வினேஷ் போகத் தங்கம் வெல்ல முனைப்பு

நூர்சுல்தான்: உலக மல்யுத்தப் போட்டியில் பெண்களுக்கான எதேச்சை பாணி 53 கிலோ உடல் எடைப்பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றார் இந்திய வீராங்கனை வினேஷ் போகத்.

“வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியின்போது எனது உத்தியில் சில மாற்றங்கள் செய்யுமாறு பயிற்றுவிப்பாளர் எனக்கு ஆலோசனை வழங்கினர். ஆனால் களத்தில் போட்டி வேறுவிதமாக இருப்பதை உணர்ந்து அதற்குத் தகுந்தபடி எனது வியூகத்தை மாற்றினேன். 

“எனக்கு எதிராகக் களமிறங்கிய வீராங்கனை எனது காலைப் பிடித்து வீழ்த்த முயன்றார். அதனை நான் வலுவான தற்காப்பு உத்தியின் மூலம் முறியடித்தேன். 

“இதில் அவர் அதிக சக்தியைப் பயன்படுத்தியதால் சோர்வடைந்தார். அது எனக்குச் சாதகமாக அமைந்தது. ஒலிம்பிக் போட்டிக்கு முதல் தகுதிச் சுற்றாக அமைந்து இருக்கும் இந்த உலக மல்யுத்தப் போட்டிக்கு எல்லா வீராங்கனைகளும் நன்றாக தயாராகி இருந்தனர். இந்த மாதிரியான நிலையில் நான் பதக்கம் வென்று இருப்பது பெரிய சாதனையாகும். 

“இந்த வெற்றி எனக்கு நிம்மதி அளிக்கிறது. ஏனெனில் இதன்மூலம் ஒலிம்பிக் போட்டிக்கு தயாராக நிறைய நேரம் கிடைத்து இருக்கிறது. தற்போது வெண்கலப் பதக்கம் வென்று இருக்கிறேன். 

“இதனை தங்கப் 

பதக்கமாக மாற்ற வேண்டும் என்று விரும்புகிறேன். அத்துடன் ஒலிம்பிக் போட்டியிலும் தங்கப் பதக்கம் வெல்ல ஆர்வமாக உள்ளேன்.

எனது சிறந்த செயல்பாடு இன்னும் வெளிப்படவில்லை. ஒலிம்பிக் போட்டியில் எனது சிறப்பான செயல்பாட்டை நீங்கள் பார்ப்பீர்கள் என்று நினைக்கிறேன். அது உச்சபட்ச செயல்பாடாக இருக்கும்,” என்று வினேஷ் போகத் தெரிவித்தார்.

2016ஆம் ஆண்டு ரியோ ஒலிம்பிக் போட்டியின்போது வினேஷ் போகத்துக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.