தலைசிறந்த கல்வியாளர், கணினித் தமிழ் வளர்த்தவர் பேராசிரியர் மு.ஆனந்தக்கிருஷ்ணன் காலமானார்

கணினியிலும் இணையத்திலும் தமிழைப் பயன்படுத்துவதில் பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்தவர்களில் முக்கியமானவரான பேராசிரியர் மு.ஆனந்தக்கிருஷ்ணன் உடல் நலக்குறைவால் இன்று (மே 29) சென்னையில் காலமானார். அவருக்கு வயது 92.

தமிழக அரசின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் மின் ஆளுமை துறையின் ஆலோசகராகவும் இருந்த இவர், தமிழ்த் தொழில்நுட்ப வளர்ச்சியில் பல்வேறு மாறுபட்ட முயற்சிகளையும் அணுகுமுறைகளையும் நெறிப்படுத்தி ஒன்றிணைப்பதில் மிகப் பெரிய பங்கினை கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக ஆற்றி வந்தவர்.

கணினியிலும் இணையத்திலும் தமிழ் மொழியை பயன்படுத்துவதற்கான தொடக்க கால தொழில்நுட்பங்களை உருவாக்கியதில் ஆகச் சிறந்த பங்களிப்பு செய்தவர் முனைவர் ஆனந்தக்கிருஷ்ணன்.

தமிழ் இணைய மாநாடுகள், உத்தமம் அமைப்புகள் ஆகியவற்றுக்கான முன்னோடியாகவும் திகழ்ந்தவர். உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றத்தின் (உத்தமம்) நிறுவனத் தலைவரான இவர், தொழில்நுட்ப மேம்பாட்டுக்கு ஏற்ப தமிழ்ப் பயன்பாட்டை வளர்ப்பதிலும் மேம்படுத்துவதிலும் மேற்கொண்ட பணிகள் அளப்பரியன.

"பேராசிரியர் ஆனந்தக்கிருஷ்ணன், தமிழ் இணைய உலகத்தில் சிங்கப்பூருக்கு முன்னணி இடத்தை ஏற்படுத்திக்கொடுத்தவர்களுள் மிக முக்கியமானவர். உலகளாவிய தமிழ் இணைய வளர்ச்சிக்கு ஆணி வேராக இருந்தவர். வயதில் மிக மூத்தவராக இருந்தபோதும் மிகப் புதிய முயற்சிகளைப் புரிந்துகொண்டவர். எளிதில் நிரப்ப முடியாத இடத்தை விட்டுச் சென்றிருக்கின்றார்," என்று தமிழ் முரசிடம் கூறினார் கொள்கை ஆய்­வுக் கழ­கத்­தின் சிறப்பு ஆய்வு ஆலோ­ச­க­ரான திரு அருண் மகிழ்­நன், 75.

இவரது தலைமையின் கீழ் தமிழ் 99 விசைமுக அமைப்புமுறையின் தரநிலை வரையறுக்கப்பட்டது. இதேபோல், தமிழ்க் குறியீட்டுத் தரங்களின் எதிர்காலம் குறித்த பல்வேறு கருத்துகளைக் கொண்டிருந்தவர்களை ஒன்றுகூட்டி, ஒருமைப்படுத்தப்பட்ட குறியீட்டு வடிவத்தை ஏற்கச் செய்ததும் பேராசிரியர் அவர்களே.

“பேராசிரியர் ஆனந்தக்கிருஷ்ணன், உலகெங்கிலும் உள்ள பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் எவ்வாறு ஒன்றிணைந்து செயலாற்றலாம் என்பதற்கான முன்மாதிரியான தலைமைத்துவத்தை வெளிப்படுத்தினார். அவர் தமது தனிப்பட்ட விருப்பங்களை ஒதுக்கி வைத்து, வெவ்வேறு குழுக்களைச் சேர்ந்தவர்கள் ஒன்றாக அமர்ந்து, சிக்கல்களுக்குத் தீர்வுகளைக் காண வழிவகுத்தார். அவரது மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு,” என்று செல்லினத்தின் நிறுவனரும் தகவல் தொழில்நுட்பத்துறை அறிஞருமான திரு முத்து நெடுமாறன் கூறினார்.

கான்பூர் இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் முன்னாள் தலைவரும் அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தருமான முனைவர் ஆனந்தக்கிருஷ்ணன், பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை எளிதாக்கிய ஒற்றைச் சாளர முறை நடைமுறைக்கும் முக்கிய காரணமாக இருந்தார்.

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியில் பிறந்த முனைவர் ஆனந்தக்கிருஷ்ணன், கிண்டி பொறியியல் கல்லூரியில் கட்டட பொறியியல் பட்டம் பெற்று, அமெரிக்கா மின்னசோட்டா பல்கலைக்கழகத்தில் முதுநிலைப் பொறியியல், முனைவர் பட்டங்களைப் பெற்றார்.

இந்தியா திரும்பிய அவர், புதுடெல்லியில் உள்ள மத்திய சாலை ஆராய்ச்சிக் கழகத்தின் முதுநிலை அறிவியல் அலுவலராகவும் கான்பூர் ஐஐடியில் பேராசிரியராகவும் பணியாற்றினார்.

தொடர்ந்து, அமெரிக்காவின் வாஷிங்டனில் இந்தியத் தூதரகத்தில் அறிவியல் ஆலோசகர், ஐக்கிய நாடுகள் சபைக்கான அறிவியல், தொழில்நுட்ப மேம்பாட்டு மைய துணை இயக்குநர், ஐ.நா. ஆலோசனை குழு செயலாளர் என உயர் பதவிகளை வகித்து தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்த்தார்.

பின்னர், அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி வகித்த முனைவர் ஆனந்தக்கிருஷ்ணன், நான்கு நூல்களையும் 90க்கும் மேற்பட்ட கட்டுரைகளையும் எழுதியள்ளார். 2002ஆம் ஆண்டில் இந்திய அரசின் பத்மஸ்ரீ விருது அவருக்கு வழங்கப்பட்டது.

கடந்த சில நாட்களாக கொரோனா கிருமித்தொற்றால் முனைவர் ஆனந்தக்கிருஷ்ணனுக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டது. தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் காலமானார்.

தமிழகத்தில் தலைசிறந்த கல்வியாளர்களில் ஒருவரான பேராசிரியர் ஆனந்தக்கிருஷ்ணன் மறைவு தமிழர்களுக்கு மிகப் பெரும் பேரிழப்பாகும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!