இரண்டு கட்டுமானத் தளங்களுக்கு வேலை நிறுத்த ஆணை

சிங்கப்பூரில் டெங்கி பரவல் அதிகரித்து வரும் சூழலில், 2 கட்டுமானத் தளங்களில் கொசுப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தவறியதற்காக, அவை வேலை நிறுத்த ஆணையை பெற்றுள்ளன.

அந்தக் கட்டுமானத் தளங்களை நிர்வகிக்கும் நிறுவனங்களுக்கு எதிராக அமலாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய சுற்றுப்புற வாரியம் இன்று (செப்டம்பர் 16) வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது.

அருணாசலம் செட்டி ரோடு, கிம் யாம் ரோடு ஆகியவற்றுக்கு அருகில் உள்ள ஒரு கட்டுமானத் தளத்துக்கு ஜூலை 20, செப்டம்பர் 9 ஆகிய தேதிகளில் வேலை நிறுத்த ஆணை விதிக்கப்பட்டது.

தற்போது நடப்பில் இருக்கும் இரண்டாவது வேலை நிறுத்த ஆணை, தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்த பிறகே மீட்டுக்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. 364 டெங்கி சம்பவங்கள் பதிவான டெங்கி குழுமத்தில் அந்தக் கட்டுமானத் தளம் உள்ளது.

அந்தத் தளத்தில் பல்வேறு இடங்களில் கொசுப்பெருக்கம் கண்டுபிடிக்கப்பட்டது.

சிராங்கூன் நார்த் அவென்யூ 1ல் உள்ள மற்றொரு கட்டுமானத் தளத்திற்கு ஜூலை 15ஆம் தேதி, புதன்கிழமை என 2 வேலை நிறுத்த ஆணைகள் விதிக்கப்பட்டன.

இவ்வாண்டு ஜனவரி முதல் ஆகஸ்ட் வரையிலான காலகட்டத்தில்  கட்டுமானத் தளங்களுக்கு 250 சம்மன்கள் வழங்கப்பட்டதுடன், 10 ஒப்பந்ததாரர்கள் மீண்டும் மீண்டும் குற்றம் புரிந்ததற்காக நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படுவர்.

மேற்கண்ட நான்கு வேலை நிறுத்த ஆணைகளைத் தவிர, 17 அத்தகைய வேலை நிறுத்த ஆணைகள் இவ்வாண்டில் வழங்கப்பட்டுள்ளன.

இந்த ஆண்டின் முதல் 37 வாரங்களில் 28,944 டெங்கி சம்பவங்கள் பதிவாகின. இதுவரை ஆக அதிகமாக டெங்கி பதிவான 2013ஆம் ஆண்டு முழுவதும் 22,170 டெங்கி சம்பவங்கள் பதிவானது குறிப்பிடத்தக்கது.

இவ்வாண்டில் செப்டம்பர் 5 வரை 25 முதல் 92 வயதுக்குட்பட்ட 21 பேர் டெங்கியால் உயிரிழந்தனர்.
 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon