பணிப்பெண்ணின் மூக்கை உடைத்த முதலாளிக்குச் சிறை

இந்தோனீசியப் பணிப்பெண் ஒருவரை அவரது முதலாளி பல்வேறு விதமாக வதைத்தார்.  ஜென்னி சான் யுன் ஹுய் என்ற அந்தப் பெண், பணிப்பெண் ரசியின் மூக்கை உடைத்ததுடன் பிளாஸ்டிக் ஒன்றால் அடித்து பெண்ணின் தலையிலிருந்து ரத்தம் வழியச் செய்தார்.  தனக்கு எதிராக சுமத்தப்பட்ட வன்முறைக் குற்றச்சாட்டுகள் அனைத்தையும் 41 வயது ஜென்னி நீதிமன்றத்தில் இன்று (பிப்ரவரி 27) ஒப்புக்கொண்டார்.

ஜென்னியின் வீட்டில் 2016ஆம் ஆண்டில் அந்தப் பணிப்பெண்ணைக் கடுமையாக வேலை வாங்கியதுடன் அவரது ஒவ்வோர் அசைவையும் கண்காணிப்புக் கேமராக்கள் வழியாகக் கண்காணித்தார். 

பணிப்பெண்ணுக்குப் போதிய ஓய்வு கொடுக்கப்படாததால் வேலைகளைச் சோர்வுடனும் தூக்கத்துடனும் செய்தார். இதனால் ஆத்திரமடைந்த ஜென்னி, அந்தப் பணிப்பெண்ணை அடித்து உதைக்க ஆரம்பித்தார். பணிப்பெண்ணை அவர் கண்களிலும் மூக்கிலும் காயப்படுத்தினார். தனது நண்பர் ஒருவரின் ஆலோசனையின் பேரில் அந்தப் பணிப்பெண் இறுதியாக இந்தோனீசியத் தூதரகத்தைத் தொடர்புகொண்டு உதவி கேட்டார். தூதரகத்தினர் உடனே அந்தப் பணிப்பெண்ணை டான் டோக் செங் மருத்துவமனையில் சேர்த்தனர்.

ஜென்னி மனநலப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. ஆயினும் இது குறித்த விரிவான தகவல்கள் வெளியிடப்படவில்லை. ஜென்னியின் சுயக் கட்டுப்பாட்டை மனநலப் பிரச்சினை பாதித்ததா என்பது உறுதி செய்யப்படும். பணிப்பெண்ணைக் கடுமையாகக் காயப்படுத்திய குற்றத்திற்காக ஜென்னிக்கு 15 ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.