சீன புத்தாண்டு நெருங்கி கொண்டிருக்கும் வேளையில், இணைய வர்த்தக மோசடிகள் அதிகரிக்கலாம் என போலிசார் எச்சரித்துள்ளனர். 

கவலை அகற்றும் பணப்பூட்டுகள்

கடந்தாண்டின் தொடக்கத்தில் அதிகரித்த தீங்குநிரல் மோசடி சம்பவங்கள் குமாரி ஜாஸ்மினை கவலை அடைய செய்தது. இதுகுறித்து அறிந்த அவர் உடனே விரைந்து செயல்பட்டார்.

தமது மூன்று வங்கிக் கணக்குகளிலிருந்த மொத்த நிதியில் 30 விழுகாட்டை முதலீடு தளங்களுக்கு மாற்றினார், 35 வயது மின்னிலக்கச் சந்தைபடுத்துதல் மேலாளரான ஜாஸ்மின் சாய்.

அவரின் மூன்று வங்கிக் கணக்குகளும் வெவ்வேறு காரணங்களுக்காக நிறுவப்பட்டவை. ஊதியம் பெற்றுக்கொள்வதற்கு, வழக்கமான கட்டணங்களுக்கு, ஏனைய செலவுகளுக்கு என மூன்றும் இயங்கி வந்தன. அவசரகாலத்துக்கு தயாராக இருக்கவேண்டி மூன்று மாதங்கள் அளவிலான ஊதியத்தை இக்கணக்குகளில் அவர் சேர்த்து வைத்திருந்தார்.

ஆட்டோவெல்த், போயெம்ஸ் ஆகிய இணைய முதலீடு, வர்த்தக தளங்களில் தமது நிதியில் ஒரு பங்கை இடமாற்றி தமது பணத்தை பாதுகாத்துக் கொண்டார் ஜாஸ்மின். தமது பணத்தைப் பூட்டி வைக்கும் ஒரு வழிமுறையாக இதனை அவர் கருதினார்.

இது சாமர்த்தியமான ஒரு வழிமுறை அல்ல என்பது ஜாஸ்மின் அறிந்ததே. ஏனெனில், இம்முதலீடுகளில் அபாயங்கள் உண்டு. முழு பணத்தையும் திரும்பப் பெறமுடியும் என்பதற்கு உத்தரவாதமும் இல்லை.

“எனது சேமிப்பு கணக்குகளில் சுமாரான ஒரு வட்டி விகிதத்தை மாதந்தோறும் பெற்றுக்கொண்டிருந்தேன்,” என்றார் ஜாஸ்மின். இருந்தும், இந்நடவடிக்கை அவசியமானது என்று அவருக்கு தோன்றியது.

இதற்கு காரணம் என்ன? ஆண்ட்ராய்ட் பயனரான ஜாஸ்மின், தமது கைப்பேசியின் மூலம் தமது எல்லா வங்கிக் கணக்குகளையும் அணுகுகிறார். தீங்குநிரல் மோசடிகள் இத்தகைய ஆண்ட்ராய்ட் இயங்குதளங்களை பயன்படுத்தும் சாதனங்களையே குறி வைக்கின்றன.

தீங்குநிரல்கள் கைப்பேசிகளில் பதிவிறக்கம் செய்யப்பட்ட மோசடி சம்பவங்களின் எண்ணிக்கை 2023ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் 750க்கும் மேல் என்பது சிங்கப்பூர் காவல்துறையின் கணக்கீடு.

ஃபேஸ்புக், இன்ஸ்டாகிரம் முதலிய சமூக ஊடக தளங்களில் காணும் பொருள்கள் அல்லது சேவைகளுக்கான விளம்பரங்களை நம்பி ஏமாந்தனர், இம்மோசடிகளால் பாதிக்கப்பட்டோரில் பலர்.

