மத்திய நகர் பகுதியில் பசுமைச் சூழல்

புக்கிட் தீமா - ரோச்சோர் பசுமை வழித்தடம் என்று குறிப்பிடப்படும் அந்த 11 கிலோ மீட்டர் வழித்தடம் புக்கிட் தீமா கால்வாய்க்கு நெடுகே அதற்கு இணையாக அமைய உள்ளது.

ஜூரோங் ஏரித் தோட்டங்கள், சிங்கப்பூர் பூமலை, கடலோர பூந்தோட்டங்கள் ஆகிய மூன்றுக்கும் இடையில் சைக்கிளோட்டிகளும் நடையர்களும் தங்கு தடையின்றி தொடர்ந்து செல்வதற்கான வழியை அந்தப் புதிய வழித்தடம் உருவாக்கித் தரும்.

புக்கிட் தீமா கால்வாய்க்கு உயரே, புக்கிட் தீமாவுக்கும் டன்னர்ன் ரோட்டிற்கும் இடையில் 1.4 கிலோ மீட்டர் நீள மேல்மட்ட பூங்காவை அமைக்கும் கட்டுமானப் பணி 2021ல் தொடங்கும்.

நிலப் பற்றாக்குறை உள்ள கட்டுக்கோப்பான ஒரு நகரில் கிடைக்கக்கூடிய நில வளத்தைச் செம்மையாகப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் இந்த மேல்மட்ட பூங்கா அமைக்கப்படுகிறது.

“மழைக்காட்டின்” அனுபவத்தை அளிப்பதுடன் புக்கிட் தீமா கால்வாய்க்கு மேலே நடப்பவர்களுக்கு கூடுதல் நிழலை இந்த மரங்கள் அளிக்கும்,” என்று தெரிவித்தார் தேசிய பூங்கா கழகத்தின் மேம்பாட்டு, நிர்வாக இயக்குநர் ஜி.கண்ணகி.

எதிர்காலத்தில் அதை காலாங் ரிவர்சைடு பூங்கா வரையில் நீட்டிப்பதற்கான திட்டங்களும் இருக்கின்றன.

இதன் மூலம் மேற்குப் பகுதியில் வசிப்பவர்கள், நகர மையத்தின் பசுமையை அனுபவிக்க வாய்ப்புக் கிடைக்கும் என்று கண்ணகி தெரிவித்தார்.

வழித்தடத்தைக் காலாங் வரை நீட்டிப்பதால் சிங்கப்பூரின் மூன்று தேசிய தோட்டங்களுக்கும் அதன்மூலம் இணைப்புக் கிடைக்கும்.

புக்கிட் தீமா-ரோச்சோர் பசுமை வழித்தடத்தின் முதற்கட்டம் புக்கிட் தீமா ரயில்வே நிலையம் அருகே உள்ள மேம்பாலங்களையும் ரயில் உலாச் சாலையையும் இணைக்கும்.

இந்தப் பசுமைப் பாதையில் முதல் 1.4 கிலோ மீட்டரில் ரெயின் ட்ரீ போன்ற மரங்கள் அணிவகுக்கும். அத்துடன், கழிவறைகள், சைக்கிள் பாதைகளுடன் மரபுடைமை நிலையமும் இங்கே அமையவுள்ளன.

சென்ற வாரம் வெளியிடப்பட்ட இந்த பசுமைப் பாதைத் திட்டத்தின் கீழ், ரயில் தடத்தின் முக்கிய நினைவுச் சின்னமாக இருக்கும் புக்கிட் தீமா ரயில் நிலையம் மரபுடைமை நிலையமாக பராமரிக்கப்பட உள்ளது பற்றியும் தெரிவிக்கப்பட்டது.

தண்டவாளங்கள், பாலம் போன்றவையும் பாதுகாக்கப்பட உள்ளன.

அருகிலிருக்கும் முன்னைய ரயில்வே ஊழியர்கள் குடியிருப்பும் மேம்படுத்தப்படவுள்ளது. மரபுடைமைத் தோட்டம் அங்கு உருவாக்கப்படவுள்ளது.

எதிர்காலத்தில் உணவு, பானக் கடைகள் அங்கே இடம்பெறலாம்.

மரபுடைமைப் பாதுகாப்பு வழிகாட்டிகளின் கீழ் புக்கிட் தீமா ரயில் நிலையமும் ரயில்வே ஊழியர் குடியிருப்பும் மேம்படுத்தப்படும் என்று தேசிய பூங்காக் கழகமும் நகர மறுசீரமைப்பு ஆணையமும் தெரிவித்தன.

24 கி.மீ. நீளமுள்ள ரயில் வழித்தடம் வடக்கே உட்லண்ட்சிலிருந்து தெற்கே தஞ்சோங் பகார் வரை, சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடையில் முன்னர் செயல்பட்ட ரயில் தண்டவாள வழி நெடுக இந்த பசுமை வழித்தடம் அமைகிறது.

மத்திய பகுதியில் உள்ள நான்கு கிலோ மீட்டர் பாதையின் மேம்பாட்டுப் பணிகளும் ஏனைய பணிகளும் சென்ற ஆண்டு தொடங்கியது.

புக்கிட் தீமா ரயில் நிலையத்தின் மேம்பாடுகள் அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் ஆரம்பமாகும்.

