மின்னிலக்கத் தற்காப்பின் வலிமையில் கூடுதல் கவனம்

சிங்கப்பூர் அறிவார்ந்த தேசமாகத் திகழ முடியுமா முடியாதா என்பதும் குடிமக்கள் நல்ல வேலைகளையும் சேவைகளையும் பெறுவதும் அதன் மின்னிலக்கத் தற்காப்பின் வலிமையைப் பொறுத்துள்ளது. தொடர்பு, தகவல் அமைச்சர் எஸ். ஈஸ்வரன் இதனை இன்று கூறினார்.

இணைய ஊடுருவல் சம்பவங்கள், மோசடிகள், போலி செய்திகளின் பரவல் ஆகிய மிரட்டல்களை சிங்கப்பூர் எதிர்நோக்குவதாகத் திரு ஈஸ்வரன் தெரிவித்தார். சிங்கப்பூரின் மின்னிலக்கத் தயார்நிலை வலுப்படுத்தப்பட்டு வருவதாகக் கூறிய திரு ஈஸ்வரன், இதன் மூலம் தொழில்நுட்பத்தின் அனுகூலங்கள் அனைவரையும் சென்றடைய முடியும் என்றும் சொன்னார்.

ஃபோர்ட் கென்னிங் கிரீனில் முழுமைத் தற்காப்பை நினைவுகூரும் நிகழ்ச்சி ஒன்றில் திரு ஈஸ்வரன் உரையாற்றினார். தற்காப்புக்கான மூத்த துணையமைச்சர் மாலிக்கி ஒஸ்மானுடன் அவர் மின்னிலக்கத் தற்காப்பு இயக்கத்திற்கான சின்னம் ஒன்றையும் “இணையத்தில் பாதுகாப்பாகவும் விழிப்பாகவும் பொறுப்பாகவும் இருங்கள்”( “Be Secure, Alert, and Responsible Online”) என்ற வாசகத்தையும் வெளியிட்டார். 

முழுமைத் தற்காப்புக் கட்டமைப்பில் மின்னிலக்கத் தற்காப்பு சேர்க்கப்படலாம் என்று தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென் கடந்தாண்டு அக்டோபர் கோடிகாட்டினார்.