கட்டணம் செலுத்த சொல்லும் பேரில், மோசடிக்காரர்கள் பயனர்களுக்கு ஓர் இணைப்பை அனுப்புகின்றனர். பொதுவாக, வாட்ஸ்அப் போன்ற குறுஞ்செய்தி தளங்களின்மூலம் இது அனுப்பப்படுகிறது. பின்னர், தீங்குநிரல் கொண்ட ஒரு ஆண்ட்ராய்ட் செயலியை பதிவிறக்கம் செய்ய இந்த இணைப்பு இட்டுச்செல்கிறது.

இக்கோப்பு திறன்பேசியில் பதிவிறக்கம் செய்யப்பட்டதன் பின்னர், பாதிக்கப்பட்டோரின் இணைய வங்கி கடவுச்சொற்களையும் கடன் அட்டை விவரங்களையும் மோசடிக்காரர்கள் எளிதில் அணுகலாம்.

தீங்குநிரல் மோசடிகள் குறித்த சமூக ஊடக பதிவு ஒன்றை கண்ட ஜாஸ்மின், பணத்தை இடமாற்றும் உத்தியை அறிந்துகொண்டார். பதிவில் கருத்து தெரிவித்த ஒருவர், வங்கி கணக்குகளிலிருந்து முதலீட்டுத் தளங்களுக்கு நிதியை இடமாற்றுவது பற்றி குறிப்பிட்டிருந்தார். இதனை ஓர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர் பரிந்துரைத்தார்.

ஜாஸ்மினின் முதலீடு தளங்களையும் அவரின் திறன்பேசி செயலிகளின்மூலம் அணுக முடியும். ஆனால், அவற்றிலிருந்து நிதியை திரும்பப்பெறுவது கடினம் என்பதால் மோசடிக்காரர்களுக்கு பல சவால்கள் உள்ளன.

இது பற்றி கூறுகையில், “முதலீடு தளத்திலிருந்து நம் நிதியை திரும்பப்பெறுவதற்கு முன்னர், அந்நிறுவனத்திலிருந்து ஒரு கணக்கு மேலாளர் நம்மை கைப்பேசிமூலம் தொடர்புகொள்வார். அப்போதுதான் அப்பரிவர்த்தனை ஏற்றுக்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்படும். மேலும், பணம் மீண்டும் கிடைப்பதற்கு மூன்று நாள்கள் வரை ஆகலாம்,” என்று ஜாஸ்மின் விளக்கினார்.

வருமுன் காப்போம்

தீங்குநிரல் மோசடிகளை எதிர்கொள்ளவும் வாடிக்கையாளர்களை பாதுகாக்கவும் சிங்கப்பூர் வங்கிகள் பலவித வழிமுறைகளை அறிமுகப்படுத்தி உள்ளன.

ஜாஸ்மினின் நிதி இடமாற்ற நடவடிக்கைகளுக்கான காரணம், அவரின் பணத்தைப் பாதுகாத்து பூட்டி வைப்பதே. இத்தகைய ஒரு ‘பணப்பூட்டு’ அம்சத்தை டிபிஎஸ், ஓசிபிசி, யுஓபி ஆகிய வங்கிகள் கடந்த ஆண்டு நவம்பரில் செயல்படுத்தின.

வங்கி கணக்கில் உள்ள சேமிப்புகளில் ஒரு பகுதியை மின்னிலக்க பரிவர்த்தனைகளுக்கு செலுத்த முடியாதபடி இனி நாம் தடுத்துக்கொள்ளலாம். இவ்வகையில் பூட்டப்பட்ட பின்னர், இந்நிதியை மின்னிலக்க வழிகளில் இடமாற்ற இயலாது. எனவே, மோசடிக்காரர்கள் வங்கிக் கணக்கை அணுகினாலும் அதிலிருந்து அந்நிதியை எடுத்துக்கொள்வது சிரமம்.

ஜாஸ்மின் பயன்படுத்திய முதலீடு தளங்களைப் போலன்றி, பணப்பூட்டு அம்சத்தால் பாதுகாக்கப்பட்டுள்ள நிதியை தானியங்கி பண இயந்திரத்திலிருந்தோ வங்கி கிளையிலிருந்தோ நேரில் மட்டுமே எடுத்துக்கொள்ளலாம். இத்தெரிவு வங்கியைப் பொறுத்து அமையும்.

ஏறத்தாழ 38,000 கணக்குகளில் இந்த பணப்பூட்டு அம்சம் இயக்கப்பட்டுள்ளதாகவும், மொத்தம் $3.2 பில்லியன் வெள்ளிக்கும் மேற்பட்ட நிதி பாதுகாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார் சிங்கப்பூர் வங்கி அமைப்பின் இயக்குநர் ஓங்-ஆங் அய் பூன்.

“பணப்பூட்டு அம்சமானது ஒவ்வொரு வங்கிக்கும் வேறுபடுகிறது. ஆனால், வங்கிக் கணக்குகளின் மின்னிலக்க அணுகல் அச்சுறுத்தப்பட்டால் கூடுதல் பாதுகாப்பு அளித்து வாடிக்கையாளர்களை காக்கவேண்டும் என்ற அவற்றின் நோக்கம் ஒன்றே,” என்றார் அவர்.

சிங்கப்பூர் நாணய ஆணையமும் சிங்கப்பூர் வங்கி அமைப்பும் அறிமுகப்படுத்தியுள்ள பிற மோசடி ஒழிப்பு வழிமுறைகள்:

  • வாடிக்கையாளர் திறன்பேசிகளில் உள்ள வங்கி செயலிகளில் தீங்குநிரல்களைக் கண்டுபிடித்து, அச்செயலிக்கு அணுகல் மறுப்பது போன்ற பாதுகாப்பு அம்சங்களை செயல்படுத்தும் ஓர் அம்சம்;
  • சந்தேகம் எழுந்தால் உடனே தங்களின் வங்கி;f கணக்குகளுக்கான மின்னிலக்க, கைப்பேசி அணுகலை தடுக்கும் அவசரகால சுயசேவையான ‘கில்-சுவிட்ச்’;
  • வங்கிகள் அனுப்பும் குறுஞ்செய்திகளிலும் மின்னஞ்சல்களிலும் உள்ள தட்டக்கூடிய இணைப்புகளை அகற்றுதல்;
  • $100 அல்லது அதற்கு குறைவான அளவிலிருந்தே நிதி இடமாற்ற பரிவர்த்தனை அறிவிப்புகள்;
  • கைப்பேசியில் புதிதாக வங்கி கணக்கை இணைக்கும் முன்னர் குறைந்த பட்சம் 12 மணி நேர கால தாமதம்

“மோசடிக்காரர்கள் பயன்படுத்தும் உத்திகள் தொடர்ந்து பன்முகத்தன்மையில், நுட்பத்தில் மாறிக்கொண்டே இருக்கின்றன,” என்றார் சிங்கப்பூர் நாணய ஆணையத்தின் பிரதிநிதி. 

இதனால், ஒரு தனிப்பட்ட வழிமுறை மட்டுமே முற்றிலும் சரியானதாக, பாதுகாப்பானதாக இருக்க முடியாது. பொதுமக்களை பாதுகாப்பதற்கு “தடுத்தல், கண்டறிதல், எதிர்கொள்ளுதல், மீட்சி, ஆகியவை தொடர்பிலான வழிமுறைகளின் கலவை தேவைப்படுகிறது,” வங்கிகளும் இவ்வழிமுறைகளைத் தொடர்ந்து மறுஆய்வு செய்து மறுவடிவமைத்துக்கொள்ளவேண்டும் என்றும் சிங்கப்பூர் நாணய ஆணையம் கூறியது. 

விழாக்கால மோசடிகள்

சீனப் புத்தாண்டு நெருங்கிக்கொண்டிருக்கும் வேளையில், விழாக்கால பொருள்களை வாங்குதல், குறுகியக்கால விடுமுறைகள் ஆகியவை வழக்கமாக அதிகரிக்கும். அதே சமயம், இணைய வர்த்தக மோசடிகளும் உயரும் என போலிசார் எச்சரித்துள்ளனர்.  

காவல்துறை கண்காணிப்பாளரும், மோசடி பொது கல்வி அலுவலகத்தின் துணை இயக்குநருமான மேத்தியூ சூ, இந்த இணைய வர்த்தக மோசடிகள் வெவ்வேறு வகைகளைக் கொண்டுள்ளதாக தெரிவித்தார். 

“கட்டணம் செலுத்திய பின்னர் பொருள்கள் வந்து சேராமல் போவது, வங்கி, கடன் அட்டை விவரங்களை அணுகி முறைகேடான பரிவர்த்தனைகள் ஏற்படுவது ஆகியவற்றில் தொடங்கி, கூடுதல் இழப்புகளை இழைக்கும் வல்லமை கொண்ட தீங்குநிரல் மோசடிகள் வரை இதில் அடங்கும்,” என்றார் அவர். 

மோசடிகளிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள பொதுமக்கள் பலவித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என்றும் திரு சூ குறிப்பிட்டார்.

மோசடிகளை நெருங்கவிடாமல் செய்ய

ஸ்கேம்ஷீல்ட் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களை இணைக்கவும்

ஸ்கேம்ஷீல்ட் செயலியை தரவிறக்கம் செய்துகொண்டு, வங்கி செயலிகள், சமூக ஊடக தளங்கள், சிங்பாஸ் கணக்குகள் ஆகியவற்றில் இருபடி சரிபார்ப்பு முதலிய பாதுகாப்பு அம்சங்களை சேர்த்துக்கொள்ளுங்கள். பேநவ், பேலா உள்ளிட்ட மின்னிலக்க வங்கி பரிவர்த்தனைகளுக்கு பரிவர்த்தனை வரம்புகளை ஏற்படுத்துங்கள். உங்களின் தொலைதொடர்பு நிறுவனங்களின்மூலம் பன்னாட்டு அழைப்புகளைத் தடுக்கலாம். முக்கிய வங்கிகள் வழங்கும் ‘பணப்பூட்டு’ அம்சத்தை செயல்படுத்தி அன்றாட செலவுகளுக்குத் தேவைப்படாத நிதியை ஒதுக்கி வைத்துக்கொள்ளுங்கள்.

அதிகாரப்பூர்வ தளங்களை நாடி மோசடி அறிகுறிகளை சரிபார்த்துக்கொள்ளவும்

ஸ்கேம்ஷீல்டின் வாட்சாப் வசதியைப் பயன்படுத்தியோ, மோசடி ஒழிப்பு உதவித் தொடர்பான 1800-722-6688 எண்ணை அலுவலக நேரங்களில் அழைத்தோ, scamalert.sg இணையத்தளத்தை நாடியோ, மோசடி அறிகுறிகளை சரிபார்த்துக்கொள்ளுங்கள். அலுவலக நேரங்களுக்குப் பின் 1800-255-0000 எனும் காவல்துறை உதவி தொடர்பை அழைத்து கூடுதல் சரிபார்ப்புகளையும் அறிவுரைகளையும் நாடலாம். சந்தேகப்படும்படியாக உள்ள இணைப்புகளைத் தட்டவேண்டாம். தெரியாதோரிடமிருந்து கைதொலைபேசிச் செயலிகளை தரவிறக்கம் செய்யவேண்டாம்.

அதிகாரிகள், குடும்பத்தார், நண்பர்களிடம் தெரிவிக்கவும்

வங்கியிடமும் காவல்துறையிடமும் உடனே மோசடி குற்றம் குறித்து பதிவு செய்யுங்கள். சந்தேகப்படும்படியான கணக்குகளை சமூக ஊடக தளங்களில் தடுக்கவும். ஆக அண்மைய மோசடி போக்குகளை குடும்பத்தார், நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள். அண்மைய மோசடி ஒழிப்பு ஆலோசனைகளைப் பெற தேசிய குற்றத் தடுப்பு மன்றத்தின் ஸ்கேம்அலர்ட் வாட்சாப் தளத்தைப் பின்தொடருங்கள்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!