நிலையத்தின் மரபுடைமையையும் கட்டடச் சிறப்பையும் எடுத்துக்காட்டும் வகையில் இரவு 7 மணிக்கும் 10 மணிக்கும் இடையே அப்பகுதியில் சிறப்பு விளக்குகள் ஒளிவீசும்.

அப்பகுதியின் வனவிலங்குகளுக்குத் தொல்லை ஏற்படாதிருக்க 10 மணிக்குப் பிறகு விளக்கொளி சிறிதாக்கப்படும் என்று நகர மறுசீரமைப்பு வாரியத்தின் கட்டடக்கலை வடிவமைப்பாளரான ஜோன் வான் தெரிவித்தார்.

பழைய கேடிஎம் ரயில் பாதையில் 1930களில் கட்டப்பட்ட இந்த நிலையம் 2011ஆம் ஆண்டில் அந்த ரயில் சேவை முடிவுக்கு வந்த பின்னர் பயன்படுத்தப்படவில்லை.

மலேசியாவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான நிலப் பரிமாற்ற உடன்பாட்டில் கீழ், அந்த ரயில் பாதையில் இருந்து பெரும்பாலான தண்டவாளங்களும் ரயில் தட உபகரணங்களும் அகற்றப்பட்டு விட்டன.

புக்கிட் தீமா ரயில் நிலையத்தைச் சுற்றி அகற்றப்படாமல் உள்ள தண்டவாளங்களும் இரும்புப் பாலமும் தற்போது பிரபலமான சுற்றுலா இடமாக உள்ளது. அங்கே சென்று படம் எடுப்பது பலரின் விருப்பப் பொழுதுபோக்கு.

ரயில் தடத்தில் தெற்குப் பகுதி தற்போது பொதுப் பயனீட்டுக் கழகத்தின் குழாய் அமைக்கும் பணிகளுக்காக மூடப்பட்டுள்ளன. இது அடுத்த ஆண்டு முழுமையாகத் திறக்கப்படும்.

சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடையில் முன்னர் செயல்பட்ட கேடிஎம் ரயில் சேவை கடந்த 2011ஆம் ஆண்டில் முடிவுக்கு வந்தது. அதன் பின்னர் அந்தத் தண்டவாளப் பாதையை பசுமைப் பாதையாக்க வேண்டும் என்று சுற்றுச்சூழல் பராமரிப்பு, இயற்கை ஆர்வலர்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தனர்.

மேலும் அப்பாதையை எவ்வாறு வடிவமைக்கலாம் என்பதற்கு பொதுமக்களிடம் கருத்துத் திரட்டப்பட்டது.

மக்களின் விருப்பங்களைக் கொண்டு அப்பகுதி பாராமரிக்கப்பட்டு மேம்படுத்தப்படுகிறது.

அதனோடு நாட்டின் மூன்று பெரிய பூங்காக்களை இணைக்கும் இந்தப் பசுமை வழித்தடமும் இணைந்து சிங்கப்பூரின் பசுமை வளத்தையும் அழகையும் மேலும் விரிவாக்கும்.

இயற்கை, மரபுடைமை சமூகத்தின் உறுப்பினர்கள் பசுமை வழித்தடத் திட்டத்தைப் பெரிதும் வரவேற்றுள்ளனர்.

அதேநேரத்தில், பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் மரபுடைமைச் சின்னமாகப் பராமரிக்கப்படும் இரும்புப் பாலத்தின் இரு புறமும் வேலி அமைக்க பரிந்துரைக்கப்பட்டிருப்பது குறித்து சிலர் குரல் எழுப்பியுள்ளனர்.

11 கிலோ மீட்டர் பசுமைத் தடத்தின் 4.2 கிலோ மீட்டர் பகுதி தற்போது பொதுமக்கள் பயன்பாட்டுக்குத் திறக்கப்பட்டுள்ளது.

இந்த ரயில் வழித்தடம் 2021ல் முழுமையாகத் தயாராகிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பசுமை வழித்தடத் திட்டம் சிங்கப்பூர்வாசிகளிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. விடுமுறை நாட்களில் பொழுதுபோக்கவும், குடும்பத்தினர் நண்பர்களுடன் ஒன்றுசேர்ந்து நடை, உடற்பயிற்சி போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடவும் இந்த வசதி மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றார் திருவாட்டி கோவிந்த்.

சிங்கப்பூரில் இயற்கை குறித்து மக்களைப் பரவசமடையச் செய்யும் எந்தத் திட்டமும் சிறப்பானதுதான். இந்தப் பசுமைத் தடத்தில் வன விலங்குகளுக்கும் இடமிருந்தால் நன்று எனக்கூறினார் நேச்சர் சொசைட்டி உறுப்பினரான 18 வயது டுட்டா குப்தா.

“கட்டடங்கள் நிறைந்த இந்நக ரில் பசுமைச் சூழலுக்கும் இயற்கை வளத்துக்கும் இடமளிக்கப்படுவது வரவேற்கத் தக்கது. இயற்கையான காற்றைச் சுவாசிக்கவும், மன அமைதி பெறவும் இத்தகைய இடங்கள் உதவுகின்றன,” என்றார் 21 வயது மாணவி குமாரி பானு ராஜு.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!