குரங்கம்மை: நைஜீரிய ஆடவருடன் தொடர்பில் இருந்தவர்களுக்குப் பாதிப்பில்லை

குரங்கம்மை தொற்றிய நைஜீரிய ஆடவர் ஒருவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த 23 தனிநபர்கள் நலமாக இருப்பதாகவும், அந்நோய் தொற்றியதற்கான அறிகுறிகள் அவர்களிடத்தில் தென்படவில்லை என்றும் சுகாதார அமைச்சின் பேச்சாளர் தெரிவித்திருக்கிறார்.

அந்த ஆடவருடன் தொடர்பில் இருந்த நாள் முதல் 21 நாட்களுக்கு அவர்கள் தனிமைப்படுத்தப்படுவர். இதுவே, நோய்த்தொற்றுக்கான கால வரம்பு. இந்நோய்க்கிருமி தொற்றியுள்ளவர்களிடம் ஆறு நாட்கள் முதல் பதினாறு நாட்கள் வரை அறிகுறிகள் தென்படும். அந்த 23 பேரில் ஐந்து பேர் சிங்கப்பூரர்கள். அவர்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டனர்.  17 வெளிநாட்டவர்கள், குறிப்பிட்ட ஒரு வளாகத்தில் தனித்தனியாகத் தங்க வைக்கப்பட்டதாக அமைச்சின் பேச்சாளர் கூறினார். எஞ்சியுள்ள ஒரு வெளிநாட்டவர், இந்தக் கண்டுபிடிப்புக்கு முன்னதாகவே சிங்கப்பூரைவிட்டு வெளியேறியிருக்கிறார். அவரும் நலமாக இருக்கிறார்.