சுடச் சுடச் செய்திகள்

இன்டிடி: உலகின் தலைசிறந்த குழுக்களில் ஒன்றாக நைஜீரியா உருமாற முடியும்

உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டிகளில் ஆப்பிரிக்க குழுக்களால் இன்னும் பெரியளவில் தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என நைஜீரியக் குழுவின் மத்திய திடல் ஆட்டக்காரர் வில்ஃப்ரெட் இன்டிடி கருத்துரைத்துள்ளார்.

உலகக் கிண்ணப் போட்டியில் இறுதிச் சுற்று வரை செல்ல ஆப்பிரிக்க வீரர்கள் தங்களது திறன் மீது முழு நம்பிக்கை கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் குழுவாக ஒன்று சேர்ந்து விளையாட வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்துகிறார்.

கெமரூன் (1990), செனகல் (2002), கானா (2010) ஆகிய குழுக்கள் உலகக் கிண்ணப் போட்டியில் காலிறுதிச் சுற்று வரை சென்றிருந்தன.

“எங்களது ஆற்றல் மீது நம்பிக்கை வைத்து சரியான மனப்போக்குடன் விளையாடினால், ஒவ்வோர் ஆட்டத்திலும் முடிந்தவரை வெற்றி பெற முடியும்,” என்றார் இங்கிலிஷ் பிரிமியர் லீக்கில் லெஸ்டர் சிட்டி குழுவுக்காக விளையாடி வரும் இன்டிடி, 22.

சிங்கப்பூர் வந்துள்ள பிரேசில், நைஜீரிய குழுக்கள் தேசிய விளையாட்டரங்கில் இன்றிரவு நடைபெறவிருக்கும் நட்புமுறை ஆட்டம் ஒன்றில் பொருதுகின்றன. அதை முன்னிட்டு ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழுக்கு நேற்று பேட்டியளித்த போது மேற்கண்ட கருத்தை இன்டிடி முன்வைத்தார்.

ஐரோப்பாவின் காற்பந்து லீக் ஆட்டங்களில் ஆப்பிரிக்க வீரர்கள் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றனர். கடந்த ஆண்டு ரஷ்யாவில் நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டியில் எகிப்து, நைஜீரியா, மொரோக்கோ, துனீசியா, செனகல் ஆகிய தேசிய காற்பந்துக் குழுக்களுக்காக விளையாடிய 115 ஆப்பிரிக்க வீரர்களில் 70 விழுக்காட்டினருக்கும் அதிகமானோர் ஐரோப்பாவின் பிரசித்திபெற்ற குழுக்களுக்காக விளையாடி வந்தனர்.

அதே வேளையில், உலகக் கிண்ணப் போட்டியின் காலிறுதிச் சுற்றுக்கு முந்தைய சுற்றுக்கு எந்தவொரு ஆப்பிரிக்க குழுவும் தகுதி பெறாதது 1982ஆம் ஆண்டிலிருந்து இதுவே முதன்முறை.

2017ஆம் ஆண்டில் நடைபெற்ற அர்ஜெண்டினா உடனான நட்புமுறை ஆட்டம் ஒன்றில் 4-2 எனும் கோல் கணக்கில் நைஜீரியா வென்றதைச் சுட்டிய இன்டிடி, உலகின் தலைசிறந்த குழுக்களுக்கும் ஆப்பிரிக்க குழுக்களுக்கும் இடையிலான இடைவெளி குறைந்து வருவதாகக் கூறினார். இளமையும் அனுபவமும் இணைந்தால் நைஜீரியாவின் வளர்ச்சியை எவராலும் தடுக்க இயலாது என அவர் சூளுரைத்தார்.