ஐபிஎல் கிரிக்கெட்: தொடக்கம் படுமோசம், ஆனாலும் வெற்றி சென்னைவசம்

மும்பை அணியை வீழ்த்தி பட்டியலின் முதலிடத்திற்கு முன்னேறியது.

துபாய்: தொடக்கத்தில் படுமோசமாகப் பந்தடித்தும், மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி, 12 புள்ளிகளுடன் பட்டியலின் முதலிடத்திற்கு முன்னேறியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.


கொவிட்-19 பரவல் காரணமாக பாதியில் நிறுத்தப்பட்ட ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபுச் சிற்றரசுகளில் நேற்று (19-09-2021) மீண்டும் தொடங்கியது.


துபாயில் நடந்த முதல் ஆட்டத்தில் மகேந்திர சிங் டோனி தலைமையிலான சென்னை அணி, மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்த்தாடியது.


முழங்கால் பிரச்சினை காரணமாக முதல் போட்டியில் இருந்து ரோகித் சர்மா விலகிய நிலையில், வெஸ்ட் இண்டீஸ் வீரர் கைரன் பொல்லார்ட் மும்பை அணியின் தலைவராகச் செயல்பட்டார்.


பூவா தலையாவில் வென்ற டோனி, முதலில் தமது அணி பந்தடிக்கும் என்று அறிவித்தார்.


அதனைத் தொடர்ந்து, ஃபிரன்சுவா டு பிளஸ்ஸியும் ருதுராஜ் கெய்க்வாடும் சென்னை அணியின் தொடக்க வீரர்களாகக் களமிறங்கினர்.


மும்பை அணியின் நியூசிலாந்து ஆட்டக்காரர் டிரென்ட் போல்ட் பந்துவீச்சில் டு பிளஸ்ஸி விக்கெட்டைப் பறிகொடுத்து, ஓட்டக் கணக்கைத் தொடங்கமலேயே வெளியேறி, அதிர்ச்சி அளித்தார்.


அடுத்து களம் கண்ட மொயீன் அலியும் ஓட்டம் எடுக்காமலேயே, இன்னொரு நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஆடம் மில்ன் பந்துவீச்சில் வீழ்ந்தார்.


அதன்பின் வந்த அம்பதி ராயுடுவின் முழங்கையை மில்ன் வீசிய பந்து பதம்பார்க்க, ஓர் ஓட்டம்கூட எடுக்காமல் திடலைவிட்டு நடையைக் கட்டினார் ராயுடு.


இப்படி மூவர் பூஜ்ஜியத்தில் வெளியேற, ‘குட்டி தல’ என அழைக்கப்படும் சுரேஷ் ரெய்னா களமிறங்கினார். ஒரே ஒரு பவுண்டரியுடன் மனநிறைவு கண்ட ரெய்னாவும் போல்ட்டிடம் விக்கெட்டை இழக்க, ஒருகட்டத்தில் மூன்று விக்கெட்டுகளுக்கு ஏழு ஓட்டங்கள் என்று சென்னை அணியின் நிலை பரிதாபமாக இருந்தது.


அடுத்து வந்த ‘தல’ டோனியும் மூன்று ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.


ஆனாலும், அனுபவம் குறைவுதான் என்றபோதும், ரவீந்திர ஜடேஜா ஒருமுனையில் விக்கெட் விழாமல் காக்க, மறுமுனையில் நம்பிக்கை அளிக்கும் விதத்தில் பந்தடித்தார் ருதுராஜ். இருவரும் இணைந்து ஐந்தாவது விக்கெட்டிற்கு 81 ஓட்டங்களைச் சேர்த்தனர்.


ஜடேஜா 16 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, பின்னர்க் களம்கண்ட டுவைன் பிராவோ, எட்டுப் பந்துகளில் மூன்று சிக்சருடன் 23 ஓட்டங்களை விளாசினார்.


இறுதிவரை களத்தில் நின்ற ருதுராஜ் 58 பந்துகளை எதிர்கொண்டு ஒன்பது பவுண்டரி, நான்கு சிக்சருடன் 88 ஓட்டங்களைக் குவித்தார்.டி20 போட்டிகளில் இதுவே இவரது அதிகபட்ச ஓட்டம்.


இதனால், ஒருகட்டத்தில் நூறு ஓட்டங்களை எட்டுமா என்ற ஐயத்தை ஏற்படுத்திய சென்னை அணி, 20 ஓவர் முடிவில் ஆறு விக்கெட் இழப்பிற்கு 156 ஓட்டங்களை எடுத்தது.


இலக்கை விரட்டிய மும்பை அணியினர், சென்னை வீரர்களின் பந்துகளை எதிர்கொள்ளச் சிரமப்பட்டனர். குவின்டன் டி காக் (17), அன்மோல்பிரீத் சிங் (16) ஆகிய தொடக்க வீரர்கள் இருவரையும் வெளியேற்றினார் வேகப் பந்துவீச்சாளர் தீபக் சாகர்.


டுவைன் பிராவோ மூன்று விக்கெட்டுகளையும் ஜோஷ் ஹேசல்வுட், ஷார்துல் தாக்குர் ஆகியோர் ஆளுக்கு ஒரு விக்கெட்டையும் வீழ்த்த, மும்பை அணி 20 ஓவர்களில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 136 ஓட்டங்களை மட்டும் எடுத்து, 20 ஓட்ட வித்தியாசத்தில் தோல்வி கண்டது.


அதிகபட்சமாக, சௌரப் திவாரி 40 பந்துகளில் 50 ஓட்டங்களை எடுத்து, இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.


எதிர்பார்த்தபடியே, ருதுராஜ் ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டார்.


போட்டிக்குப்பின் பேசிய டோனி, “30 ஓட்டங்களுக்கு நான்கு விக்கெட்டுகள் என்றிருந்த நிலையில், மதிக்கத்தக்க இலக்கை நிர்ணயிக்க விரும்பினோம். ஆனால், ருதுராஜும் பிராவோவும் நாங்கள் எதிர்பார்த்ததற்கும் மேலான ஓட்ட எண்ணிக்கையை எட்ட உதவினர்,” என்றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!