விபத்து: காருக்கடியில் சிக்கிய பெண்ணை மீட்க உதவிய ராணுவப் பணியாளர், கட்டுமான ஊழியர்கள்

ஆன்சன் ரோடு, மேக்ஸ்வெல் ரோடு சாலைச் சந்திப்பில் இன்று (ஜனவரி 17) காலை நிகழ்ந்த விபத்தில் ஹோண்டா கார் ஒன்றின் அடியில் சிக்கிக்கொண்ட பாதசாரி பெண்ணை அந்த வழியாகச் சென்ற பலர் மீட்க உதவினர்.

அந்த வழியாகச் சென்ற டாக்சி ஓட்டுநர் கிரேம், காரின் அடியிலிருந்து தலை மட்டும் தெரிந்ததாகவும் அது குறித்து தனது பயணி திரு ராகேஷிடம் தெரிவித்ததாகவும் குறிப்பிட்டார்.

முழுநேர ராணுவப் பணியாளரான திரு ராகேஷ் சாங்கி கடற்படைத் தளத்துக்கு டாக்சியில் சென்றுகொண்டிருந்தார்.

விபத்தில் சிக்கியவருக்கு உதவ முடிவெடுத்த திரு கிரேம் தனது டாக்சியை சாலையோரத்தில் நிறுத்தினார். அவரும் திரு ராகேஷும் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். 

அந்த வழியில் சென்றவர்களை உதவிக்கு அழைத்தார் திரு கிரேம். அப்போது, அவ்வழியாகச் சென்ற கட்டுமான ஊழியர்கள் தங்களது வாகனத்திலிருந்து இறங்கி வந்து ஹோண்டா காரைத் தூக்கி, அடியில் சிக்கிய பெண்ணை மீட்க உதவினர்.

மார்புப் பகுதியில் வலி இருப்பதாகக் கூறிய அந்தப் பெண்ணின் விலா எலும்புகள் முறிந்திருக்கலாம் என்று திரு கிரேம் கூறினார்.

அதனால், அவரை அதிகம் நகர்த்தாமல் முதலுதவிகளைச் செய்தார் திரு ராகேஷ்.

ஹோண்டா காரின் ஓட்டுநர் அதிர்ச்சியிலிருந்து விடுபடாத நிலையில், அவரது வாய்ப் பகுதியிலும் ரத்தம் காணப்பட்டது.

அந்த இடத்துக்கு ஓர் அவசர சிகிச்சை மருத்துவ வாகனமும் இரண்டு தீயணைப்பு வாகனங்களும் விரைந்து வந்ததாக ஸ்டோம்ப் வாசகருமான திரு கிரேம் குறிப்பிட்டார்.

சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை அதிகாரிகளிடம் அடிபட்ட பெண்ணுக்கு அளிக்கப்பட்ட முதலுதவி உட்பட தகவல்களைப் பகிர்ந்துகொண்டார் ராகேஷ்.

இந்த விபத்து குறித்து காலை 7.07 மணிக்குத் தகவல் கிடைத்ததாக போலிசார் தெரிவித்தனர்.

சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது, 29 வயது பெண் பாதசாரி சுயநினைவுடன் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. விபத்து குறித்த விசாரணை தொடர்கிறது.

#தமிழ்முரசு #கட்டுமானஊழியர் #ராகேஷ்