சுடச் சுடச் செய்திகள்

தெரேசா மே: கடந்து வந்த பாதை

பிரிட்டிஷ் பிரதமர் தெரேசா மேயின் பதவிக்காலம் மிகச் சொற்பமாக இருந்தாலும் சலசலப்பு மிக்கதாகவே இருந்தது. அனைவரையும் திருப்திப்படுத்த முயன்று கடைசியில் எவரையும் சந்தோஷப்படுத்த முடியாத நிலையில் திருமதி மேயின் ‘பிரெக்சிட்’ ஒப்பந்தம் தோற்றது; அவரும் தோற்றார். மூன்று ஆண்டுகளாகப் பிரதமராகப் பணியாற்றிய திருமதி மேயின் மனோதிடம், மீள்திறன் ஆகியவற்றைப் பலர் பாராட்டியுள்ளனர். ஆயினும், அவர் பல நேரங்களில் பிடிவாதமாக இருந்ததாலும் சகாக்களுடன் சரியான முறையில் தொடர்பு கொள்ளாததாலும் பலரின் கோபத்திற்கு இலக்கானார்.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற பிரிட்டிஷ் மக்கள் எதிர்பாராதவிதமாக வாக்களித்ததை அடுத்து திருமதி மேக்கு முன்னர் பதவியில் இருந்த பிரதமர் டேவிட் கெமரன் பதவி விலகினார். அப்போது கன்சர்வேட்டிவ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களால் திருமதி மே அடுத்தப் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். சமூக அநீதிகளுக்கு எதிராகப் போராடப்போவதாக தமது பதவியேற்பு உரையில் கூறிய திருமதி மே, 2016ஆம் ஜூலை மாதம்  பிரதமராகப் பணியாற்றத் தொடங்கினார்.

பிரிட்டனின் முதல் பெண் பிரதமர் மார்கரெட் தாச்சரைப் போல் அந்நாட்டின் இரண்டாவது பெண் பிரதமரான தெரேசா மே மற்றொரு இரும்புப் பெண்மணியாக இருப்பார் என்ற பிம்பத்தைப் பல்வேறு ஊடகங்கள் ஆரம்பத்தில் உண்டாக்கின. பதவியேற்ற பிறகு அவர் முதன்முதலாகச் சென்ற நாடு இந்தியா. ஆனால் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் அவரால் திருப்திகரமான ஒப்பந்தத்தில் இணைய முடியவில்லை. அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்புடன் அணுக்கமான உறவைப் பேண திருமதி மே முயன்றபோதும் அதனால் பிரிட்டன் குறிப்பிடத்தக்க எந்த வர்த்தக ஆதாயங்களையும் அடையவில்லை.

2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் அறிவிக்கப்பட்ட பொதுத்தேர்தலில் திருமதி மே நாடாளுமன்றத்தின் பெரும்பான்மையை இழந்தார். அதன் பின்னர் அவரது அரசியல் எதிர்காலத்தில் இருள் சூழத் தொடங்கியது. திருமதி மேயின் ‘பிரெக்சிட்’ ஒப்பந்தம் மூன்று முறை நிராகரிக்கப்பட்டது. திருத்தத்திற்கு மேல் திருத்தம்; திருப்திதான் யாருக்கும் ஏற்படவில்லை. எந்த ஒப்பந்தமுமின்றி பிரிட்டன் ஒன்றியத்திலிருந்து வெளியேறவேண்டும் என்று நினைக்கும் ஒருசாராரும் பிரிட்டன் ஒன்றியத்தைவிட்டு விலகவே கூடாது என ஆசைப்படும் மற்றொரு சாராரும் நாடாளுமன்றத்தில் முட்டி மோதிக் கொண்டிருந்தனர். யாரையும் திருப்திப்படுத்த முடியாத திரிசங்கு நிலையில் திருமதி மே தவித்தார். அவரது அமைச்சரவையிலிருந்து விலகிய பலரில் அமைச்சர் ஏண்ட்ரியா லிசோமின் பதவி விலகல் ஆக அண்மையில் புதன்கிழமை நடந்தது.

கண்ணீர் மல்க தமது பதவி விலகலை இன்று அறிவித்த திருமதி மே, தாம் பிரிட்டனின் இரண்டாவது பெண் பிரதமராக இருந்தபோதும் கடைசி பெண் பிரதமராக இருக்கப்போவதில்லை என்று கூறினார். மார்கரெட் தாட்சரும் திருமதி மேயும் வெவ்வேறு தலைமுறைகளைச் சேர்ந்தவர்கள். 1980களில் இருந்த சமூகத்தில் பெண்கள் உயர்தர வர்க்கத்தில் மென்மையாக நடத்தப்பட்டனர். திருமதி தாட்சர் பெண்ணாகவும் பிரதமராகவும் பணியாற்றியது பலருக்கும் புதிய அனுபவமாக இருந்தது; அவரைக் கடுமையாக நடத்த ஆண் அரசியல்வாதிகள் அப்போது தயங்கினர். தெரேசா மே இருக்கும் இன்றைய காலமோ முற்றிலும் வேறு. பெண் பிரதமராகத் தனித்து நிற்பதற்கு புதிய பண்புகள் தேவைப்படலாம். அவை என்ன என்பதை எடுத்துக்காட்ட வேண்டி பொறுப்பு பிரிட்டனின் அடுத்த பெண் பிரதமர் மீது விழவுள்ளது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon