, மக்கள் கழகம் தனது மொழிப் பிரிவுக்குத் திறனாளர்களைத் தேடுவதற்கும் துணை புரிந்தார். 

“நான் புரியும் தொண்டூழியப் பணியில் பெரும்பகுதி கலாசாரம், மொழி, இலக்கியம் சார்ந்ததாக இருக்கும்,” என்றார் அவர். 

“எனது வாழ்க்கைத்தொழிலைத் தொடங்கிய ஹிந்தி சங்கத்தின் நிர்வாகச் சபையில் நான் ஓர் அங்கத்தினராக இருக்கிறேன். என் வளர்ச்சிக்கு வித்திட்ட இடத்திற்கு என் பங்கை இப்போது செய்வதாக இதைக் கருதுகிறேன்.” 

தற்போது சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழக மொழிக் கல்வி நிலையத்தில் ஹிந்தி, தமிழ் இரண்டுக்கும் ஒருங்கிணைப்பாளராகவும், ஹிந்தி மொழியை வெளிநாட்டு மொழியாகக் கற்பிக்கும் மூத்த விரிவுரையாளராகவும் இருக்கும் டாக்டர் சந்தியா, பல்கலைக்கழக மாணவர்கள் ஹிந்தி கற்பதற்கும் துணை புரிகிறார். 

“அவர்கள் ஒவ்வொருவரும் ஹிந்தி கற்பதற்குத் தனித்தனி காரணங்கள் உள்ளன,” என்று அவர் கூறினார். 

“ஒரு சிலருக்கு, இந்தியக் கலாசாரத்தின் மீதுள்ள ஆர்வம் காரணமாக இருக்கிறது. மற்றவர்களுக்கு, இந்தியாவுக்குப் பயணம் செல்லவேண்டும் என்ற ஆசை அல்லது பாலிவூட் மீதான விருப்பம் காரணமாக இருக்கலாம். சில மாணவர்கள் யோகாவில் அதீத ஆர்வம் கொண்டுள்ளனர். 

“மொழியைப் புரிந்து கொள்வதன்வழி, பழக்கவழக்கங்களுடன் ஒரு நெருக்கம் ஏற்படுகிறது. வேலை வாய்ப்புகள் அல்லது தனிப்பட்ட உறவுகள் என எதுவாக இருந்தாலும், மொழியை நன்றாகப் பேசுவோரைப் புரிந்துகொண்டு, அவர்களுடன் ஆழமான தொடர்புகளை அவர்களால் வளர்த்துக்கொள்ள முடிகிறது.”

“டாக்டர் சந்தியாவிடம் ஹிந்தி கற்றுக்கொண்டது செறிவுமிக்க அனுபவமாக இருந்தது” என்கிறார் கேகே மகளிர், சிறார் மருத்துவமனையில் நிர்வாகியாகப் பணிபுரியும் திருவாட்டி ஆங் காங் லிங். 

“அவரது பாடப்பொருட்கள் கூர்ந்த கவனிப்புடன் தயாரிக்கப்பட்டிருக்கும். ஹிந்தி இலக்கணத்தையும் சொற்களையும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் அவர் கற்றுத் தருகிறார்,” என்றார் திருவாட்டி ஆங். 

“இதனால், மேல்நிலை வரை ஹிந்தி கற்கும் ஊக்கம் அடைந்தேன். 

“கலாசார வகுப்புகளையும் அவர் நடத்தினார். இந்தியாவின் பன்மயக் கலாசாரத்தைப் பற்றி கதைகள், கவிதைகள், திரைப்படங்கள், பாடல்கள் மூலம் கற்றுக்கொள்வது சுவாரசியமாக இருந்தது.”

டாக்டர் சந்தியா பல்கலைக்கழகத்தில் பல்வேறு நடவடிக்கைகளுக்கு அடிக்கடி ஏற்பாடு செய்கிறார். மருதாணி போடுதல், இந்தியப் பாரம்பரிய உடை அணிதல், இந்தியச் சமையல், பாலிவூட் நடனம், தீபாவளிக் கொண்டாட்டம் போன்றவை அவற்றுள் சில. 

தான் வளர்க்க உதவிய பந்தங்களால் மகிழ்ச்சி அடையும் டாக்டர் சந்தியா, சிங்கப்பூரைத் தனது இல்லமாகக் கருதுகிறார். 

“என் மொழியின்பால் எனக்குள்ள நேசத்தை முன்னெடுத்துச்செல்ல இந்நாடு எனக்கு நிறைய வாய்ப்புகளைத் தந்திருக்கிறது,” என்றார் அவர். 

“நான் பல ஆண்டுகளாக சிங்கப்பூரராக வாழ்ந்து வருகிறேன். என் ஒட்டுமொத்த குடும்பமும் பிறப்பால் சிங்கப்பூரர்கள். 

“நான் பிறந்து வளர்ந்த நாடு இந்தியா. எனக்கென ஒரு குடும்பத்தையும் வாழ்க்கைத்தொழிலையும் நான் வளர்த்துக்கொண்ட நாடு சிங்கப்பூர். நான் இன்றைய நிலையை அடைவதற்கு இரண்டுமே காரணம். 

“கடின உழைப்பின் மதிப்பையும், சொந்தமாக வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்வதன் முக்கியத்துவத்தையும் சிங்கப்பூர் எனக்குக் கற்றுக் கொடுத்தது. பெருங்கனவுகள் காணவும் கற்றுக் கொடுத்தது.”

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!