சிங்கப்பூரின் மூத்த தமிழறிஞர் பா.கேசவன் காலமானார்

மூத்த தமிழாசிரியர்களில் ஒருவரும் தமிழறிஞரும் சமூக ஆர்வலருமான திரு பா.கேசவன் காலமானார். அவருக்கு வயது 85. கடந்த நான்கு நாட்களாக உடல்நிலை மோசமடைந்த நிலையில் இன்று காலை 6.45 மணி அளவில் இல்லத்தில் இயற்கை எய்தினார். அவருடைய இழப்பு சிங்கப்பூர் தமிழ்ச் சமூகத்துக்குப் பேரிழப்பாகும் என்று பலரும் இரங்கல் தெரிவித்தனர்.

“தமிழ் மொழியில் ஆழமான அறிவைப் பெற்றிருந்த அவரிடம் சந்தேகம் கேட்டால் மிகத் தெளிவாக விளக்குவார். மொழிப் பற்றும் இனப்பற்றும் மிக்கவர்,” என்று கூறினார் சிங்கப்பூர் தமிழாசிரியர் சங்கத்தின் ஆலோசகரும் 60 ஆண்டுகால நண்பருமான சி.சாமிக்கண்ணு. பணி ஓய்வு பெற்ற பின்னரும் கல்வி அமைச்சின் பல பதிப்புகளுக்கு மொழிவள ஆசிரியராக அவர் பணிபுரிந்ததாகவும் கூறினார்.

‘சிங்கப்பூர் சித்தார்த்தன்’ என்ற புனைபெயரில் கட்டுரைகளையும் இலக்கணங்களையும் எழுதி வந்த இவர், 1970, 1980களில் தமிழ் வானொலியில் படைத்த ‘எளிய தமிழ்’ நிகழ்ச்சி வழி தமிழ் மொழியையும் இலக்கணத்தையும் எளிதாகக் கற்றுக்கொண்டவர்கள் பலர். ஒரு தலைமுறைக்கே இலக்கணத்தை கற்றுத் தந்த இந்த உரைகள் ‘இலகு தமிழில் இனிக்கும் தமிழ் இலக்கணம்’ என்ற தலைப்பில் நூலாக வெளிவந்தது. 2005ல் தமிழக அரசின் ‘சிறந்த இலக்கண நூல்’ விருதைப் பெற்ற இந்நூல், இவ்விருதைப் பெற்ற முதல் நூல்.

இலக்கியம், இலக்கணக் கட்டுரைகளைப் படைத்துள்ள திரு கேசவன், ‘தமிழ் வாழும்’, ‘தமிழ் நலம் தமிழர்க்கு ஆக்கம்’, ‘நமது இலக்கு என்ன? அதை அடைவது எப்படி’, ‘மெய்ப்பொருள் காண்போம்! மேனிலை அடைவோம்!’ ஆகிய நூல்களையும் எழுதியுள்ளார்.

தஞ்சைமாவட்டம், மன்னார்குடி, கடுக்கக்காட்டில் பிறந்த திரு கேசவன், 1952ஆம் ஆண்டில் சிங்கப்பூரில் குடியேறினார். படிப்பை முடித்த அவர், வாசுகித் தொடக்கப் பள்ளியில் தம் ஆசிரியர் பணியைத் தொடங்கினார். தொடர்ந்து உயர்நிலைப் பள்ளி, தொடக்கக்கல்லூரிகளில் தமிழாசிரியராக இருந்தார். பின்னர் தமிழ்ப் பள்ளி, தமிழ்க் கல்விப் பிரிவுக்குக் கண்காணிப்பு அதிகாரியாகவும் பணியாற்றினார்.
சிங்கப்பூர் பாடத்திட்ட மேம்பாட்டுக் கழகத்திலும் அறநெறிக் கல்வித்திட்டக் குழுவிலும் பணியாற்றிய அவர், கல்வி மேம்பாட்டு அதிகாரியாகவும் பணிபுரிந்துள்ளார். கல்வி அமைச்சின் தமிழ்மொழி, இலக்கிய பாடத்திட்ட குழுவின் செயலாளராகவும் இருந்துள்ளார்.

ஓய்வுபெற்றபின் உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையம், தேசியக் கல்விக்கழகம் ஆகியவற்றில் தமிழாசிரியராகவும் விரிவுரையாளராகவும் பணிபுரிந்தார். தமிழ் முரசு, கல்வி அமைச்சு, தமிழாசிரியர் சங்கம் இணைந்து வழங்கும் நல்லாசிரியர் விருது நிகழ்ச்சியில் ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’, 2012ல் முதன்முதலில் இவருக்கு அளித்துச் சிறப்பிக்கப்பட்டது.

“கவிமாலை தொடங்கப்பட்ட காலத்திலிருந்து அதன் பார்வையாளராகப் பங்கேற்று ஆலோசனைகளும் ஆதரவும் நல்கிய அவரே, அமைப்பைப் பதிவு செய்ய நினைத்தபோது தலைவராகப் பொறுப்பேற்கக் கோரினோம்,” என்றார் கவிமாலை நிறுவனரும் ‘மக்கள் மனம்’ மாத இதழின் ஆசிரியருமான திரு பிச்சினிக்காடு இளங்கோ, 69.
கவிமாலை அமைப்பின் முதல் அதிகாரபூர்வ தலைவர், சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம், தமிழர் பேரவை ஆகிய அமைப்புகளின் தலைவர், தமிழ்மொழிப் பண்பாட்டுக் கழகத்தின் செயலாளர் என பல தமிழ், சமூக அமைப்புகளில் பங்காற்றிய திரு கேசவன், பாஸ்கர் ஆர்ட்ஸ் அகடமியின் இயக்குநராகவும் செயல்பட்டுள்ளார்.

“மொழி, இலக்கணம், இலக்கியம், கல்வி, கலை, அறநெறி, இனம், சமூகம் முதலியவற்றில் திரு பா.கேசவன் ஆற்றியுள்ள பணிகள் அளப்பரியன,” என்று குறிப்பிட்டார் சிங்கப்பூரின் மூத்த தமிழறிஞர் முனைவர் சுப.திண்ணப்பன்.
“தமிழாசிரியர் என்கிற முறையில் சமூகத்திற்கு அரும்பாடுபட்டுள்ளார். 1994 முதல் 1999ஆம் ஆண்டு வரை தமிழர் பேரவை தலைவராக இருந்தபோது மொழி, சமூகம் மேம்பட பலவகையில் பங்களித்துள்ளார்,” என்றார் தமிழர் பேரவை தலைவர் வே.பாண்டியன்.

மனைவி திருமதி சாந்தகுமாரி, 78, பிள்ளைகள் திருமதி கோமதி, 52, திரு ‌சியாமா சுந்தர், 39, மூன்று பேரப்பிள்ளைகளை விட்டுச் சென்றுள்ளார். 131 லவண்டர் சாலையில் உள்ள ‘சிங்கப்பூர் காஸ்கேட்’ மையத்தில் இன்றும் நாளையும் திரு கேசவன் அவர்களின் நல்லுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தலாம். நாளை மண்டாய் தகனச்சாலையில் அன்னாரின் நல்லுடல் தகனம் செய்யப்படும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!