ரியாலுக்கு நல்ல வாய்ப்பு

மட்ரிட்: ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக்கின் நடப்பு வெற்றியாளரான ஸ்பெயினின் ரியால் மட்ரிட் காற் பந்துக் குழுவிற்கு கிண்ணத்தைத் தக்கவைத்துக்கொள்ள நல்ல வாய்ப்பு கிடைத்திருக்கிறது. தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக ரியால் குழு இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. அட்லெட்டிகோ மட்ரிட் குழு விற்கு எதிரான அரையிறுதிச் சுற்றின் இரண்டாவது ஆட்டத்தில் 2-=1 என்ற கோல் கணக்கில் ரியால் குழு தோல்வி கண்டது. இருந்தபோதும் முதல் அரை இறுதியில் 3-=0 என வென்றிருந்த தால் ரியால் குழு 4=2 என ஒட்டுமொத்த கோல் அடிப்படையில் முன்னிலை பெற்று, இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது. முதல் 16 நிமிடங்களுக்குள் சவூல், கிரீஸ்மன் ஆகியோர் மூலம் அட்லெட்டிகோ குழுவிற்கு இரு கோல்கள் கிட்டின. இன்னும் ஒரு கோலடித்தால் ஆட்டம் சமனுக்கு வந்துவிடும் என்ற நிலையில் அட்லெட்டிகோ குழுவிற்கு அதிர்ச்சி அளித்தார் ரியால் ஆட்டக்காரர் இஸ்கோ. நட்சத்திர வீரர் டோனி குரூஸ் தம்மிடம் வந்த பந்தை கோலாக்க முயன்றார். ஆனால், அந்த முயற் சியை முறியடித்தார் அட்லெட்டிகோ கோல்காப்பாளர் ஜான் ஒப்லாக்.

ரியால் மட்ரிட் குழுவின் டோனி குரூஸ் (படத்தில் இல்லை) வலையை நோக்கி உதைத்த பந்தை அட்லெட்டிகோ மட்ரிட் கோல்காப்பாளர் ஜான் ஒப்லாக் தடுத்தபோதும் மீண்டெழும்பிய பந்தை இன்னொரு ரியால் வீரர் இஸ்கோ (வலது) கோலாக்கியதால் ஏமாற்றத்தில் அட்லெட்டிகோ வீரர்கள். படம்: ஏஎஃப்பி