நம்பிக்கையும் குதூகலமும் தரும் தீபாவளி ஒளி வெள்ளம்

வெளிப்புற நடவடிக்கைகள் அனைத்தும் இவ்வாண்டு வெகுவாக குறைக்கப்பட்டாலும் லிட்டில் இந்தியாவின் தீபாவளி ஒளியூட்டு நிகழ்ச்சியை வீட்டிலிருந்து பார்த்தது தமக்கு கொண்டாட்ட உணர்வை அதிகப்படுத்தி உள்ளதாக 81 வயது அச்சம்மாள் தெரிவித்திருக்கிறார்.

இவ்வாண்டின் தீபாவளி உத்சவ், மற்றும் தீபாவளி ஒளியூட்டு விழாவை துணைப்பிரதமர் ஹெங் சுவீ கியட் இந்திய பாரம்பரிய உடை அணிந்தவாறு தொடங்கி வைத்ததைக் கண்டு அச்சம்மாள் மகிழ்ந்தார்.

தற்போது நிலவும் கொவிட்-19 தொற்றுநோய்க்கு மத்தியில் இத்திருநாளுக்காகத் தயாராகும் அச்சம்மாள், சிறு வயதில் அப்போதைய மலாயாவின் கோத்தா திங்கியிலுள்ள ரப்பர் மரத்தோட்டத் தொழிலாளர்களுக்கு இடையே வளர்ந்ததை நினைவுகூர்ந்தார்.

“தீபாவளிக்கு சில நாட்களுக்கு முன்பே நாங்கள் ஒன்றுகூடி பலகாரங்கள் முதல் பல்வேறு பதார்த்தங்களை ஒவ்வொன்றாக தயாரிப்போம். ஆயினும் இன்றைய நகரச் சூழலில் லிட்டில் இந்தியாவுக்குச் சென்று தங்களுக்கு வேண்டியவற்றை உடனே வாங்க மக்களால் முடிகிறது,” என்றும் தற்போது வீட்டில் ஓய்வாக இருக்கும் அச்சம்மாள் கூறினார்.

திருமதி அச்சம்மாளின் ஐந்து பிள்ளைகளும் ஆறு பேரப்பிள்ளைகளும் அவரைக் காண வருவார்கள் என எதிர்பார்க்கிறார். தற்போதைய சூழலில் வீடுகளில் கூட அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்படுகிறது. ஆயினும் சிங்கப்பூரின் முன்னேறியுள்ள கிருமித்தொற்று நிலவரத்தாலும் கடுமையான நடமாட்டக் கட்டுப்பாடுகள் கொண்ட நோய்ப்பரவல் முறியடிப்புக் காலக்கட்டத்தின் தளர்வினாலும் நிம்மதி அடைவதாக திருமதி அச்சம்மாளின் மகளான திருமதி கண்ணகி அழகு, 54 தெரிவித்தார். “ சிறு குழுக்களாக நாங்கள் என் அம்மாவைக் காணச் செல்லலாம், வெளியிலும் செல்லலாம்,” என்று அவர் கூறினார்.

1990களிலிருந்து பேத்தி கனகேஸ்வரி,30, சிறு வயது முதல் ஆண்டுதோறும் கேம்பல் லேனிலும் சிராங்கூன் பிளாசாவுக்கு அருகிலும் உள்ள தீபாவளிச் சந்தைகளுக்குச் சென்றுவருவதாகத் தெரிவித்தார். தற்போதைய கிருமிப்பரவலால் உள்ள வழக்கநிலையை சிங்கப்பூரிலுள்ள மற்றவர்களைப் போல் தாமும் தம் குடும்பத்தினரும் ஏற்றுக்கொண்டதாகத் தெரிவித்தார். இருந்தபோதும் தாமும் தம் குடும்பத்தினரும் இணையம் வழியாக பல்வேறு புதிய நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள ஆவலாக இருப்பதாகத் தெரிவித்தார் கனகேஸ்.

லிஷா எனப்படும் லிட்டில் இந்தியா கடைக்காரர்கள் மரபுடைமைச் சங்கம், பொதுமக்களுக்கிடையே கொண்டாட்ட உணர்வை அதிகரிப்பதற்கான முயற்சிகளை எடுத்து வருகிறது. பொதுமக்கள் பங்கேற்று தீபாவளி உணர்வில் திளைப்பதற்கென்றே இவ்வாண்டு பல்வேறு நேரடி மற்றும் இணைய நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக அந்தச் சங்கம் தெரிவித்தது.

முறுக்கு முதல் காரமான கோழி, இறைச்சி குழம்புகள் வரை உணவு பதார்த்தங்கள் தீபாவளியில் முக்கிய பங்கு வகிக்கின்றன என்பதை நாம் அனைவரும் அறிந்ததே. ‘தீபாவளி கேஸ்ட்ரானமி’ நிகழ்ச்சியில் பங்கேற்கும் குறிப்பிட்ட உணவகங்களைச் சேர்ந்த சமையற்கலை வல்லுநர்களால் இந்த வகுப்புகள் நடத்தப்படும். இந்த வகுப்புகளின்போது பல்வேறு அறுசுவை பதார்த்தங்கள் பார்வையாளர்களுக்குச் சமைத்து காட்டப்படும். இந்திய சமையற்கலையின் நுணுக்கங்கள், சிறப்புமிக்க சமையல் மூலப்பொருட்கள் போன்றவை குறித்த விளக்கங்களைப் பெறுவதுடன் சில எளிய உணவு வகைகளை அவர்கள் சமைக்க கற்றுக்கொள்ளலாம். இந்தப் பங்கேற்பாளர்களுக்கான இணையப் போட்டி ஒன்றும் நடத்தப்படும். குறிப்பிட்ட சில ஹேஷ்டேக்குகளுடன் அவர்கள் தாங்கள் சமைப்பதைக் காட்டும் காணொளிகளை #thedeepavalist #deepavalilightup #deepavalisg #deepavaliLiSHA #VisitSingapore #VisitLittleIndia #LittleIndia ஆகிய ‘ஹேஷ்டேக்’ குறியீடுகளுடன் பதிவேற்றம் செய்யவேண்டும்.

