மண்ணை வணங்கும் வண்ணக் கோலங்கள்

தேசிய தின அணிவகுப்பு 2023ல் இடம்பெற்ற குறும்படங்களில் இடம்பெற்றோரில் ரங்கோலிக்கலைஞர் விஜயா மோகனும் ஒருவர். ‘சிங்கா ரங்கோலி’ என்ற ஆர்வல அமைப்பை நடத்திவரும் கலை மனோவியல் தத்துவ நிபுணரான திருமதி விஜயா மோகன், தம்மைப் பற்றி விளக்கிய அந்தப் படத்தைப் பார்த்த பொதுமக்கள் சிலர், அவரை அணுகிப் பேசியதாக மகிழ்ச்சியுடன் கூறினார்.

இவர் ஸ்ரீரங்கத்தில் பிறந்து வளர்ந்தார். 1979ல் கல்லூரி விடுமுறையின்போது சிங்கப்பூரில் வேலை செய்துகொண்டிருந்த அண்ணன்மார்களைப் பார்க்க இங்கு முதன்முதலாக வந்த திருமதி விஜயா, 1992ல் தம் கணவருடன் சிங்கப்பூருக்கு மறுபடியும் வந்தார். சிங்கப்பூர் மிகவும் பிடித்துப்போய் இங்கேயே தங்க முடிவு செய்து பாலர் பள்ளி ஆசிரியராகத் தகுதிபெற்ற பிறகு, சிறப்புத் தேவைப் பள்ளியுடைய பிள்ளைகளுக்கும் கற்றல் குறைபாடு உள்ள பிள்ளைகளுக்குமான பட்டயச்சான்றிதழைப் பெற்றார்.

2003ல் திருமதி விஜயா ரங்கோலியில் தமது முதல் கின்னஸ் உலகச் சாதனையைப் புரிந்தார். அந்தச் சாதனைக்குப் பிறகு அவர் துரிதத்துடன் செயல்பட்டு இதுவரை 45 சாதனைகளைச் செய்து முடித்திருக்கிறார்.

2006ல் அவர் கலை மனோவியல் தத்துவத் துறையில் தம் 48வது வயதில் முதுகலைப் பட்டத்தைப் பெற்றார். அன்றுமுதல், ரங்கோலிக் கலையை ஒரு சிகிச்சைமுறையாகப் பயன்படுத்தி வரும் திருமதி விஜயா, பள்ளிகள், ஆதரவற்ற சிறார்களுக்கான இல்லம், முதியோர் இல்லம் போன்ற இடங்களில் அக்கலையைக் கையாள்கிறார்.

முதியோர் இல்லத்தில் இருப்பவர்கள் பேசுவது தமக்குப் புரியவில்லை என்றும் தாம் பேசுவது அவர்களுக்குப் புரியவில்லை என்றும் கூறிய திருமதி விஜயா, அந்தத் தொடர்பு இடைவெளிக்கு ஒரு பாலமாய்த் திகழ்வது ரங்கோலியே என்றார்.

ரங்கோலி வரைவது ஒருவரது உணர்ச்சிகளை வெளிப்படுத்த உதவும் என்று கூறினார். “வண்ணங்கள் எண்ணங்களை மாற்றும். இந்தக் கோலங்கள், குணப்படுத்தும் தன்மை உடையவை. மனிதர்களின் வெவ்வேறு புலன்களை ஈடுபடுத்த வல்லவை, ” என்றார் திருமதி விஜயா.

2005ல் சிங்கப்பூர் குடியுரிமையைப் பெற்ற திருமதி விஜயா, மக்கள் எங்கு பிறந்து வளர்ந்தனர் என்ற அடிப்படையில் பாகுபாடு பார்க்காமல் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற கோட்பாட்டைத் தாம் பின்பற்றுவதாகக் கூறுகிறார்.

தமது ரங்கோலிப் படைப்புடன் திருமதி விஜயா. படம்: கி.ஜனார்த்தனன்

ஐந்து வயது முதல் ரங்கோலி கோலம் போடுவதில் ஈடுபட்டு வரும் திருமதி விஜயா, தம் தாயாரே தம் ஆசான் என்றார். இரண்டு பிள்ளைகளுக்குத் தாயாராகவும் இரண்டு பேரப்பிள்ளைகளுக்குப் பாட்டியாகவும் உள்ள திருமதி விஜயா, ரங்கோலிக் கோலங்களை வரைய அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளுக்குப் பல்வேறு நிறுவனங்களால் அழைக்கப்பட்டார்.

பல இன மக்கள் தம்மிடம் இந்த ரங்கோலிக் கலையைக் கற்றுக்கொண்டு அதனைப் படமெடுத்து வீட்டில் வைப்பது தமக்குப் பெருமை அளிப்பதாக திருமதி விஜயா கூறினார்.

“சிங்கப்பூர் எனக்குத் தாய்நாடு என்றே சொல்லவேண்டும். என்னை ஊக்குவித்து என் மனதின் அனைத்து விருப்பங்களையும் நிறைவேற்றக்கூடிய ஓர் இடம் இது,” என்று கூறினார். சிங்கப்பூர் மக்களின் துணையோடு தமது 45 கின்னஸ் சாதனைகளைப் பெற்றிருப்பதாகக் கூறிய அவர், தம்மீது சிங்கப்பூர் மக்கள் வைத்துள்ள நம்பிக்கையைக் கண்டு நெகிழ்வதாகச் சொன்னார்.

தொண்டூழியத்தின்வழி பிறரின் இன்பதுன்பங்களில் பங்கேற்று நிம்மதியும் மனநிறைவும் பெறும்படி மக்களிடம் தாம் கேட்டுக்கொள்ள விரும்புவதாகக் கூறினார் திருமதி விஜயா.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!