நவம்பர் 7ஆம் தேதியன்று இணையத்தில் நடக்கும் மருதாணி பயிலரங்கில் பங்கேற்பாளர்களுக்கு சில எளிமையான வடிவங்கள் சொல்லிக்கொடுக்கப்படும்.

இதில் பல்வேறு இனங்களைச் சேர்ந்த 50 முதல் 70 வரையிலான பங்கேற்பாளர்கள் இணைவர் என எதிர்பார்க்கப்படுகிறது. பங்கேற்பாளர்கள் தங்களது புத்தாக்கமிக்க படைப்புகளை #thedeepavalist #deepavalilightup #deepavalisg #deepavaliLiSHA #VisitSingapore #VisitLittleIndia ஆகிய ஹேஷ்டேக்குகளுடன் இணைக்கப்பட்ட காணொளி மூலமாக இவர்களுக்காக நடத்தப்படும் போட்டி ஒன்றுக்கு சமர்ப்பிக்கலாம். வெற்றியாளர்களுக்கு கவர்ச்சிகரமான பரிசுகள் காத்திருக்கின்றன.

அதே நாளில், தீபாவளிக் கதையை விளக்கும் ‘தீபம் என்ற நாடகத்தின் நேரலை லிஷாவின் ஃபேஸ்புக் பக்கத்தில் இடம்பெறும். வண்ண ஆடைகளும் கண்கவர் அலங்காரங்களும் கொண்டுள்ள இந்தக் காணொளியில் லிட்டில் இந்தியாவிலுள்ள சில பகுதிகளில் முன்பதிவு செய்யப்பட்ட நாடக அங்கங்களும் இடம்பெறும். இந்த நாடகத்தைக் காண்பவர்களை நிகழ்ச்சியில் பங்கேற்கும் வகையில் இருவழித் தொடர்பு அம்சமும் இதில் உள்ளது.

நவம்பர் 13ஆம் தேதி நடைபெறும் தீபாவளித் திருநாளை வரவேற்கும் கலைநிகழ்ச்சி ஒருபுறம் இருக்க, மற்றொரு பெரும் கலைநிகழ்ச்சியையும் எதிர்பார்க்கலாம்.

அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜப்பான், மணிலா, மலேசியா, ஐக்கிய அரபு சிற்றரசு, இந்தியா ஆகிய நாடுகளில் உள்ள தமிழர் அமைப்புகளால் இணைந்து தயாரிக்கப்படும் அந்த இரண்டு மணிநேர ‘மெகா தீபாவளி’ இணைய நிகழ்ச்சி லிஷாவின் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.

மகாலட்சுமி தெய்வத்தின் வடிவம் இவ்வாண்டு லிட்டில் இந்தியாவின் தீபாவளிக் கொண்டாட்டத்தின் கருப்பொருள். தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு வரும் தீபாவளி சுபிட்சத்தைக் கொண்டுவரும் என வேண்டிக்கொள்வதாக கனகேஸ் தெரிவித்தார்.

கவனிக்கவேண்டிய நிகழ்வுகள்:

தீபாவளி ஒளியூட்டு

தேதி: அக்டோபர் 3 முதல் டிசம்பர் 6 வரை

நேரம்: இரவு 7 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை

இடம்: சிராங்கூன் ரோடு, ரேஸ் கோர்ஸ் ரோடு

தீபாவளி கேஸ்ட்ரானமி

தேதி: அக்டோபர் 14ஆம் தேதி முதல் டிசம்பர் 6ஆம் தேதி வரை

நேரம்: பங்கேற்கும் உணவங்கள் செயல்படும் நேரத்தைப் பொறுத்தது

இடம்: லிட்டில் இந்தியாவிலுள்ள பல்வேறு உணவகங்கள்

ரங்கோலி கலைப்படைப்பு

காட்சிக்கு வைக்கப்படும் காலக்கட்டம்: 31ஆம் தேதி முதல் டிசம்பர் 6ஆம் தேதி வரை

இடம்: ‘போலி அட் இந்து ரோடு’

மருதாணிப் பயிலரங்கு

தேதி: நவம்பர் 7ஆம் தேதி

நேரம்: பிற்பகல் 3.30 ஆம் தேதி முதல் 4.30 மணிவரை (இது பிறகு உறுதி செய்யப்படும்)

தீபம்- தீபாவளி கதை

தேதி: நவம்பர் 7ஆம் தேதி

நேரம்: இரவு 7 மணி

அமர்க்கள தீபாவளி-

தேதி: நவம்பர் 13ஆம் தேதி

நேரம்: இரவு 10 மணி முதல் பின்னிரவு 12.30 மணி வரை

இடம்: மீடியாகார்ப் ஸ்டூடியோ

மெகா தீபாவளி

தேதி: நவம்பர் 14ஆம் தேதி

நேரம்: காலை 10 மணி முதல் நண்பகல் 12 மணி வரை

மேல் விவரங்கள் இங்கே.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!